ரஜினிக்கு எதிரான மனுக்கள் வாபஸ்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

politics

ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இதனையடுத்து ரஜினி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திவிக தென்சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, கோவை மாவட்டத் தலைவர் நேருதாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுதாக்கல் செய்தனர்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று (ஜனவரி 24) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், “புகார் அளித்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்தான் மேல் நடவடிக்கைக்காக அணுக வேண்டும் என்று விதி உள்ளது. இது முழுமையாக பின்பற்றப்படாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தந்தை பெரியார் மிகப்பெரிய தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ரஜினி, அவர் படித்ததில் இருந்து இவ்வாறு கூறியுள்ளார். எனினும், சட்ட நடைமுறைகளை பயன்படுத்திதான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, ‘ஆய்வாளரிடம் புகார் அளித்தால் அவர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறார் என்பதை 15 நாட்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதற்குள் ஒரு முடிவு எடுங்கள் என்று யாரையும் நிர்பந்திக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தார். மேலும், இன்னும் ஒரு வாரத்திற்குப் பிறகு நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று மனுதாரர்கள் தரப்பிடம் கூறினார். ரஜினிக்கு எதிரான மனுக்களை வாபஸ் பெற நீதிபதி அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் துரை.அருண், “வழக்கு விசாரணையின்போது நீதிபதி, ‘பெரியார் மிகப்பெரிய தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தற்போது நடந்துவருவது திராவிட இயக்கத்தின் ஆட்சிதான். அமைச்சர்களும் பெரியாருக்கு ஆதரவாகத்தான் கருத்து தெரிவித்துள்ளனர். காவல் துறைக்கு 15 நாட்கள் அவகாசம் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பலாம். இல்லையெனில் நீங்கள் நீதிமன்றத்தை அணுகுங்கள்’ எனத் தெரிவித்தார்.

அதற்கு எங்கள் தரப்பில், ‘ரஜினி பேசியது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்’ என்று தெரிவித்தோம். அரசு தரப்பு வழக்கறிஞரும் எங்களுடைய கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்டார். 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்தான் மேல் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று நீதிபதி கூறியதால் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டோம். 15 நாட்கள் அவகாசம் முடிய இன்னும் 7 நாட்கள்தான் உள்ளது. ஆகவே, மீண்டும் நீதிமன்றத்தை அணுகி ரஜினிக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” எனத் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *