மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

சிறைகளில் அதிகரிக்கும் மரணங்கள்!

சிறைகளில் அதிகரிக்கும் மரணங்கள்!

‘உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்’ எனச் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 62 மாவட்டச் சிறைச்சாலைகள், 5 மத்தியச் சிறைச்சாலைகள், 3 சிறப்புச் சிறைச்சாலைகள் உள்ளன. அங்குள்ள சிறைகளில், கைதிகளின் மரணங்கள் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து ஆக்ராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரேஸ் பராஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறையினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குச் சிறைத்துறையினர் அளித்துள்ள பதிலில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2012ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை சுமார் 2,016 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 2012ஆம் ஆண்டில் 360 பேரும், 2013ஆம் ஆண்டு 358 பேரும், 2014ஆம் ஆண்டு 339 பேரும், 2015ஆம் ஆண்டு 359 பேரும், 2016ஆம் ஆண்டு 412 பேரும், இந்தாண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 188 பேரும் சிறைகளில் மரணமடைந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு மரணமடைந்தவர்களில் அதிகமானோர் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் தண்டனை காலம் முடிவடைதற்கு முன்பே மரணமடைந்து விட்டனர். குறிப்பாகக் கடந்த 10.05.2013 அன்று புலந்த்ஷகார் சிறையில் 106 வயதான ஒரு கைதியும், 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பஸ்தி சிறையில் 100 வயதான ஒரு கைதியும் மரணமடைந்தனர். உயர் ரத்த அழுத்தம், காசநோய், ஆஸ்துமா போன்ற காரணங்களால்தான் அவர்கள் உயிரிழந்தனர்” எனக் கூறப்படுகிறது. சிறையில் பெண் கைதிகளில் குழந்தைகளும் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரேஸ் பராஸ் கூறுகையில், “சிறைகள் கைதிகளைச் சீர்திருத்தம் செய்து, அவர்களை மறுபடியும் புதிய மனிதர்களாக இந்த உலகுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், சிறைகளின் நிலை மிக மோசமாகவுள்ளது. மரணத்துக்கான காரணங்கள் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும், சிறை அந்தளவுக்கு மோசமாக உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், “அப்படியென்றால் சுகாதாரத்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” எனக் கூறியுள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon