திருவையாறு அருகே மருத்துவம் படிக்காமலே 15 ஆண்டுகளாக சிகிச்சை அளித்துவந்த போலி மருத்துவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ள மேல திருப்பந்துருத்தி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 63). இவர் அதே பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்திவந்தார். மருத்துவம் படிக்காமலேயே தன்னை மருத்துவர் என்று குறி சுமார் 15 ஆண்டுகளாக சிகிச்சையளித்து வந்துள்ளார். இவர் மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மனோகரன் நடத்திவந்த கிளினிக்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின்போது, மனோகரன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துவந்தது தெரிந்தது. மருத்துவம் படிக்காமலேயே 15 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மற்றும் ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.
மருத்துவம் படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் மனோகரனை அதிகாரிகள் குழுவினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மனோகரனைக் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தொடர்ந்து போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
கடந்த ஆண்டில் முறையாக மருத்துவம் பயிலாமல், சித்தா, ஆயுர்வேதா என்ற பெயரில் மருத்துவம் பார்த்துவந்த 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,