“வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனை தொடக்கம்

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2026, 12:25 PM

தீபாவளியையொட்டி, அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு’ ரூ. 100-க்கு இன்று (நவ. 5) முதல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தீபாவளி திருநாளை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகளை உள்ளடக்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ஒன்று ரூ.100 என்ற சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டக சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் 4 நடமாடும் காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது..

ADVERTISEMENT

ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும். ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருட்களின் விபரம்

பெரிய வெங்காயம் – 500 கிராம்
தக்காளி – 500 கிராம்
கத்தரிக்காய் – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
கேரட்- 200 கிராம்
பீன்ஸ் -200 கிராம்
பச்சை மிளகாய் -100 கிராம்
எலுமிச்சை-100 கிராம்
இஞ்சி-50 கிராம்
தேங்காய் -400-450 கிராம் ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இத்தொகுப்பின் மொத்த எடை 2.55 முதல் 2.60 கிலோ வரை இருக்கும். இதன் விலை ரூ.100 ஆகும்.

இந்நிலையில் இன்று “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் பொதுமக்களுக்கு காய்கறித் தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, ஒன்று அல்லது இரண்டு கொடுக்கலாம் கட்டுப்பாடு இல்லை என்றார்.அப்போது உடன் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அமைச்சரை பார்த்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கோவையில் சிந்தாமணி பகுதியில் உள்ள கூட்டுறவு அங்காடியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் காய்கறி சிறப்பு தொகுப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பவன் குமார், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் இந்த சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் மொத்தம் 13 கூட்டுறவு அங்காடிகளில் இந்த விற்பனை நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel