மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

அன்புமணிக்கு முல்லை வேந்தன் ஆதரவா?

அன்புமணிக்கு முல்லை வேந்தன் ஆதரவா?

திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.

வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக சார்பாக செந்தில்குமாரும், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் தற்போதைய எம்.பி அன்புமணி ராமதாஸும், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் களமிறங்கியுள்ளனர்.

மீண்டும் எம்.பி.யாகிவிட வேண்டும் என்று தருமபுரி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் அன்புமணி ராமதாஸ், திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை அவரது பண்ணை வீட்டில் நேற்று (ஏப்ரல் 14) சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆதரவு கோரியுள்ளார். பதிலுக்கு முல்லை வேந்தனும் பொன்னாடை போர்த்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக செய்தித் தொடர்பாளர் க. பாலு தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுகவின் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் அவர்கள் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவு. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாமக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என வாழ்த்து தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2014 தேர்தல் தோல்விக்குக் காரணம் காட்டி திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முல்லை வேந்தன், அதிருப்தி காரணமாக தேமுதிகவில் இணைந்தார். கலைஞர் மறைவுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தவருக்கு, கோவை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு சிலகாலம் சுறுசுறுப்பாகப் பணியாற்றியவர், தற்போது தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்குக்கூட செல்லாமல் தனது பண்ணை வீட்டிலிருந்து வந்தார்.

இதுதொடர்பாக நாம் கடந்த மார்ச் 23ஆம் தேதி, ஸ்டாலின் பிரச்சாரம்: புறக்கணித்த முல்லை வேந்தன் - தர்மபுரி சலசலப்பு! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியில், “சில வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார் முல்லை. ‘உங்களை பார்த்து ஆசி வாங்கிட்டு சீட் கேட்டு பணம் கட்டலாம்னு வந்தேன்’ என்று முல்லை வேந்தன் சொன்னதும், எடுத்த எடுப்பிலேயே...‘நீங்க உறுப்பினர்தானே, போயிட்டு வேலுவை பாருங்க’ என்று நோஸ்கட் செய்துவிட்டார் ஸ்டாலின்.

அதன்பின் சென்னையில் இருந்து தருமபுரி திரும்பிய முல்லை வேந்தன் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து சூடாகப் பேசியிருக்கிறார். ‘கலைஞர் வேறு, ஸ்டாலின் வேறு. செந்தில்பாலாஜி அதிமுகவுலேர்ந்து வந்தாரு, அவருக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்குறாரு. நான் தேமுதிகவுல இருந்து வந்தாலும் அடிப்படையில திமுகக்காரன், முன்னாள் அமைச்சரும்கூட. ஆனா, எனக்கு உறுப்பினர் கார்டுதான் கொடுக்குறாரு. பணம் இருக்கிறவங்களை மதிக்குறாரு. இல்லேன்னா கேவலப்படுத்துறாரு’ என்று புலம்பியிருக்கிறாராம் முல்லை வேந்தன்” என்று குறிப்பிட்டிருந்தோம். இதன் எதிரொலியாக மார்ச் 22, 23 தேதிகளில் தர்மபுரிக்கு ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வந்தபோது முல்லை வேந்தன் கூட்டத்துக்குச் செல்லாமல் பண்ணை வீட்டிலேயே இருந்துவிட்டார்.

திமுக மீது முல்லை வேந்தன் அதிருப்தியில் இருந்துவரும் இந்த நேரத்தில், பாமக வேட்பாளர் அன்புமணி அவரைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.­­

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon