தஞ்சாவூர் கண்டியூர் கோயில் நிலத்தில் தந்தை பெரியார் சிலை- அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

By Mathi

|

Published on 5 Nov 2026, 3:26 PM

Kandiyur-Periyar Statue

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் நிலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை 4 வாரங்களுக்குள் அகற்றி, வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருக்கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் நிலத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் ராம. ரவிக்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அந்த மனுவில், ”கண்டியூரில் சர்வே எண் 313/35-ல் உள்ள கோயில் நிலத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை அகற்றுவது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கடந்த ஜூலை 8-ந் தேதி பரிந்துரை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் சிலையை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ADVERTISEMENT

வழக்கின் முந்தைய விசாரணையின்போது, பெரியார் சிலை அமைந்துள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். கோயில் நுழைவாயிலுக்கும் சுற்றுச்சுவருக்கும் இடையே உள்ள தூரம், சிலை அமைந்துள்ள இடம் ஆகியவற்றைக் குறிக்கும் வரைபடத்தைத் தாக்கல் செய்யவும், கோயிலுக்கு வெளியே சிலையை வைப்பதற்கு மாற்று இடம் உள்ளதா என்பதைத் தெரிவிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அந்த அறிக்கையில், பெரியார் சிலை அரசு புறம்போக்கு நிலத்தில் (Government Poramboke Land) இல்லை என்றும், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் (Temple Land) அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அக்டோபர் 30-ந் தேதி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, பெரியார் சிலை அரசு புறம்போக்கு நிலத்தில் இல்லை. கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை நிறுவுவதற்கு கோயில் நிர்வாகத்திடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது உரிய அதிகாரிகளிடமோ அனுமதி பெறப்படவில்லை.

எனவே, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பெரியார் சிலையை கோயில் நிலத்திலிருந்து பாதுகாப்பாக அகற்றி, வேறு பொருத்தமான இடத்தில் வைக்க வேண்டும். இந்த நடவடிக்கையை 4 வாரங்களுக்குள் முடித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.(Since the statue is installed in the temple land without obtaining permission either from the temple authority or from the District Collector or from any other competent authority, the 4th respondent / District Collector is directed to remove the said statue safely from the temple land and also place it in some other suitable place within a period of four weeks from today and file a report.)

இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து அறிக்கை பெறுவதற்காக 4 வாரங்களுக்குப் பிறகு வழக்கை மீண்டும் பட்டியலிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவு

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel