காங்கிரசுக்கு பணியாற்றும் பிரசாந்த் கிஷோர்: 4 மணி நேர ஆலோசனை!

politics

தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நேற்று ஏப்ரல் 16ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நான்கு மணிநேர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
கிஷோர் விரைவில் காங்கிரசில் சேருவார் என்றும், 2024 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அவர் காங்கிரஸ் தலைமையுடன் விவாதித்துள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 10, ஜன்பத் இல்லத்தில் நடந்த நான்கு மணி நேர கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரோடு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்,

இந்த கூட்டம் குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது,

“எந்த எதிர்பார்ப்புமின்றி காங்கிரஸில் சேரத் தயாராக இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். அதேநேரம் சில நிபந்தனைகளையும் காங்கிரஸ் தலைமைக்கு அவர் வைத்துள்ளார். அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை” என்கிறார்கள். ‌‌‌‌‌‌‌

பிரசாந்த் கிஷோரின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால்,

“2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வியூகம் பற்றி விரிவான விளக்கத்தை பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையிடம் முன் வைத்தார். இதற்கு விரிவான விவாதம் தேவை. அதற்காக காங்கிரஸ் தலைவர் ஒரு குழுவை அமைப்பார். அந்த குழு ஒரு வாரத்தில் இறுதி முடிவுக்கான அறிக்கை தாக்கல் செய்யும்” என்றார் வேணுகோபால்.

கிஷோர் கட்சியில் சேருவாரா அல்லது அதன் வியூகவாதியாக மட்டுமே இருப்பாரா என்ற கேள்விக்கு, ஒரு வாரத்தில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார்.

2024 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 365-370 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தவும், இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் தனது அடித்தளத்தை வலுப்படுத்தவும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை தெரிவித்துள்ளார் ‌‌
மேலும், “காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் சில மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டியிடலாம். மக்களவை தேர்தலுக்கு முந்தைய தேர்தல்களில் முதலிடத்திலோ அல்லது இரண்டாவது இடத்திலோ தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிஷோர் பரிந்துரைத்ததாக தெரிகிறது.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, உட்கட்சி அளவிலும் அதிருப்தியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கான பணியை ஏற்க முன்வந்துள்ளது, தேசிய அளவிலான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *