Pலோகேஷ் கனகராஜ் ‘தனி’ ஆள் அல்ல!

entertainment

மாஸ்டர், கைதி, மாநகரம் படங்களின் இயக்குநராக இப்போது அறியப்படும் லோகேஷ் கனகராஜ், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பேங்கில் வேலை செய்தவர் என்பதை மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறியபோது பலரும் ஆச்சர்யப்பட்டனர். இது விஜய்க்கு மட்டுமல்ல, லோகேஷ் கனகராஜுடன் ஒவ்வொரு படத்தில் இணையும்போதும் சினிமாவிலேயே ஊறித் திளைத்தவர்கள் அனைவருக்கும் ஏற்படும் ஆச்சர்யம்தான்.

கதைக்கு என்னென்ன காட்சிகள் வேண்டும் என்பது தெரியும். காட்சியில் அந்தச் சூழ்நிலையில் என்ன பேச வேண்டும் என்பதை எழுதிக் கொடுத்து படமாக்குவதைவிட, அந்தச் சூழலுக்கு இயல்பான ஒரு மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தாலே போதும் என்பது லோகேஷின் கணக்கு. தேவையில்லாத கேரக்டர்களையெல்லாம் வைத்து காட்சிகளை நெரிசலாக மாற்றுவதைவிட, கதையின் கேரக்டர்கள் எப்படி கதையோடு ஒன்றியிருந்து நகர்த்திச் செல்கிறார்கள் என்பதையே ஷூட்டிங்கின் நோக்கமாகக் கொண்டிருந்ததால்தான் லோகேஷ் இத்தனை எளிதாக ஷூட்டிங்கை நடத்த முடிகிறது என்கின்றனர் அவருடன் பணிபுரிபவர்கள்.

சினிமா ஷூட்டிங்கைப் பொறுத்தவரையில், படத்துக்காக உருவாக்கப்படும் செட்தான் அதிக பணத்தைக் கரைக்கும். இயக்குநரின் கற்பனையில் உருவான காட்சியை நிஜத்தில் கொண்டுவருவதற்கும், அதில் இயக்குநர் சொல்லும் மாற்றங்களையும் செய்வதால் அதிக பணம் விரயமாகும். எனவே, இயக்குநரின் கற்பனை எப்படியோ அதன்படியே காட்சிகளுக்குச் செலவாகும். இயக்குநரின் கற்பனையில் உருவாகும் காட்சிகள் சாதாரணமாகவும், அந்தக் காட்சியில் வெளிப்படும் கதை பெரிதாகவும் இருந்தால் பணம் குறைவாகச் செலவாகும். இதுவே லோகேஷின் ஸ்டைல். கோயம்புத்தூரில் பிறந்து வங்கி வேலையில் சேர்ந்த லோகேஷுக்கு பணத்தைச் சிறப்பாகக் கையாளத் தெரிந்திருந்தது. அந்தத் திறமையை ஷூட்டிங் நடத்துவதில் பயன்படுத்தி அவியல் என்ற குறும்படத்தை நண்பர்களுடன் சேர்ந்து எடுத்தார். களம் என்ற ஆந்தாலஜி குறும்படத் தொகுப்பில் ஒன்றாக வெளியான அவரது குறும்படம், மற்றவற்றை விட குறைந்த செலவிலும், நிறைந்த தரத்திலும் இருந்தது. இதைத் தனது தனிச் சிறப்பாக வைத்து சினிமா துறையை அணுகியவருக்குத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் அறிமுகம் கிடைத்து, மாநகரம் எனும் படத்துக்கான வாய்ப்பு உருவானது.

