- சி. மகேந்திரன்
அரசியல் மற்றும் சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்குப் பிளேட்டோவின் புகழ்பெற்ற ‘குகை ஒப்புமை’ (Allegory of the Cave) ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாக அமைகிறது. குகைக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனிதர்கள், சுவரில் விழும் நிழல்களை மட்டுமே உண்மை என நம்புகிறார்கள். குகைக்கு வெளியே வந்து நிஜ உலகைப் பார்த்த ஒருவன் திரும்பிச் சென்று, “வெளியே நிஜ உலகம் இருக்கிறது” என்று சொல்லும்போது, குகைக்குள் இருப்பவர்கள் அவன் சொல்வதை நம்ப மறுக்கிறார்கள்; அவனைப் பைத்தியக்காரன் என்கிறார்கள்.
இன்றைய பாரம்பரிய அரசியல் கட்சிகளைக் குகைகளாகவும், அவற்றின் செயல்பாட்டாளர்களைச் சுவரில் விழும் நிழல்களை மட்டுமே உண்மை என்று நம்பும் மனிதர்களாகவும் கருத முடியும். இவர்களின் சிந்தனை அனைத்தும் 19, 20-ஆம் நூற்றாண்டுகளிலேயே உறைந்து போயிருக்கிறது. 21-ஆம் நூற்றாண்டின் யதார்த்தங்களைக் குகையில் விழும் நிழலாக மட்டுமே இவர்கள் கருதிக்கொள்கிறார்கள். இவர்களால் மாறிவரும் அரசியலை அனுமானிக்க முடிவதில்லை. காரணம்—பழைய மதிப்பீடுகளும் பழைய நம்பிக்கைகளுமே.
எதையும் காலாவதியான பார்வைகளால் அணுகக் கூடாது. கால மாற்றத்தில் நவீன அடக்குமுறைக் கருவிகள் உருவெடுத்துவிடுகின்றன. அவை கண்ணுக்குத் தெரியாமல் அடித்தள மக்களிடமிருந்துதான் தோன்றுகின்றன என்பது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. அவை ஆவேசம் கொண்டு ஆதிக்கச் சாம்ராஜ்யங்களை வேரோடு சாய்த்த பின்னர்தான் அவற்றின் தன்மையை நாம் புரிந்துகொள்கிறோம்.
புதிய வெகுஜன இயக்கங்களை மதிப்பிடுவதில் உள்ள குறைபாடுகளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பழைய மதிப்பீடுகளின் வெறுப்பிலிருந்து இதைப் பார்க்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். இது பற்றிய பல்வேறு விளக்கங்களை நவீனக் கோட்பாடுகள் நமக்குத் தருகின்றன. தேக்கமடைந்த மனநிலையை இந்தத் தெளிவின் மூலம் போக்கிக்கொள்ள முடியும்.

‘குகைக்குள்’ வாழும் மனிதர்களின் நம்பிக்கையைப் போல, தவெக தொண்டர்களைக் “வெறும் ரசிகர்கள்” என்னும் நிழலாக மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் யார், ஏன் சமூகப் பிரச்சினைகளோடு உறுதியான பிணைப்பைப் பெற்று இயக்கமாக மாறுகிறார்கள் என்பது புரிந்துகொள்ளப்படுவதே இல்லை. காலத்தின் தேவையால் உருபெற்ற விஜய்யின் தவெக அரசியலை, நவீனக் கோட்பாடுகளின் பின்னணியில் ஆராய்ந்து பார்ப்பது இங்கு அவசியமாகிறது.
மரபுவழிச் சட்டகங்களின் போதாமை
இருதுருவ அரசியலிலிருந்து விடுபடத் துடிக்கும் மக்களின் மனக்கொந்தளிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ஊழல் நிலவறைக்கட்டுமானங்கள் இதற்கு உதவி செய்கின்றன. இது ஒரு புற்றுநோய் போல் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்திய அழிவைச் சகித்துச் சகித்து, ஒரு கட்டத்தில் சகிக்க முடியாமல் போன மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். இதில் வாழ்ந்த மக்களின் செவிகள், சித்தாந்தப் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நியாயத்தை நாம் உணர்வது அவசியம்.

நிஜ உலக நெருக்கடிகள் மக்களை வேறொரு சமூகப்-பொருளாதார மனநிலைக்கு அழைத்துச் செல்கின்றன. மாற்று அதிகாரம் ஒன்று அவர்களுக்குத் தவிர்க்க முடியாத தேவை. இதற்குப் பழைய மரபுவழி மார்க்சீய, திராவிட இயக்கச் சட்டகங்கள் இன்று பொருத்தமுடையனவாக இல்லை. திராவிட இயக்கத்தின் இருதுருவ அரசியல் ஊழல் பெருக்கத்திற்குக் காரணமாக அமைந்தது என்பதை யாரால் மறுக்க முடியும்? கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டகங்கள் அரசியலைச் ‘சட்டமன்றம், தொழிற்சங்கம், பிரசுரங்கள்’ என்பதாக மட்டுமே பார்க்கின்றன. ஜனநாயகச் செயல்பாடுகளும் காலத்திற்கேற்ற அரசியலும் இல்லாத நிலையில், அவற்றில் கோஷ்டிச் செயல்பாடுகள் மட்டுமே கூடுதலாகி வருவதை என் சொந்த அனுபவத்தில் நான் உணர்கிறேன்.

சினிமாவும், பண்பாட்டு மாற்றமும்: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை
“விஜய் சினிமாவிலிருந்து வந்தவர்; இவருக்கு அரசியல், பொருளாதாரம் பற்றி என்ன தெரியும்?” என்பதுதான் இங்கு மையக் கேள்வியாக வைக்கப்படுகிறது.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல; அது மக்கள் திரளின் ஆசைகள், வேதனைகள், ஆத்திரங்களின் பிரதிபலிப்பு. ஊடகத்தின் வழியே பல பத்தாண்டுகளாகக் கட்டியமைத்துக்கொண்ட மக்கள் தொடர்பாடலின் பண்பாட்டு மூலதனத்தை அரசியலாக மாற்றுவது அறிவீனம் அல்ல; அது உத்தி சார்ந்த பரிணாமம். இந்தக்கோணத்தில் இதை ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்? இதற்கு எம்.ஜி.ஆர் காலத்தில் உருவான அதிமுகவைச் சான்றாகக் கொள்ளலாம்.

அதிமுக எளிய மக்களின் கட்சியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதற்குப் பல காரணங்கள் உண்டு. அதிமுகவின் தொடக்கமே எம்.ஜி.ஆரின் மக்கள் நாயகன் பிம்பத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டது. ஏழை எளியவர்களின் கண்ணீரைத் துடைக்கும் கதாநாயகனாகத் திரையில் தோன்றிய அவர், அரசியலிலும் அதே பிம்பத்தை உருவாக்கி அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டார். காமராஜர் விதைத்த கல்விப் பசியைப் போக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர் ‘சத்துணவுத் திட்டமாக’ விரிவுபடுத்தினார்.

திமுகவின் பரிணாம வளர்ச்சியையும் சமூக அடித்தளத்தையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும். அது தொடக்கத்தில் அறிவுசார் திராவிடக் கொள்கைப் பிரச்சாரம் செய்யும் மேடை இயக்கமாகவும், நடுத்தர வர்க்கப் படித்த இளைஞர்களின் அமைப்பாகவுமே பரிணமித்தது. ஆரம்பத்தில் இதன் மையம் நகர்ப்புற-நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்ததாகவும், மேடைப் பேச்சாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளால் வழிநடத்தப்படுவதாகவும் இருந்தது. இது அன்றைய பாமர மக்களுக்கும் எளிய விளிம்புநிலை உழைப்பாளிகளுக்கும் இடையே ஒரு பண்பாட்டு சித்தாந்த இடைவெளியை உருவாக்கியது. சமூக-பொருளாதார ரீதியாகச் சற்று முன்னேறிய இடைநிலைச் சமூகங்களிடமும், படித்த இளைஞர்களிடமும் மட்டுமே அக்கொள்கை ஆழமாகச் சென்றடைந்தது. இந்த சித்தாந்த இடைவெளியையும் எளிய மக்களின் தேவைகளையும் சரியாகக் கணித்துதான், எம்.ஜி.ஆரின் அதிமுக தன் மக்கள் தளத்தை விரிவுபடுத்திக்கொண்டது. இதிலுள்ள வர்க்க பண்பாட்டு அடிப்படைகளை நாம் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
‘நடிகரின் கட்சி’ என்று இழிவுபடுத்தப்பட்ட எம்.ஜி.ஆர் களத்தில் இருந்தவரை அவரைக் காயப்படுத்த யாராலும் முடியவில்லை; திமுகவால் ஆட்சியைக் கைப்பற்றவே முடியவில்லை. 1977, 1980, 1984 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ந்து வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் காலத்திலும் திமுகவை வீழ்த்தி அதிமுக அடைந்த வெற்றிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

எம்.ஜி.ஆர் காலத்து அச்சு ஊடகச் சூழலிலிருந்து இன்றைய டிஜிட்டல் ஊடகச் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்றபோதிலும், பண்பாட்டு நாயக பிம்பம் அரசியல் சக்தியாக மாறும் அடிப்படைப் புள்ளி ஒன்றே. எம்.ஜி.ஆர் எப்படித் திரையில் “ஏழைகளின் தோழன்” என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தாரோ, அதேபோல் நடிகர் விஜய்யும் தனது திரைப்படங்கள் மூலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் பாத்திரங்களில் வந்து கோடிக்கணக்கான பாமர மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். ஊழலை எதிர்த்து ஒரு மாற்றுச் சக்தியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வது இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான அம்சமாகும்.
தற்குறி முத்திரையும் மேல்தட்டுப் பார்வையும்
இறுதியில் ஒன்றைக் கூற வேண்டும். இன்றைய காலத்தில் விஜய் மீதும் தவெக மீதும் வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டு, அவர்கள் ‘தற்குறிகள்’, ‘அரசியலற்றவர்கள்’ என்பதுதான். இது மேல்தட்டு வர்க்கத்தின் (Elitism) வழியாகப் பார்க்கப்படும் பார்வையாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆதிக்க வர்க்கம், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் அனைவரின் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துவிடுகிறது.
இன்று வாய்ச்சொல் வீரர்கள் பெருகிவிட்டார்கள். இவர்கள் மேடைகளில் வீர வசனங்களைப் பேசுவார்கள்; காட்சி ஊடகங்களில் தோன்றி சித்தாந்த புலிகளாகக் காட்டிக்கொள்வார்கள். எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை வேலைவாய்ப்பு, கல்வி, சமத்துவம் ஆகியவற்றோடு இணைப்பதுதான் சித்தாந்தம் என்ற அடிப்படையைப் புரிந்துகொள்ளாத இவர்களைச் ‘சித்தாந்தப் புலிகள் என்று கூற முடியாது சித்தாந்த போலிகள் என்றே கூற முடியும். இவர்கள்தான் ‘தற்குறிகள்’ என்ற சொல்லின் இன்றைய பிரச்சாரகர்கள்.
எனது நீண்ட மார்க்சீயப் பயணத்தில் கால மாற்றத்தைக் கணக்கில் கொள்வது அவசியமானது என்பதை அண்மைக்காலத்தில்தான் உணர்ந்துகொண்டேன். வர்க்கம் என்ற சொல்லுக்குள் அடைபட்டு அடித்தள மக்களின் எழுச்சியைப் புரிந்துகொள்ளாத போக்கு ஒன்று இடதுசாரி இயக்கங்களில் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இது புதிய பிரச்சினைகளைக் கண்டறிவதில் உள்ள குறைபாடாகவே எனக்குத் தெரிகிறது.
முரண்பாடுகள் நிறைந்த சமூகத்தில் விளிம்புநிலை மக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. ஆதிக்கச் சக்திகளோடு அவர்களுக்கிருக்கும் முரண்பாடுகளும் கூடுகின்றன. இவர்களை இடதுசாரி இயக்கங்கள் வர்க்க வகைப்பாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. மார்க்சீய மரபில் உதிரிப் பாட்டாளிகளை (Lumpenproletariat) அரசியல் உணர்ச்சியற்ற திரளாகப் பார்க்கும் பார்வை உண்டு. ஆனால், தவெக-வில் இணைந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதிரிப் பாட்டாளிகள் அல்லர்; மாறாக, அவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் பொருளாதார நெருக்குதலால் சுயமாக அரசியல் விழிப்புணர்வு பெற்ற புதிய செயலூக்கம் கொண்ட வர்க்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இது பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு மார்க்சீய அறிஞர் அந்தோனியோ கிராம்சி எனக்குத் தேவைப்படுகிறார். முசோலினியின் பாசிசத்தை எதிர்த்துப் போராடி, 19 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்து அங்கேயே உயிர்நீத்தவர் கிராம்சி. இவர் கருத்துப்படி, பல்கலைக்கழகங்களிலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட ‘கோட்பாட்டு முகாம்களிலோ’ படித்து உருவாகும் மேல்தட்டுப் புத்திஜீவிகளை விட (Traditional Intellectuals), மக்களின் அன்றாட வாழ்வியலோடு இயல்பாகப் பிணைந்து உருவாகும் ‘இயற்கையான சிந்தனையாளர்களே’ (Organic Intellectuals) சமூக மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
இவரைப் போலவே ரணஜித் குஹா இந்திய அடித்தள மக்கள் ஆய்வின் (Subaltern Studies) முன்னோடி. இவரும் மார்க்சீய அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டவர். இவருடைய சிந்தனைகளும், “ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்கு, ஆளும் வர்க்கத்தை வலுமையுடன் எதிர்க்கும் சுயமான அரசியல் உணர்ச்சி உண்டு” என்பதை நிறுவுகின்றன. இந்த இரண்டு அறிஞர்களின் கோட்பாடுகளும் இன்றைய அடித்தள மக்களின் தனித்துவமான ‘திரள் அரசியலுக்கான’ விளக்கத்தைத் தருகின்றன.

இந்த அடிப்படையில், விஜய் மற்றும் தவெக தொண்டர்களின் அரசியல் வருகையைச் “சினிமா மோகம்” என்று பிழைபடக் கூறுவது அடித்தள மக்களின் வரலாற்றை மூடிமறைக்கும் செயல்பாடாகும். உண்மையில், இது தமிழகத்தின் விளிம்புநிலை உழைக்கும் வர்க்க இளைஞர்கள், தங்களை ஒடுக்கிவைத்துள்ள பாரம்பரிய இருதுருவ ஊழல் அரசியல் அதிகாரக் கட்டமைப்பிற்கு எதிராக நிகழ்த்தும் நவீன அரசியல் நிகழ்வு என்பதை உறுதிபடக் கூற முடியும். ‘ஒழுங்கற்ற கும்பல்’ என்று விமர்சிக்கப்படும் இந்த மக்கள் திரளுக்குள், ஒரு மாற்றத்தை உருவாக்கும் அரசியல் உண்டு. ஒழுங்கற்ற தன்மைக்குள் தனித்துவமான ஒழுங்கை இவர்களால் அமைத்துக் கொள்ள முடியும் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
21-ஆம் நூற்றாண்டின் திரள் அரசியலும் எதிர்காலத் தேவையும்
இதன் உள்-செயல்பாட்டையும் இப்போது அறிந்துகொள்வது அவசியமாகிறது. பாரம்பரியக் கட்சிகளால் கைவிடப்பட்ட நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், இயற்கையைச் சூறையாடும் கொள்ளை மனப்பான்மை, ஊழல் மிகுந்த ஆட்சிமுறை ஆகியவற்றால் சிதைக்கப்பட்ட சமூகம், இவர்களை நவீன அரசியலைக் கற்க வைத்துவிடுகிறது. இதன் மூலம் தவிர்க்க இயலாத வகையில், ஒரு தனித்துவம் கொண்ட அரசியல் சார்ந்த போர்க்களத்தையும் இவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.
“மக்களை ஒரு கட்சி மேலிருந்துதான் வழிநடத்த வேண்டும்; அவர்களுக்குச் சித்தாந்தப் பாடம் எடுத்தால்தான் அரசியல் புரியும்” என்ற ‘மேலிருந்து கீழ் நோக்கிய’ அணுகுமுறைகள் இங்குப் பழசாகிவிட்டன. அடித்தள அரசியலைப் பின்பற்றும் செயல்பாட்டாளர்கள் தங்களின் அன்றாடப் பொருளாதார நெருக்கடியாலும், ஆளும் வர்க்கங்களின் ஏமாற்றங்களாலும் உந்தப்பட்டு, தானாகவே (Spontaneously) அரசியல் உணர்வு பெற்றுத் திரள் அரசியலுக்கு வந்து சேரும் புதிய நடைமுறைகள் உருவாகிவிட்டன. இங்குச் சினிமாவின் பண்பாட்டு நாயகத் தொடர்பு அனைத்தையும் இணைக்கும் ஒரு புள்ளியாக மாறுகிறது. அவர்களின் திரள் அரசியல் என்ற கூடுதலுக்குப் பின்னால் உள்ள வர்க்க நலன் சார்ந்த அரசியலையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது.
21-ஆம் நூற்றாண்டை டிஜிட்டல் யுகம் என்கிறோம். இதில்தான் திரள் அரசியல் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது. இதற்குக் காரணம் தகவல் பெருக்கம். கடந்த நூற்றாண்டுகளை விட இந்த நூற்றாண்டு தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைத் தந்திருப்பதைப் போல, அனைவரும் ஒருங்கிணைந்துகொள்ளும் டிஜிட்டல் வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளது.
இன்றைக்குத் தொழிலாளி என்பவர் வெறும் தொழிற்சாலை ஊழியர் மட்டுமல்லர். டிஜிட்டல் தகவல்களால் வளர்க்கப்பட்ட ஐடி நிறுவன ஒப்பந்த ஊழியர்கள், ஸ்விக்கி, சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள், வேலைதேடும் பட்டதாரிகள் எனப் பல நிலைகளில் வாழ்கிறார்கள். பழைய அமைப்புகளைத் தாண்டிப் பிறந்தவர்கள் இவர்கள். புதிய அரசியல் மற்றும் புதிய இயக்கங்களை இவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். இது 21-ஆம் நூற்றாண்டின் அரசியல்-பொருளாதார வெளிப்பாட்டின் முகிழ்வாக மாற்றம் பெறுகிறது. ஒருபுறம் வறுமை, மறுபுறம் அறிவுத்திறன் என்ற இரண்டு நிலைகளும் இவர்களிடம் இருக்கின்றன.

இந்த பின்னணியில்தான் விஜய்யின் அரசியல் வடிவம் பெறுகிறது. நவீன ஆதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக மதம், வர்க்கம், சாதி, பாலினம், வயது ஆகிய அடையாளங்களை ஒருங்கிணைத்து அது தனித்துவமான வெற்றியை சாத்தியமாக்குகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் தவெக-வின் முழக்கம், இந்த சமூகப் படிநிலைகளை அகற்றுவதையே குறிப்பிடுகிறது. அதிகாரக் குவியலை இதனால் உடைக்க முடிந்திருக்கிறது. புதிய தலைமுறைக்கான அரசியலை மௌனமாக கட்டி எழுப்ப முடிந்திருக்கிறது. இதை அடிப்படையில் ஒரு நவீன ஆதிக்க எதிர்ப்புச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தவெக-வின் தொண்டர்கள் எந்த அரசியல் பாரம்பரியமும் இல்லாத எளிய அடித்தட்டு மனிதர்கள். இவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்தே (Lived Experience) அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். தங்களைச் சுற்றி நடக்கும் லஞ்சம், வேலைவாய்ப்பின்மை, அதிகார வர்க்கத்தின் அலட்சியம் ஆகியவற்றை நேருக்கு நேர் சந்திப்பவர்கள் என்பதால், இவர்கள் மக்களின் இயல்பான ‘ஆர்கானிக்’ அரசியல் பிரதிநிதிகளாக மாறுகிறார்கள்.மக்கள் திரளின் ‘மாற்று அதிகாரம்’ இப்படித்தான் உருவாக்கம் பெறுகிறது.
