தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த, சிம்பு நடித்துள்ள மாநாடு, விஷால், ஆர்யா நடித்துள்ள எனிமி, அருண் விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்குமுனைப் போட்டியிலிருந்து ‘மாநாடு’ படம் விலகுவதாக காலையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அது உண்மையாகி உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா பிரச்சினைகளுக்கு நடுவே சில வருட உழைப்பின் பலனாக அறுவடைக்கு காத்திருக்கிறது மாநாடு படம். விழா நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை மக்கள் பார்ப்பது வழக்கம். அதை எண்ணியே மாநாடு படத்தை தீபாவளிக்கு கொண்டு வர எண்ணினோம். இதை போட்டியாக நான் பார்ப்பதில்லை. அது வியாபார புத்திசாலித்தனமும் அல்ல.
மாநாடு படம் நன்றாக வந்துள்ளது, அதன்மீது பெரிய நம்பிக்கையும் உள்ளது. என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது. விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டுக்குப் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? அதனால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி நவம்பர் 25 அன்று வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**
�,