ஐக்கிய நாடுகள் சபை 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், ஸ்டார் ஹோட்டல் தொடங்கி, கையேந்தி பவன்கள் வரை சிறுதானிய உணவுகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன.
சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம் என்ற விழிப்புணர்வும் பரவலாக வரத் தொடங்கியிருக்கிறது. அதேநேரம், “அவற்றை யார், எப்படிச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைத் தெளிவும் அவசியம்” என்கிறார்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
“அரிசி மற்றும் கோதுமை உணவுகளோடு ஒப்பிடும்போது சிறுதானியங்கள், தாதுசத்துகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. சிறுதானியங்களில் 65 சதவிகிதம் கார்போஹைட்ரேட் உள்ளது.
அந்த கார்போஹைட்ரேட்டானது, மாவுச்சத்து இல்லாத பாலிசாக்கரைடு வடிவத்தில் இருப்பதாலும், அதிக நார்ச்சத்து கொண்டதாக இருப்பதாலும் மலச்சிக்கல் பிரச்சினையைத் தடுத்து, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, செரிமானத்தின்போது ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியேற்றுகிறது.
அத்துடன், சிறுதானியங்களை ரெகுலராக உணவில் சேர்த்து வருபவர்களுக்கு இதயநோய் பாதிப்புகள், அல்சர் எனப்படும் சிறுகுடல் புண்கள், நீரிழிவு போன்றவை பாதிக்கும் ரிஸ்க் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுதானியங்களின் கெர்னல் எனப்படும் உட்பகுதியில் உள்ள நார்ச்சத்து மற்றும் பாலிபெனால் ஆகிய பைட்டோகெமிக்கல்கள் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தக்கூடியவை.
இவை முதுமையைத் தள்ளிப்போடுவதிலும், வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்களிலிருந்து காக்கவும் உதவுகின்றன.
மேலும் சிறுதானியங்களில் உள்ள அபரிமிதமான மக்னீசியம் சத்தானது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, இதயநோய் ஆபத்தைக் குறைத்து, பக்கவாத ஆபத்திலிருந்தும் காக்கிறது.

இவற்றிலுள்ள பொட்டாசியமும் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் காத்து, இதயநோய் ஆபத்திலிருந்து காக்கிறது.
சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்க்கும்போது கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது.
இத்தனை நல்ல பலன்களைக் கொண்டிருந்தாலும் சிறுதானியங்களைச் சாப்பிடும்போது சில விஷயங்களில் கவனம் தேவை.
உதாரணத்துக்கு சிறுதானியங்களை அளவுக்கு மீறி எடுத்தால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்படலாம். சிறுதானிய உணவுகள் செரிமானமாவதில் தாமதம் ஏற்படும்.
சிறுகுடல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம். இவற்றில் அமினோ அமிலங்கள் அதிகம். அளவுக்கதிக அமினோ அமிலம் உடலுக்கு ஏற்றதல்ல.
எனவே, சிறுதானியங்களை 6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்துச் சமைப்பதன் மூலம் அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகளின் அளவை அதிகரிக்கலாம். தினமும் ஏதேனும் ஒரு வேளைக்கு மட்டும் உணவில் அவற்றைச் சேர்த்துக்கொண்டாலே போதுமானது.
பாலீஷ் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட சிறுதானியங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமற்றது. முழு தானியங்களாக வாங்கி, வீட்டிலேயே மாவாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு நாளைக்கு ஒருவகை சிறுதானியம் மட்டுமே போதுமானது. உதாரணத்துக்கு இன்று கம்பு சமைக்கிறீர்கள் என்றால் அத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். கூடுதலாக வேறு சிறுதானியம் சமைப்பதோ, ஒன்றுடன் இன்னொன்றைச் சேர்த்துச் சமைப்பதோ தேவையில்லாதது” என்கிறார்கள்.
உத்தவ் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த்
உங்களிடமிருந்து மனச்சோர்வை விரட்டுங்கள்!
INDvsAUS: மிரட்டிய ஸ்டார்க்… வெற்றியைத் தேடி தந்த ராகுல் – ஜடேஜா ஜோடி!
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!