நான்காம் தூணே ! நீ நலம் தானா ?

Published On:

| By Minnambalam

வே.ஸ்ரீராம் சர்மா

சுதந்திர இந்தியாவில் பத்திரிகை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்றால் அதற்கான தனித்த ‘லைசென்ஸ்’ ஒன்றைப் பெற்றாக வேண்டும் என்கிறது அடிமைப்பட்டிருந்த 1867இல்  அந்நியர்களால் போடப்பட்ட சட்டத்தைத் திருத்தி 1956இல் தோற்றுவிக்கப்பட்ட RNI வழிகாட்டு நெறிமுறைகள்.

ADVERTISEMENT

அந்த லைசென்ஸை பெறுபவர் அரசாங்கத்துக்கு பற்பல உறுதிமொழிகளைக் கொடுப்பதோடு அதற்குட்பட்டதான வரைமுறைகளையும் நெறிப்படுத்தி வைத்தாக வேண்டும் என வலியுறுத்துகிறது இந்திய அரசாங்கம்.

அத்துணைக்கும் உட்பட்டு பத்திரிகை நடத்தி வருபவர்கள் இங்கிருக்க… இந்திய அரசாங்கத்தின் எந்தவொரு நெறிமுறைகளுக்கும் உட்படாமல் எந்தவிதமான கடிவாளமும் இல்லாமல் அயல்நாட்டு யூடியூப் முதலாளிகளின் தயவோடு தான்தோன்றித்தனமாக ஆலவட்டம் சுற்றுபவர்களை எப்படி பத்திரிகையாளர்கள் வரிசையில் வைத்து ஏற்க முடியும்?

ADVERTISEMENT

கொஞ்சம் கவனியுங்கள்…

அன்றந்த அடிமை இந்தியாவில் – பத்தொன்பதாம் நூற்றாண்டில் எல்லையில் – விடுதலை வேட்கையில் குமுறிக்கொண்டிருந்த எழுத்து மாந்தர்களெல்லாம் தமது அடிவயிறாழத்து கூக்குரல்களை எதிரொலிக்கும் கூடாரங்களைத் தேடித் தேடி அலையாய் அலைந்தார்கள்.

ADVERTISEMENT

அவர்தம் ஆகச் சிறந்த எண்ணங்களை எழுத்துகளைத் தாங்கிச் சுமக்கும் கருவறைகளாகத் தோன்றி விளங்கின இந்த மண்ணின் பத்திரிகைகள்!

அதனோடு தங்கள் வாழ்வைப் பின்னிப் பிணைத்துக்கொண்ட பெருமக்கள் பத்திரிகையாளர்கள் என அழைக்கப்பட்டார்கள்.

பத்திரிகை என்பதும் பத்திரிகையாளர் என்பது வெறும் வார்த்தைகளல்ல. தீராத உணர்வை தன்னுள்ளடக்கிக்கொண்டதோர் பெரும் வாழ்வு அது!

சுதேசிமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, சூரியோதயம், தர்மம், பாலபாரதா போன்ற பத்திரிகைகளில் வறுமை வாழ்வை புறந்தள்ளிப் பத்திரிகையாளராய், கட்டுரையாளராய் பெரும் பணியாற்றியவர் பாரதியார்.

fourth pillar present status

போலவே, தனது பதின் வயதில் முரசொலி என்னும் பத்திரிகையைத் தொடங்கி அதை இன்று வரையிலும் உலகார்ந்த தமிழுலகின் உயர் சங்கநாதமாக நிகரற்று நின்று ஒளிவீசச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஐம்பதுகளில் ஜனசக்தி நாளிதழைத் தொடங்கி தனது ஈடுஇணையற்ற படிப்பறிவை – பட்டறிவை ஓயாது எழுதி அரசியலாய்வோர்க்கு பெரும் பாடம்  நடத்திப் போனார் தோழர் ஜீவா.  

இன்னும் எத்துணை எத்துணையோ தனித்துவப் பெரியோர்கள் நிறைந்து வாழ்ந்த இந்த உயர்ந்த சமூகத்தில் பத்திரிகையாளர்கள் என்னும் பெரும் பதம் இன்று குன்றிச் சீரழிந்து வருகிறதே என்னும் கவலை மேலிட்டு நிற்கிறது.

