ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் ரூ. 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 31) வழங்கினார்.
பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் கடந்தாண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தார்.
மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நல திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் பத்திரிகையாளர் நல வாரியமும் அமைக்கப்பட்டது.
2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 இலட்சம் ரூபாயிலிருந்து 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி 24 மணி நேரமும் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதம்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று ஆணைகளை வழங்கினார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்!
சோகத்தில் முடிந்த நாடக ஒத்திகை!