3 கோரிக்கைகள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

politics

3 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும், மருத்துவப் படிப்புகள் இளங்கலை முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (ஜூலை 8) பிரதமருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “நமது நாடு ஒரு கடுமையான கொரோனா பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் ஏற்பட்டிராத இந்தப் பிரச்சினையால், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினர்தான் மற்றவர்களை விடவும் அதிகமான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், அனைத்துக் குடிமக்களின் நலன் காக்கவும், அவை அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகவும், நியாயமாகவும் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ள ஸ்டாலின், “நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களிலும் மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களிலும் மாணவர்கள் எந்த ஒரு குடியிருப்பு அல்லது நிறுவன தடைகளும் இன்றி போட்டியிட அகில இந்திய ஒதுக்கீடு என்ற கருத்தை 1984-ம் ஆண்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. இன்றைய நிலவரப்படி அகில இந்திய ஒதுக்கீடு என்பது நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்டது தானே தவிர சட்டப்படியானது அல்ல.

மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கடைசி கோரிக்கையாக, “நீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையை இந்த தேர்வு முற்றிலுமாக அழிக்கிறது. மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு உத்தரவைப் பிறப்பிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7-ன் பட்டியல் 3-ன்கீழ் பொதுப் பட்டியலில் உள்ள இதன் மீதான மாநில அரசின் உரிமையைக் குறைப்பதோடு மருத்துவக் கல்வியின் கூட்டாட்சி அமைப்பு மீறப்படுகிறது. அதோடு நீட் தேர்வானது, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை மாநில கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே சாதகமான ஒன்று என்பது வெளிப்படையானது.

இந்த அணுகுமுறை கல்வித்தரத்தில் வேறுபாடுகள் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. இது மற்ற பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். இறுதியாக நீட் தேர்வு நடத்தப்படும் கடந்த 3 ஆண்டுகளாக இத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவும் தேர்வு பெறுவதற்காகவும் தனியார் பயிற்சிக் கூடங்களை மாணவர்கள் நாட வேண்டியுள்ளது வெளிப்படையான ஒன்று. இந்த தனியார் பயிற்சி மையங்களில் கட்டணம் அதிகம் என்பதால் மாநிலங்களிலுள்ள பல மாணவர்களால் பயிற்சி பெற முடியாது. 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கையில் 17 சதவீதம் குறைந்து இருப்பது இந்தப் பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, அவசரச் சட்டத்தின் மூலமாக உரியத் திருத்தங்கள் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும்” என்றும் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *