முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

entertainment

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள்.

இந்நிலையில் தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார். சிலம்பரசன் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் நேற்று(20.10.2021) காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு ஜனநாயக முறைப்படி இல்லாமல், அமைக்கப்பட்ட தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

சிலம்பரசனை வைத்து அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்தப் பணமும் கொடுக்க வேண்டியதில்லை. சிலம்பரசன் அந்தப் படத்தில் தனக்கு வர வேண்டிய சம்பளத்தைக்கூட விட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிலம்பரசன் நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார். அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய டி.ராஜேந்தர், தமிழ் சினிமாவில் சிலர் ஜனநாயகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட ‘நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

மைக்கேல் ராயப்பனுக்கு சிலம்பரசன் பணம் கொடுக்க தேவையில்லை. மேலும் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் அருள்பதி, மைக்கேல் ராயப்பனுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், மன்னன், சந்திர பிரகாஷ் ஜெயின், கதிரேசன், தினேஷ் ஆகியோர் மறைமுகமாக உதவுகின்றனர்.

இந்திய சினிமாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதனால் பல சினிமா கலைஞர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். இந்தக் கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீதும், ரெட் கார்டு போடும் கும்பல் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

இது மாதிரியான கட்டப் பஞ்சாயத்து கும்பலை களையெடுக்க ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விசாரணை ஆணையம் ஏன் கிடப்பில் உள்ளது..? இந்தக் கட்ட பஞ்சாயத்து கும்பல் நீதிமன்றம் மற்றும் எந்த சட்ட திட்டங்களையும் கண்டு கொள்வதில்லை.

நான், சிலம்பரசனுக்காக மட்டும் பேசவில்லை. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இந்தப் பிரச்சினையை இத்தோடு விடப் போவதில்லை. டெல்லிவரை கொண்டு போய் சேர்க்க உள்ளேன்.

சிலம்பரசன் நடித்துள்ள ‘மாநாடு’ படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மாநாடு படம் ரீலீஸ் தேதி மாற்றப்பட்டதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தியேட்டர்கள் அதிகளவில் கிடைக்காததுவே காரணம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

ராஜேந்தர் கட்டப்பஞ்சாயத்து, நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் காரணம் என குறிப்பிட்டுள்ளது பற்றி திரையுலக வட்டாரத்தில் விசாரித்தபோது, வழக்கமாக T.ராஜேந்தர் குடும்பம் நடத்தும் நாடகம் இது. அவர்களை பொறுத்தவரை வாங்க மட்டுமே தெரியும் திருப்பி கொடுக்க மனசு வராது. சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களில் லாபம் சம்பாதித்ததாக ஒருவரை கூட இவர்களால் குறிப்பிட முடியாது.

நெருக்கடியில் இருந்து மீளவும், சமாளிக்கவும் புதிது புதிதாக தயாரிப்பாளர்களுக்கு சிம்பு கால்ஷீட் கொடுத்து பயன்படுத்தி காரியம் சாதிப்பார்கள். பின்பு, அவர்களுக்கு இடையூறு செய்வார்கள் இது அவர்கள் குடும்ப வழக்கம் என்பது சினிமா வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும்.

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடியாத நிலையில் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை இரண்டாம் கட்டப்படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு சுமூகமான முடிவுக்கு கொண்டுவருவதாக படத்தின் தயாரிப்பாளர் கடிதம் மூலம் உத்திரவாதம் கொடுத்ததால் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இங்கு நடைபெற்றால் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதால் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை திசைதிருப்பவே கட்டப்பஞ்சாயத்து என்கிற துருப்பு சீட்டை கையில் எடுத்திருக்கின்றனர். மைக்கேல் ராயப்பன் பிரச்சினை பூதாகரமாக வெடித்த போது எதற்காக நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நடிகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதனால் சிலம்பரசன் கால்ஷீட் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து சிம்புக்கு படங்கள் கமிட்டானது இந்த நிலை ஏற்பட காரணமான சுரேஷ் காமாட்சியை பதம் பார்க்க தொடங்கியுள்ளனர் சிலம்பரசன் குடும்பத்தினர். திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் அதனால் மாநாடு ரீலீஸ் தேதி மாற்றப்பட்டது என கூறினாலும் உண்மை காரணம் வேறு சிம்பு சம்பள பாக்கியை பைசா பாக்கி இல்லாமல் தயாரிப்பாளர் கொடுத்தால் மட்டுமே அவர் சம்பந்தபட்ட பணிகளை முடித்து தருவார் என கூறப்பட்டுள்ளது. அதனால் மாநாடு படம் சம்பந்தப்பட்ட வேலைகள் முழுமையடையவில்லை. இவை அனைத்தையும் மறைக்கவே மைக்கேல் ராயப்பன் பிரச்சினை, கட்டப்பஞ்சாயத்து என கதைவிடத் தொடங்கியுள்ளது T.ராஜேந்தர் குடும்பம்” என்கின்றனர்.

**-அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *