முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை நவம்பர் 2ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், நேற்று மாலை நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி, போலீசார் துன்புறுத்தினார்களா? முறையாக உணவு வழங்கப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகளை அன்பில் மகேஷிடம் எழுப்பினார்.
அப்போது அன்பில் மகேஷ் சார்பில், போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், முறையாக உணவு வழங்கப்பட்டது என்றும் பதிலளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு இன்று (நவம்பர் 5) அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
அப்போது அன்பில் மகேஷ் சார்பிலும் காவல்துறை சார்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அன்பில் மகேஷ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார், ‘முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் செப்டம்பர் 18ஆம் தேதி சம்மன் அனுப்பி 8 மணி நேரம் அவரிடம் விசாரணை செய்தனர்.
தொடர்ந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி அவரை கைது செய்த போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
இந்த மூன்று நாட்களில் அவர் விசாரணையை பாதிக்கும் வகையில் எந்த விஷயத்தையும் அவர் செய்யவில்லை.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தேவையானதை செய்து கொடுப்பதாக கூறி பிடி அரசகுமார் பணம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உறுதி அளித்தபடி பிடி அரசகுமார் அனுமதி பெற்று தரவில்லை. அதோடு இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவர் மிரட்டி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் அரசகுமார் மட்டும் 100 கோடி ரூபாய் பணம் பெற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் கூட மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை.
விலைவாசி உயர்வு போல நாளுக்கு நாள் 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் என அதிகரித்து காட்டப்படுகிறது.
அமைச்சர் என்ற முறையில் தான் அரசு அதிகாரிகள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டத்தில் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அதேபோன்று தனித்தனியாக சந்திப்பதை தவிர்க்கவே அரசகுமாரை அனைவரும் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார்.
இதை காவல்துறையினர் அவர்களுக்கு ஏற்றார் போல மாற்றிவிட்டனர்.
தனியார் பள்ளிகளின் உரிமத்தை 20 ஆண்டுகளுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் நீட்டிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
பழைய அரசாணைப்படி தொடர்ந்து மூன்று முறை அதாவது 9 ஆண்டுகள் உரிமம் வைத்திருந்தால் மட்டுமே 20 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் விதிமீறல்கள் எதுவும் செய்திருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
20 ஆண்டுகள் உரிமம் பெறும் பள்ளிகளை ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். தனியார் பள்ளிகளுக்கு எந்த சலுகையும் கொடுக்காத வகையில் அரசாணை வெளியிடப்பட்டதை முறைகேடு செய்யவே கொண்டுவரப்பட்டது என கூறுவதை ஏற்க முடியாது.
கடந்த ஆட்சியில் 20 ஆண்டுகளுக்கு பள்ளிகளின் உரிமம் வழங்கப்படும் என்ற அரசாணையை தான் தற்போதைய அரசும் கடைப்பிடிக்கிறது.
திருடனை விட்டுவிட்டு திருட்டு பொருளை வாங்கியவனை மட்டும் கைது செய்வது போல காவல்துறை இந்த வழக்கில் செயல்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை குற்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு காவல்துறை கட்டாயப்படுத்துகிறது.
பணம் கொடுத்ததாக கூறுபவர்கள் முதலில் அரசகுமாரிடம் கொடுத்ததாக கூறினர். பின்னர் அன்பில் மகேஷிடம் கொடுத்ததாக கூறுகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமம். அந்த வகையில் பணம் கொடுத்தவர்கள் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பணம் கொடுத்ததாக கூறுபவர்களை சாட்சிகளாக மாற்றியுள்ளனர்.
முத்துக்குமார் தலைமறைவாக இருந்ததற்கு அன்பில் மகேஷ் தான் காரணம் என்று கூறுவது நகைப்புக்குரியது.