ஆளும் கட்சிகளின் பண பலம் மற்றும் அதிகார இயந்திரத்திற்கு எதிராக, தங்களின் உழைப்பு, சுயசார்பான அர்ப்பணிப்பு மூலம் ஒரு புதிய கட்டுமானம் உருபெறுகிறது. இதில் இதன் விளைவுகள் முக்கியமானது. பழைய கட்சிகளில் அதிகாரம் குறிப்பிட்ட குடும்பங்கள் அல்லது மேல்தட்டுத் தலைவர்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால், விஜய் அரசியலில் சாதாரண ரசிகனும் எளிய இளைஞனும் தலைவராக உருவெடுக்க முடிகிறது. இது தான் இந்த நவீன கட்டுமானம் சமுதாயத்திற்கு அளித்துள்ள உயர்நிலை..
அதேவேளையில், ஒரு நீண்டகால அரசியல் பயணத்தில் பல்வேறு நெருக்கடி மிக்க இடர்பாடுகளை தொலை தூரப் பார்வையில் புரிந்த கொள்ள வேண்டும். தானாக உருவெடுத்த இந்த திரள் அரசியல், வெறும் உணர்ச்சியாக முடங்கிவிடாமல் தெளிவான சமூக-பொருளாதாரக் கொள்கைகளுடன் கூடிய அமைப்பாக மாற வேண்டும். அதற்குத் தொண்டர்களுக்குக் கருத்தியல் பயிற்சியும், தெளிவான கொள்கை வழிநடத்தலும் இன்றியமையாதது. தவெக தன் தொடக்ககாலக் கட்டமைப்பை தங்கள் அறிவார்ந்த அரசியல் அமைப்பாகத் தகுதிப்படுத்திக் கொள்வது காலத்தின் அவசியமாகும்.

வரலாற்றுத் தேவை
சமூகத்தில் ஆழமாகப் புரையோடிய ஊழலையும், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் தேக்கநிலையையும் சகித்துக்கொள்ள முடியாமல் எழும் விளிம்புநிலை மக்களின் எழுச்சியை வெறும் ‘சினிமா மோகம்’ என்றோ, ‘அரசியலற்ற தற்குறித்தனம்’ என்றோ முத்திரைக்குத்துவது சூழ்ச்சிகளை உள்ளடக்கிய அறிவுசார் வன்முறையாகும். எளிய மக்களின் உண்மையான வரலாற்றை திட்டமிட்டு தடுக்கும் இந்த செயல்பாட்டை வன்முறை என்றுதான் கூற வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தின் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தானாகவே (Spontaneously) அரசியல் தெளிவு பெற்ற இளைஞர்களின் திரள் அரசியலே விஜய் அவர்களின் தவெக முன்னெடுக்கும் நவீன அரசியல். பழைய காலாவதியான மதிப்பீடுகளின் வெறுப்பிலிருந்து இதைப் பார்க்கக் கூடாது. மேல்தட்டு வர்க்கத்தின் (Elitism) மேட்டிமைப் பார்வையை விலக்கி, காலத்திற்கேற்ற இந்தப் புதிய அரசியல் பாய்ச்சலைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே இன்றைய வரலாற்றுத் தேவையாகும்.
கட்டுரையாளர் குறிப்பு

(மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், தமிழக வெற்றி கழக முதன்மை செய்தி தொடர்பாளர், ’வீர வாகை’ நாளிதழ் ஆசிரியர்)









