~பன்னீரை விட்டு விலகியது ஏன்? நத்தம் விசுவநாதன்

Published On:

| By Balaji

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் தேனி மாவட்டம். அதற்கு அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டமும் பன்னீர்செல்வத்தின் அரசியல் வரலாற்றில் முக்கியமானது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய அதிமுக பிரமுகர்களான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகிய இருவருமே இப்போது தங்களுக்குள் உள்ள உள்ளூர் முரண்பாடுகளை களைந்து எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கின்றனர்.

தர்மயுத்தம் நடத்தியபோது பன்னீருடன் இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். ஆனால் 28 ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நத்தம் விஸ்வநாதன் பேசியதை கேட்டு அதிர்ந்தார் பன்னீர்செல்வம். நத்தம் உள்ளே பேசினார் என்றால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று செய்தியாளர்களிடம், ‘அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’ என்று பேசியுள்ளார். இதுபோன்ற சீனியர்களின் ஆதரவு பன்னீரை சங்கடத்திலும், எடப்பாடியை உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி பன்னீர்செல்வத்தின் வீட்டில் அவரை சந்தித்தார் நத்தம் விஸ்வநாதன்.

அப்போது அவர், நான் உங்களோடுதான் இருந்தேன். என்னைப் போன்ற பலரும் உங்களை தர்ம யுத்தத்தின் போது ஆதரித்தோம். உங்களை ஆதரித்தோம் என்பதைவிட சசிகலாவால் ஒதுக்கப்பட்டவர்கள், பழி வாங்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் உங்களோடு நாங்கள் இணைந்தோம். ஆனால், இப்போது நீங்களே அவர்களுடன் பேசுவது போல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அணிகள் இணைந்த பிறகு நான் உங்களுடன் இருந்தவன் என்ற அடிப்படையில் சில மாதங்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதையே தவிர்த்து வந்திருக்கிறேன். 2019 நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை நான் கேட்டேன். ஆனால் கூட்டணிக்கு போய்விட்டதாக சொல்லிவிட்டீர்கள்.

அதன் பிறகும் நான் உங்களோடுதான் இருந்தேன். ஆனால் என்னை அழைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘நீங்கள் கட்சியில் சீனியர்…இதுபோல ஒதுங்கி இருக்கக் கூடாது. திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் கூறினார். அப்போதும் நான் உங்களுடன் தான் இருந்தேன். இப்போது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும். மீண்டும் கட்சிக்குள் எந்த வடிவத்திலும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் வந்து விடக்கூடாது. அதனால்தான் நான் கூட்டத்தில் அவ்வாறு பேசினேன்’ என்று பன்னீர்செல்வத்திடம் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் கூறியிருக்கிறார் என்கிறார்கள் திண்டுக்கல் அரசியல் வட்டாரத்தினர்.

தென் தமிழகத்தில் முக்கிய மாவட்டமான திண்டுக்கல் மாவட்ட அதிமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share