பத்திரிகையாளர்களை விரட்டுவதா? – கேரள ஆளுநருக்கு கண்டனம்!

Published On:

| By Selvam

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கைரளி நியூஸ் மற்றும் மீடியா ஒன் நிருபர்களை செய்தியாளர் சந்திப்பிலிருந்து வெளியேறுமாறு கூறினார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஆளுநர் விருந்தினர் மாளிகையில் நேற்று (நவம்பர்7) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பு துவங்குவதற்கு முன்னதாக, கைரளி நியூஸ் மற்றும் மீடியா ஒன் நிருபர்களை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து வெளியேற சொன்ன நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் பேசும்போது, “ஊடகங்களை மிகவும் முக்கியமானதாக நான் கருதுகிறேன். நான் எப்பொழுதும் ஊடகங்களுக்கு பதிலளித்து வருகிறேன். ஆனால் ஊடகங்கள் என்ற போர்வையில் வேஷம் போடுபவர்களிடம் என்னால் பேச முடியாது.

அவர்கள் ஊடகங்கள் கிடையாது. அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து, கட்சியின் உறுப்பினர்கள் போல செயல்படுகிறார்கள்.

கைரளி மற்றும் மீடியா ஒன் சேனல்களின் நிருபர்கள், பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து தயவு செய்து வெளியேறவும். அவர்கள் செல்லவில்லை என்றால் நான் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து வெளியேறுவேன். கைரளி மற்றும் மீடியா ஒன் நிருபர்களிடம் நான் பேச மாட்டேன்” என்றார்.

ஆளுநரின் பத்திரிகையாளர் புறக்கணிப்பு நடவடிக்கையை கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டித்துள்ளன.

கேரளா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆளுநர் தனது தவறை உணர்ந்து ஜனநாயக விரோதமாக பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கேரள மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சதாசிவம் விடுத்துள்ள அறிக்கையில், “பத்திரிகையாளர்களை ஆளுநர் அவமதிப்பது ஜனநாயக விரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊடகங்களை தவிர்த்து விடுவது பாசிச ஆட்சியின் ஒரு பாணி. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் மட்டுமின்றி, பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரானது.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

சந்திர கிரகணம் : வெறும் கண்களால் பாா்க்கலாமா?

இதுதான் உடனடி கர்மா: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share