கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கிய கால்பந்து உலகக்கோப்பை ஆரம்பித்து 2 நாட்கள் தான் ஆகியுள்ளது என்றாலும் உலகமே உற்றுநோக்கும் தொடராக மாறியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த கால்பந்து திருவிழாவை காண உலகின் பல நாடுகளில் இருந்தும் ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் கத்தாரில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று (நவம்பர் 21) செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் அணிந்திருந்த உடையை காரணம் காட்டி மைதானத்திற்குள் அனுமதிக்காமல் அவரிடம் வாக்குவாதம் நடத்தப்பட்ட செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கால்பந்து விளையாடப்படுகிறது. நடப்பு தொடரில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் தங்களது கலாச்சாரத்திற்கு ஏற்றார்போல் இதுபோன்ற சர்வதேச தொடர்களில் உடையணிவது வழக்கம்.
ஆனால் தொடர் ஆரம்பமான சில மாதங்களுக்கு முன்பே கறாரான பல ஆடைக்கட்டுப்பாட்டு விதிகளை கத்தார் அரசு தெளிவாக கூறிவிட்டது. அதன்படி, ”ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும், கை, முழங்கால்கள் முழுவதையும் மறைக்கும் படி அனைவரின் ஆடையும் இருக்க வேண்டும். பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படி உடை அணிந்து கொள்ளலாம் ஆனால் அதே நேரத்தில் உள்நாட்டுக்கலாச்சாரத்தை மனத்தில் வைத்து நீங்கள் உடை அணிய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல ”ஆட்டம் சூடுபிடித்து பரபரப்பாய் போகும் போது தங்களை மறந்து நீங்கள் உங்கள் ஆடைகளை கையில் எடுத்து சுற்றுவீர்கள். அதை எல்லாம் செய்ய அனுமதி இல்லை. அதிகமாய் தோல் தெரியும்படியாக உடையணிந்தால் உங்கள் மீதும் வழக்குப் பாயும். ஜெயிலுக்கும் செல்ல நேரிடும்.” என்று மிகக் கண்டிப்பான, கடுப்பான பல விதிகளை போட்டது கத்தார் அரசு.
இந்நிலையில் தான், நேற்று நடைபெற்ற அமெரிக்கா வேல்ஸ் இடையேயான ஆட்டம் குறித்த செய்தியை சேகரிப்பதற்காக ஓரினச் சேர்க்கையாளர் எனப்படும் LGBTQ சமூகத்தை ஆதரிக்கும் விதமாக டீசர் அணிந்து சென்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவரை மைதான பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் அனுமதி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராண்ட் வாஹ்ல் என்ற அந்த பத்திரிக்கையாளர் தனக்கு அங்கு நடந்ததை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், கத்தாரில் உள்ள தோஹாவில் நடைபெற்ற அமெரிக்கா-வேல்ஸ் உலகக் கோப்பை ஆட்டத்தைப் பற்றி செய்தி சேகரிக்க மைதானத்தின் பத்திரிக்கையாளர் நுழைவாயிலுக்கு வந்தபோது மைதான பாதுகாவலர்கள் என்னை தடுத்தி நிறுத்தினர். நான் LGBTQ சமூகத்தை ஆதரிக்கும் விதமாக கால்பந்தை சுற்றி வானவில் நிறங்கள் பொறித்த டி-ஷர்ட்டை அணிந்து சென்றதற்காக தடுத்து நிறுத்தப்பட்டேன்.
மேலும் நான் அணிந்த டீசர்டை கழற்றக்கோரி அதிகாரிகள் வற்புறுத்தினர். நான் மறுத்த நிலையில் சுமார் 25 நிமிடங்களுக்கு உள்ளே செல்ல என்னை அனுமதிக்கவில்லை.
அதன்பின்னர் அங்கு வந்து பிஃபா அதிகாரி ஒருவர், என்னை மைதானத்திற்குள் செல்ல அனுமதித்து அசௌகரியத்துக்கு என்னிடம் மன்னிப்பும் கேட்டார்.
கத்தாரில் ஒரே பாலின உறவுகள் சட்டவிரோதமானது. ஆனால் உலகக் கோப்பையில் வானவில் கொடி வரவேற்கப்படும் என்று ஃபிஃபா தெளிவாக கூறியுள்ளது.
எனினும் களநிலவரங்கள் வித்தியாசமாக தான் உள்ளது என்பது எனக்கு கவலையை எழுப்புகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
ஆக ஒரு புறம் விறுவிறுப்பாய் தொடங்கியது இந்த கால்பந்து திருவிழா என்றாலும், 1930ல் துவங்கிய உலகக்கோப்பை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு கத்தாரில் இந்தமுறை ஆடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு உலக ரசிகர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.
பவித்ரா பாலசுப்பிரமணியன்
FIFA WorldCup 2022: மெஸ்ஸிக்கு சாதனை… அர்ஜென்டினாவுக்கு வேதனை!
Comments are closed.