பயங்கரவாத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் இன்று (பிப்ரவரி 2) விடுதலை ஆனார்.
கடந்த 2020 செப்டம்பர் 14ம் தேதி உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் ஒருவர் அங்குள்ள உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.
பின்னர் அப்பெண்ணின் நாக்கை துண்டித்து, அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்யவும் முயற்சி செய்தனர்.

இதற்கிடையே மிக மோசமான நிலையில் மீட்கப்பட்ட அப்பெண் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29-ம் உயிரிழந்தார்.
இறந்து இரண்டு நாட்களுக்கு பிறகு அப்பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரில் பெற்றோருக்கு தெரியாமல் போலீஸாரால் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது.

பத்திரிகையாளர் கைது
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் சென்றிருந்தார்.
செய்தியாளர்களை தடுக்கும் நடவடிக்கைகள் ஹத்ராஸில் தீவிரமாக இருந்த நிலையில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்ததாக கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகிய இரு வழக்குகளில் பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனை உ.பி.அரசு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது.
இரண்டு ஆண்டுகளாக அவர் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளிலும் சித்திக் கப்பனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
எனினும் அவரது ஜாமீன் விடுதலை ஒரு மாத காலமாக தாமதமான நிலையில், இன்று காலை சித்திக் கப்பன் லக்னோ சிறையிலிருந்து வெளியே வந்தார்.

என் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “உ.பி சிறையிலிருந்து 28 மாதங்களுக்கு பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி. என் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது.
கடுமையான சட்டங்களுக்கு எதிரான எனது போராட்டத்தை தொடர்வேன். ஜாமீன் கிடைத்த பிறகும் என்னைச் சிறையிலிருந்து விடுவிக்கவில்லை.
நான் சிறையிலிருப்பதால் யாருக்கு லாபமென்று தெரியவில்லை. இந்த இரண்டாண்டுகள் மிகவும் கடினமானவை. ஆனால் ஒருபோதும் நான் பயப்படவில்லை. எனக்கு ஆதரவளித்த அனைத்து ஊடகங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பதானின் இமாலய வசூல்: #Boycott கலாச்சாரத்திற்கான பதிலடி!
அதானி குழும விவகாரம்: முடங்கிய நாடாளுமன்றம்!