பத்திரிகை என்பது கடுந்தவம். பத்திரிகையாளர்கள் அதற்கான யாக குண்டம். எவ்வளவு நெய் ஊறினாலும் மேல் நோக்கியே செல்வது குண்டத் தீயின் குணம். பத்திரிகையாளர்கள் என்பவர்கள் தனித்தன்மை படைத்தவர்கள்.

என்னைப் போன்ற எழுத்தாளர்களை அவர்களோடிணைத்துக் குழப்பிக் கொண்டுவிடலாகாது. எழுத்தாளன் என்பவன் பரதேசி! பத்திரிகையாளன் என்பவன் சம்சாரி!

எழுத்தாளன் என்பவன் சமூக எல்லை கடந்து தன்னியல்பில் சுற்றுவான். ஆனால், சமூகப் பிரக்ஞை என்பது பத்திரிகையாளனுக்கான எழுதப்படாத விதி!

எழுத்தாளன் தன் சித்தமும் சித்தாந்தமுமே பிரதானம் எனச் செயல்படுபவன். பத்திரிகையாளனுக்குப் பத்திரிகை தர்மம் தவிர வேறு எதுவும் தெரியாது.

‘பத்திரிகையாளர்’ என்பது வாழ்வைப் பணயம் வைத்துப் பெறக் கூடியதோர் உயர்ந்த பட்டம்! அதைக் கண்டவரெல்லாம் சூட்டிக் கொண்டு விட முடியாது.

அதற்கென்று பரந்துபட்டதோர் உழைப்பும், வாழ்க்கை அர்ப்பணிப்பும், தியாகமும், தெளிவும் தேவைப்படுகிறது.

தாங்கள் சுவீகரித்துக் கொண்ட பத்திரிகை உலகை ஒட்டுமொத்த வாழ்நாள் வெளிப்பாடாகக் கொண்டு அதை நோக்கி ஓயாது உழன்று, சுழன்று, சர்வபரி தியாகங்களை செய்பவர்களே பத்திரிகையாளர்கள் என்னும் அந்தஸ்தை கொண்டாக முடியும்.

மக்களே குறித்துக் கொள்ளுங்கள்…

பத்திரிகையாளரது வாழ்வு லேசுப்பட்டதல்ல.  

பள்ளி, கல்லூரி கடந்த படிப்பாளன் என்றாலும்கூட பத்திரிகையாளனாக ஒருவர் பரிணாமம் பெற வேண்டுமெனில் குறைந்தபட்சம் பத்தாண்டுக் காலப் பயிற்சிக்குள் ஆட்பட்டாக வேண்டும்!

அவர்களுக்குக் கால நேரம் கிடையாது. நாள் கிழமை பார்க்க முடியாது. சதா சர்வ காலமும் செய்தி குறித்த நினைப்பிலேயே பொழுதாண்டு கொண்டிருக்க வேண்டும். குடும்பம் மறந்து , கொண்டாட்டம் மறந்து, உடல்நலம் மறந்து, ஊணுறக்கம் மறந்து கவர் ஸ்டோரிகளின் பின்னால் கவலை மறந்து சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

செய்தியாகப்பட்டது காட்டிலும் கிடைக்கும். கலவர பூமியிலும் கிடைக்கும். பகட்டான பங்களாக்களிலும் பேட்டி கிடைக்கும். பற்றி எரியும் சேரிகளுக்குள்ளும் போக வைக்கும். ஓட வேண்டும். தேட வேண்டும்.

ஒரே குறி, மக்களுக்கான செய்தி மட்டுமே என்பதாக அதரப் பதர உழைக்க வேண்டும்! ஆம், பத்திரிகையாளர் எனும் தகவைக் கொள்ள விரும்பும் எவரும் மெல்ல மெல்ல தங்களைத் தயார்படுத்திக் கொண்டாக வேண்டும்.

ஆனால், இன்றைய நிலை அப்படியாகவா இருக்கிறது? அவலப்பட்டல்லவா போயிருக்கிறது?

தொழில்நுட்ப மைதுனங்களால் கிளர்ந்துவிட்டன சோஷியல் மீடியாக்கள். மைக் பிடிக்க தெரிந்தவர்கள் எல்லாம் தங்களைப் பத்திரிகைகாரர்கள் என அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். பெரும்பாலானோர் எந்தவிதமான அடிப்படைப் பயிற்சியும் இன்றி அரங்கேறி நிற்கிறார்கள்.

fourth pillar present status

வளவளவென பேசத் தெரிந்தாலே கிணறு தாண்டிவிட முடியுமென அபத்தமாக நம்புகிறார்கள். சமூகத்துக்கு எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக் கூடாது என்னும் அடிப்படைத் தெளிவு கிடையாது. நாகரிகம் கிடையாது. மொழியின் லாகவம் தெரியாது. அதற்கான பயிற்சியைக் கொள்ளும் பொறுமையும் கிடையாது.