மாநகரம் படத்தில் எந்த வீட்டுக்குள்ளும் கேரக்டர்களை உட்கார வைக்காமல் பைக், கார் எனக் கதை நகரும். ஹீரோயினுக்கு மட்டும் ஒரு ஹாஸ்டலில் வசிப்பது போன்ற பிரமாண்ட செலவு செய்யப்பட்டிருக்கும். இப்படி ஒரு இடத்தில் நிற்காத கதை என்பதால் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் வெகு வேகமாகவும், அதே நேரம் படம் பார்ப்பவர்களுக்குப் புரியக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும். இதைத்தான், ‘மாநகரம் படம் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் அவ்ளோதான்’ என்று விஜய் குறிப்பிட்டிருந்தார். இதே ஸ்டைலில்தான் கைதி படத்தையும் எடுத்து முடித்தார் லோகேஷ். போதைப் பொருள் விற்கும் வில்லனின் குடோன், ஒரு லாரி, ஒரு ரிசார்ட் மற்றும் பாழடைந்த போலீஸ் ஸ்டேஷன். இதைத்தாண்டி அந்தப் படத்தில் இடம் என்று குறிப்பிடும் விதத்தில் எதுவுமே இருக்காது. அனைத்துக் காட்சிகளையும் அவுட்டோர் ஷூட்டிங்கிலேயே முடித்திருப்பார். இதுதான் ஒவ்வொரு படத்தின் செலவையும் லோகேஷின் படங்களில் குறைத்தது. லோகேஷின் இரண்டு படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு கைதி வெற்றி குறித்து பேசும்போது இதை குறிப்பிட, குறைந்த பட்ஜெட்டில் நல்ல படம் எடுக்கக்கூடிய இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்த விஜய்யின் காதுகளுக்கு அந்தச் சேதி சென்று சேர்ந்தது.

‘மாநகரம் படத்தில் திரும்பிப் பார்க்க வைத்தார். கைதி படத்தில் திரும்பத் திரும்பப் பார்க்க வைத்தார்’ என்று விஜய் சொன்னதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. லோகேஷிடம் கதை கேட்டிருந்த விஜய்க்கு, கைதி படத்தைப் போட்டுக் காட்டினார் லோகேஷ் கனகராஜ். படம் முழுவதையும் ஒரே சிட்டிங்கில் பார்த்து முடித்த விஜய் லோகேஷை பாராட்டினார். சில நாட்களிலேயே திரும்பவும் கேட்டுப் படத்தைப் பார்த்தார். படத்தின் பல காட்சிகளைக் குறிப்பிட்டு லோகேஷை வாழ்த்தியதன் மூலம், தன்னுடைய படத்துக்கு எப்படிப்பட்ட காட்சிகள் அவசியம் என்பதையும் உணர்த்தினார். ராவான கேரக்டர்கள் மீது விஜய்க்கு ஓர் அலாதி பிரியம் எப்போதும் உண்டு. நெகட்டிவ் ஒளி வீசும் கேரக்டர்களில் பூவே உனக்காக, அழகிய தமிழ்மகன், போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான திருப்தியைப் பெற்றுக்கொண்ட விஜய்யின் கேரக்டரைத் தனித்துவமாக உருவாக்க லோகேஷ் எடுத்த முடிவுதான் சில போஸ்டர் மற்றும் பாடல் காட்சிகளிலேயே விஜய்யை வேறு ஒரு பரிமாணத்தில் இந்தப் படத்தில் எதிர்பார்க்கும் அலையை ரசிகர்கள் மனத்தில் உருவாக்க முடிந்திருக்கிறது. ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் விஜய்க்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில் ஒரு சம்பவத்துக்கு முக்கியப் பங்குண்டு.

