டெல்லியில் 2020-ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேஎன்யூ முன்னாள் மாணவர் உமர் காலித், 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். பலமுறை ஜாமீன் கோரியும் விடுதலை கிடைக்காத நிலையில், இன்று (நவம்பர் 5) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வு மாணவரான உமர் காலித், மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர். 2016-ஆம் ஆண்டு ஜேஎன்யூ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றபோது உமர் காலித்தும் அதில் பங்கேற்றார். இந்தப் போராட்டங்களின் பின்னணியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த கலவரத்துக்குப் பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் இருந்ததாகக் கூறி டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு FIR 59/2020 என்ற வழக்கைப் பதிவு செய்தது. உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோர் இந்தச் சதித்திட்டத்தில் பங்கேற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டனர்.

உமர் காலித் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான UAPA உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டதிலிருந்து டெல்லி திகார் சிறையில் இருக்கும் அவருக்கு, குடும்ப நிகழ்ச்சிகளுக்காக மட்டும் குறுகிய கால இடைக்கால ஜாமீன் கிடைத்தது.
முடிவில்லாமல் தொடரும் ஜாமீன் மனுக்கள்
2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது உமர் காலித்தின் ஜாமீனுக்கான சட்டப் போராட்டம்.
2022-ஆம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. அதே ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி டெல்லி உயர்நீதிமன்றமும் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது.
2023-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பலமுறை விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த மனுவைத் திரும்பப் பெற்றார்.
அதன்பிறகு மீண்டும் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டார். 2024-ஆம் ஆண்டு மே மாதம் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் மறுத்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
2026-ஆம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி. அஞ்சாரியா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. டெல்லி கலவரம் தொடர்பான பெரிய சதித்திட்டத்தின் பின்னணியில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் கருத்தியல் ரீதியாக முக்கியப் பங்காற்றியவர்கள் (Ideological Drivers) என்று குறிப்பிட்டு இருவருக்கும் ஜாமீன் மறுத்தது. இதே வழக்கில் குல்ஃபிஷா பாத்திமா உள்ளிட்ட 5 பேருக்கு, சதித்திட்டத்தில் அவர்களது பங்கு வேறுபட்டிருப்பதாகக் கூறி ஜாமீன் வழங்கப்பட்டது.
உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கேட்பதற்கும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அதாவது அரசுத் தரப்பின் சாட்சிகளிடம் விசாரணை முடிந்த பின்னரோ அல்லது ஜனவரி 5-ந் தேதியிலிருந்து ஓராண்டு முடிந்த பின்னரோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அப்போது மீண்டும் ஜாமீன் கேட்கலாம் என்பதுதான் அந்த நிபந்தனை.
இதற்கிடையே செப்டம்பர் 30-ந் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா எம். சிங், தினேஷ் பட் அமர்வு உமர் காலித்தின் மற்றொரு ஜாமீன் மனுவை நிராகரித்தது. உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விதித்த நிபந்தனையைத் தங்களால் மாற்ற முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தது.

புதிய ஜாமீன் மனுவில் என்ன சொல்லியிருக்கிறார்?
உச்சநீதிமன்றம் விதித்த ஓராண்டு காலக்கெடு 2027-ஆம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த வழக்கில் இன்னும் குற்றச்சாட்டுகள் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. அரசுத் தரப்பின் சாட்சிகளிடமும் விசாரணை நடைபெறவில்லை. எனவே ஜனவரி 5-ந் தேதிக்குள் சாட்சிகள் விசாரணை முடிவடைவதற்கான வாய்ப்பில்லை என்று புதிய மனுவில் உமர் காலித் கூறியுள்ளார்.
ஏற்கெனவே 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணை எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பதும் தெரியவில்லை. இப்படியே சிறையில் வைத்திருப்பது விரைவான விசாரணையைப் பெறுவதற்கான தனது அடிப்படை உரிமையைப் பாதிப்பதாக உமர் காலித் வாதிட்டுள்ளார்.
UAPA சட்டமும் நீண்டகால சிறைவாசமும்
உமர் காலித்தின் ஜாமீனுக்குப் பெரும் தடையாக இருப்பது UAPA சட்டத்தின் கடுமையான நிபந்தனைகள்தான். ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களையும் விசாரணையின்றி காலவரையின்றிச் சிறையில் வைத்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே சில வழக்குகளில் பதிலளித்திருக்கிறது.
குறிப்பாக KA Najeeb வழக்கில், நீண்டகால சிறைவாசம் மற்றும் விசாரணை முடியாத சூழலைக் கருத்தில் கொண்டு, UAPA சட்டத்தின் கடுமையான ஜாமீன் நிபந்தனைகளையும் தாண்டி அரசியலமைப்புச் சட்ட உரிமைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பை வெவ்வேறு உச்சநீதிமன்ற அமர்வுகள் விளக்கிய விதத்தில் முரண்பாடு ஏற்பட்டது. குல்ஃபிஷா பாத்திமா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, KA Najeeb வழக்கின் சட்டக் கோட்பாட்டைக் குறுகிய அளவில் அணுகியிருப்பதாக நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு விமர்சித்திருந்தது.
இதையடுத்து கடந்த மே 22-ந் தேதி நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு, இந்தச் சட்டப் பிரச்சினையைப் கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பியது. அப்போது டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஸ்லீம் அகமது, காலித் சைஃபி ஆகியோருக்கு 6 மாத இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டது.
இருவரும் கணிசமான காலம் சிறையில் இருந்திருப்பதையும், வழக்கு விசாரணை உடனடியாக முடிவடைய வாய்ப்பில்லை என்பதையும் நீதிபதிகள் கணக்கில் எடுத்துக்கொண்டனர். முக்கியமான சட்டப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணப்பட வேண்டியிருக்கிறது என்பதற்காக மட்டும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டியதில்லை என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது. தனது நிலையும் இதிலிருந்து வேறுபட்டதல்ல என்பதே உமர் காலித்தின் புதிய மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய வாதம்.
உமர் காலித்தின் நீண்டகால சிறைவாசத்துக்கு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி Amnesty International, CIVICUS, International Commission of Jurists உள்ளிட்ட அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டு அவரை விடுதலை செய்யக் கோரின. அமைதியான போராட்டங்களில் பங்கேற்பதும் அரசின் கொள்கைகளை விமர்சிப்பதும் அடிப்படை உரிமைகள் என்றும், இத்தகைய செயல்பாடுகளுக்காக நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்தன.