நான்கு பேரை வைத்து நாட்டு நடப்பை விசாரிப்பவர்கள் எல்லாம் தங்களை விற்பன்னர்கள் என்கிறார்கள். அந்தப் பொழுதுபோக்கு அரங்கத்தில் கருத்து சொன்ன சிலருக்கு முகாந்திரமே இல்லாமல் மூத்த பத்திரிகையாளர் எனும் பட்டத்தை அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். காரணம், வியாபார நோக்கம்.

வளர்ந்துவிட்ட தொழில் நுட்பங்களை வைத்துக் கொண்டு வியாபார நோக்கோடு வெளிப்படும் அதுபோன்ற அவசரத் துக்குணிகளுக்குப் பத்திரிகையாளர்கள் எனும் அந்தஸ்தை பொதுமக்கள் கொடுத்துவிடக் கூடாது.

பத்திரிகையாளர்களுக்கு உண்டான எந்த முன் உழைப்பும் பயிற்சியுமற்ற சோஷியல் மீடியாக்களின் அந்த சிறுபிள்ளைத்தனங்கள் இன்று நாடெங்கும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது அந்த ஆபாசத்தை விரித்துப் பேச நம்மால் ஆகாது.

இன்றைய தலைமுறை ஆழ உழைக்க மனமின்றி அவசரப்படுகிறது. சில்லறைக் கேமராக்களைக் கொண்டு போய் நிறுத்தி தங்களுக்கும் இடம் கேட்கிறது. கூடவே, மெய்யான பத்திரிகையாளர்களைப் பின்னுக்குத் தள்ளவும் செய்கிறது. மெய்யாய் உழைக்கும் அவர்தம் உழைப்பை களவாடத் துணிவது அசிங்கம். பெருங்குற்றம்.

மொத்தத்தில், ஜனநாயகத்தின் நான்காம் தூண் இன்று நலமிழந்து நிற்கிறது. அதைச் சீர்படுத்த வேண்டியது சார்ந்தோர்க்குண்டான பெருங்கடமையாகிறது .

fourth pillar present status

சின்னக்குத்தூசி போன்ற ஜாம்பவான்கள் பத்திரிகையாளராக வலம்வந்த இந்த மண்ணில் அதில் கால் சதவிகிதம் கூட எட்டாமல் காலர் பட்டையில் அமெச்சூர் அட்டையைத் தொங்கவிட்டுக் கொண்டு திரிய நாணம் கொள்ள வேண்டும். கொள்ளாதோர்க்கு பாடம் புகுத்தியாக வேண்டும்.

குறித்துக் கொள்ளுங்கள்…  

தனக்கான பேராண்மையை காப்பாற்றி வைத்தால்தான் ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனும் பட்டம் அதற்குப் பொருந்தும். அதை வரையறுத்து வைக்காமல் இப்படியாக நீர்த்துப் போக விட்டுக் கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் பத்திரிகை எனும் தூணை ஜனநாயக மண்டபம் மறுதலித்து விடக் கூடும்!

வீடு மறந்து விழா மறந்து ஓடு ஓடு என ஓடோடி உழைக்கும் நிஜமானப் பத்திரிகையாளர்களுக்கு உண்டான நியாயம் கிடைக்காமல் போய்விடும்.

பாரம்பரியமிக்க பத்திரிகையாளர் சங்கங்கள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து – ஒன்றுபட்டு – இதுகுறித்து ஆலோசித்து தக்க நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டியது அவசியம்! அவசரம்!

வருங்காலத் தலைமுறை தமிழ்நாட்டின் பெருமையை காப்பாற்ற வேண்டுமெனில் தமிழ்ப் பத்திரிகையுலகின் கம்பீரம் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும்!

கட்டுரையாளர் குறிப்பு

fourth pillar present status Sriram Sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

முதல்வர் அறிவிப்பு: இன்று பெண் காவலர்கள் அணிவகுப்பு!

கிச்சன் கீர்த்தனா: எல்லோருக்கும் ஏற்றவையா சிறுதானிய உணவுகள்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share