பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக கைதியாக இருந்த சசிகலா இன்று (ஜனவரி 27) அதிகாரபூர்வமாக விடுதலை செய்யப்பட்டார்.
இன்று காலை 11 மணிக்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை சிறைத்துறை அதிகாரிகள் சந்தித்தனர். அப்போது அவரிடம் சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கான விடுதலை பத்திரத்தை கொடுத்து அதில் கையெழுத்து பெற்றனர்.
சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அப்போது உடன் இருந்தார். டிடிவி தினகரனும் மருத்துவமனையில் தான் இருந்தார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு விக்டோரியா மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்..
சின்னம்மா விடுதலை ஆகிவிட்டார் என்ற மகிழ்ச்சியான செய்தியை கழகத் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிகாரப்பூர்வமாக சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை சிறப்பாக வரவேற்க காத்திருக்கிறோம். தற்போது மருத்துவர்களின் அறிவுரையின்படி அவர் இங்கே ஓய்வு எடுப்பதா, சென்னை திரும்புவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று குறிப்பிட்டார் தினகரன்.
சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் இதே நாளில் திறக்கப்படுவது பற்றி கேட்டபோது, “சின்னம்மா விடுதலையை அவர்களும் கொண்டாடுகிறார்கள் என்று பாசிட்டிவ்வாகவே நான் பார்க்கிறேன்”என்று கூறினார் தினகரன்.
அப்போது செய்தியாளர்கள்…,”சசிகலா விடுதலையான நிலையில் அதிமுகவும் அமமுகவும் இணையுமா?” என்று கேட்டனர்.
அதற்கு தினகரன்…”சின்னம்மா விடுதலையான தில் நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறோம். இப்போது அரசியல் பேச வேண்டாம்”என்றார்.
ஆனால் மீண்டும் மீண்டும் இந்த கேள்விகள் எழவே….”நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கியதே.. அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுத்து உண்மையான அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதற்குத்தான். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார் தினகரன்.
இதேநேரம் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டுவிட்டார். அவர் விக்டோரியா மருத்துவமனைக்கு 21 ஆம் தேதி மாற்றப்பட்டிருந்தார். அன்றே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மருத்துவ நடைமுறைகளின்படி சசிகலா அட்மிட் செய்யப்பட்ட நாளில் இருந்து பத்தாவது நாள் கொரோனா அறிகுறி முழுதும் அற்றவராகவும்,அன்றைய நிலவரப்படி குறைந்தது மூன்று நாட்களுக்கு மருத்துவ ரீதியாக வெளியில் இருந்து ஆக்ஸிஜன் தேவையற்றவராகவும் இருந்தால் அதாவது முழு ஆக்ஸிஜனையும் சுவாசத்தின் மூலமாகவே பெறுபவராக இருந்தால் விடுதலை செய்யப்படுவார்” என்று தெரிவித்திருக்கிறது.
**-வேந்தன்**
�,”