பணம் கொடுத்தவர்களை வழக்கில் சேர்க்காமல் தப்ப வைப்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
கொலை செய்த ஒருவர், ஏதோ தூண்டுதலின் பேரிலேயோ ஆத்திரத்திலேயோ செய்து விட்டேன் என்று கூறினாலும் சட்டப்படி அவர் கொலையாளியாகவே கருதப்படுவார். அதுபோல பணம் கொடுத்தவர்களையும் குற்றவாளியாக சேர்த்து விசாரிக்க வேண்டும். தங்களுக்கு தேவையானதை மட்டும் காவல்துறையினர் விசாரணை செய்யக்கூடாது. பணம் கொடுத்தவர்கள் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காவல்துறை ஏன் தயங்குகிறது.
இந்த வழக்கில் பிடி அரசகுமார் முதல் குற்றவாளியாக இருந்தும் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்

தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவே காவல்துறை விசாரணைக்கு அன்பில் மகேஷ் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். பள்ளி குழந்தைகள் பாதிக்க கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். ஆனால் அவரையே பல கோடி ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக அவதூறு பரப்புகிறார்கள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டவர் அன்பில் மகேஷ்” என்று வாதங்களை முன் வைத்தார்.
தொடர்ந்து காவல்துறையை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
அவர், “பதிவு செய்யப்படாத சங்கத்தை வைத்து இந்த முறைகேட்டை அரசகுமார் செய்துள்ளார்.
அன்பில் மகேஷ், அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.. இதற்கு ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளில் முத்துக்குமார் சரணடைந்துள்ளார்.
சரவணன் என்பவர் பணத்தை பெற்று சென்றதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று 400 கோடி ரூபாய் பணம் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.
சரவணன் பேசிய ஆடியோ ஒன்றும் உள்ளது. அதில் ‘வர வேண்டியது எல்லாம் வந்துவிட்டது, அதனால் அரசாணை வெளியிட போகிறோம்’ என கூறியிருக்கிறார். தற்போது சரவணன் தலைமறைவாக இருக்கிறார்.
இந்த பணம் அன்பில் மகேஷுக்கு எப்படி சென்றது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
முத்துக்குமார் பணத்தை பெற்றார் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. முறைகேடாக பெற்ற பணத்தில் சொத்துகளையும் வாங்கியுள்ளனர். விரைவில் முத்துக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.
முத்துக்குமார் பணத்தை பெற்று சரவணன் மூலமாக அன்பில் மகேஷுக்கு கொடுத்திருக்கிறார். இதுகுறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். தனியார் பள்ளி உரிமையாளர்கள் பணம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் உரிமம் கிடைக்காது என்ற எண்ணத்தில் பணம் கொடுத்துள்ளனர்.
அதனால் பணத்தை பறி கொடுத்த பாதிக்கப்பட்டவர்களை எப்படி குற்றவாளியாக சேர்க்க முடியும். இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் அன்பில் மகேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர், “தனியார் பள்ளி உரிமையாளர்கள் மிரட்டப்பட்டார்களா அல்லது கட்டாயப்படுத்தப்பட்டார்களா என்ற முடிவுக்கு காவல்துறை எப்படி வந்தது” என்ற கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், தலைமறைவாக உள்ள சரவணன் பணத்தை அன்பில் மகேஷுக்கு கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் காவல்துறையிடம் இல்லை. மாவட்ட ஆட்சியரை சந்திப்பதே சிரமம் என்ற நிலையில் ஒரு சாதாரண ஓட்டுநர் அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்தார் என்பது வேடிக்கையாக உள்ளது.
அதுபோன்று கட்சி நிதி என்று போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். பணம் எடுத்துச் சென்றதாக கூறும் ஓட்டுநர் அன்பில் மகேஷ் ஓட்டுநர் அல்ல. லஞ்சம் கொடுப்பதை அவரே வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். அதைத்தான் முக்கிய ஆதாரமாக காவல்துறை கருதுகிறது.
முத்துக்குமாரை காவலில் எடுத்ததும், காவல்துறை ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருப்பது போல, அன்பில் மகேஷ் முறை கேட்டில் ஈடுபட்டார் என காவல்துறைஅறிவிக்க உள்ளது” என்று காரசாரமான வாதங்களை முன் வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இந்த வழக்கில் வரும் நவம்பர் 10ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 7ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்பில் மகேஷ் புழல் சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.