மாஸ்டர் படத்துக்குப் பெரிய அளவில் செட் எதுவும் அமைக்காமல், இயற்கையான சூழலிலேயே ஷூட்டிங்கை நடத்தினார் லோகேஷ் கனகராஜ். ஒரு காட்சியில் இடம்பெறும் பொருட்களைவிட, அதிலிருக்கும் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் லோகேஷுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடத்தப்பட்ட ஷூட்டிங் முக்கியமானதாக இருந்தது. ஆனால், அங்கு தேடிச் சென்றதைவிட அவருக்குச் சிறப்பாகக் கிடைத்தது விஜய் அவரின் ரசிகர்களுடன் நிற்கும் காட்சி தான். மாணவர்கள் புரட்சி பற்றிப் பேசும் திரைப்படத்துக்கு அதிக அளவில் மாணவர்களைக் கூட்டி மாஸான கூட்டத்தையே விஜய்யை நிற்க வைக்கும் பிரமாண்ட காட்சியை லோகேஷ் எப்போதும் திட்டமிடவில்லை. ஆனால், ரெய்டு நடைபெற்றதன் எதிரொலியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு ஏற்பட்ட சங்கடங்களைத் தீர்க்க நெய்வேலி நோக்கி படையெடுத்த விஜய் ரசிகர்கள் கொட்டும் பனியில் விஜய்க்காகக் காத்து நின்றினர். அவர்களிடையே சென்ற விஜய், அங்கிருந்த பேருந்தின் மீதேறி ரசிகர்களுக்கு வணக்கம் சொன்ன காட்சியை ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்து, அதை மாஸ்டர் படத்தின் காட்சிக்குப் பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். இதை அடுத்த நாளே எடிட் செய்து விஜய்யிடம் காட்டியபோது, ஸ்கிரிப்ட் – சீன் பேப்பர் என எதுவுமே இல்லாமல் இயல்பில் நடக்கும் காட்சியைப் படத்துக்கேற்ப பயன்படுத்தும் லோகேஷின் திறமை என்னவென்பது அப்போதுதான் விஜய்க்குத் தெரிந்து பாராட்டியிருக்கிறார். மேலும், அவசரப்பட்டு சீன் பேப்பர் வழியாக ஷூட்டிங்கை நடத்த சொல்லிவிட்டேனோ என்று குறைபட்டிருக்கிறார் விஜய். மாஸ்டர் இசை வெளியீட்டு நிகழ்வில் ‘சீன் பேப்பரே கைல இல்லாம, அந்த மாதிரி பேசுங்க இந்த மாதிரி பேசுங்க’ என்ற லோகேஷின் ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் குறித்து விஜய் பேசியது இதை அடிப்படையாக வைத்துதான் என மகிழ்கின்றனர் படக்குழுவினர். இவற்றையெல்லாம் விட முத்தாய்ப்பான ஒரு சம்பவம் உண்டு. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 16 துணை இயக்குநர்களையும் மேடையில் ஏற்றி அழகு பார்த்தது லோகேஷின் பெருந்தன்மை என்கின்றது திரையுலகம். ஆனால், அதை என் கடமை என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார் லோகேஷ்.

‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழு’ என்ற சொல்லாடலுக்கு ஏற்ப 16 துணை இயக்குநர்களும் லோகேஷுக்குக் கிடைத்த அற்புதங்கள். எத்தனை துணை இயக்குநர்களை ஓர் இயக்குநர் வேலைக்கு வைத்தாலும், குறிப்பிட்ட சிலரது பெயரை மட்டும்தான் அவர்கள் பணிபுரியும் படத்தின் டைட்டில் கார்டில் சேர்ப்பார்கள். ஆனால், தனது எல்லா துணை இயக்குநர்களையும் மேடையில் ஏற்றினார் லோகேஷ். இது அத்தனை அவசியமா என்று விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டபோது “ஷூட்டிங்கில் பணிபுரிந்த நடிகர் முதல் லைட் பாய் பெயர் வரைக்கும் படத்தின் டைட்டில் கார்டில் போடுகிறோம். என் படத்துக்காக இவ்வளவு உழைத்த வருங்கால இயக்குநர்களுக்கு அங்கு நான் கொடுத்த மேடை, இத்தனை நாட்கள் என் நம்பிக்கை தோற்றுவிடாமல் அவர்கள் காப்பாற்றியதற்கான நன்றிக்கடன்” என்று கூறியிருக்கிறார்.

**-சிவா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *