மரபையும் பண்பையும் வேட்டியிலும் தலைமுடியிலுமா தேடுவது?

By Minnambalam Desk

|

Published on 5 Nov 2026, 11:52 AM

அ. குமரேசன்

கலாச்சாரத்தைக் காப்பாற்றவென்று அவ்வப்போது பல வகையான காவலர்கள் கிளம்புகிறார்கள். அவர்களுடன் போட்டியிட்டு அந்தப் பட்டப்பெயரைத் தங்களுக்கென வசப்படுத்த நினைத்தார்களோ என்னவோ,  அதைக் கைப்பற்றும் வேலையைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்திருக்கிறார்கள் தவெக அரசின் இரண்டு அமைச்சர்கள்.

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு விழா நிகழ்ச்சியில் (நவம்பர் 1) அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் ஒருநாள் மரபு உடையில் வர வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவின்படி அறிவிக்கப்படுவதாகக் குரலுயர்த்திக் கூறினார். ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் புடவையிலும் வரவேண்டுமாம்.

முதலமைச்சரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நீங்க பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் வர்றீங்க பாருங்க. அதைப் பார்க்கிறபோது அப்பிடி இருக்குது… அந்த இடமே கல்யாண வீடு மாதிரி இருக்குது, திருவிழாக் கோலம் போல இருக்குது,” என்று அமைச்சர் சொன்னாராம். முதலமைச்சர் “அதுக்கு என்ன இப்ப” என்ற பொருளில் “சரி…” என்றாராம். “நீங்க இப்படி வர்ற மாதிரி, தலைமைச் செயலகம் முதல் அலுவலகங்கள் வரையில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டையில் வந்தால் நல்லா இருக்குமே,” என்று இவர் சொன்னாராம். அவர் ஏற்றுக்கொண்டாராம்.

ADVERTISEMENT

யாருடன் விவாதிக்கப்பட்டது?

தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தைக் காப்பதாக, நெசவாளர்களுக்கு உதவுவதாக, கைத்தறித் தொழிலை ஊக்குவிப்பதாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.  தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபோடும், கிட்டத்தட்ட 14 லட்சம் அலுவலர்களின் ஆடைப் பழக்கத்தோடும் தொடர்புள்ள இந்த அறிவிப்பு குறித்து அவர்களுடன் ஏதேனும் குறைந்த அளவிலான ஆலோசனைகளோ விவாதங்களோ நடத்தப்பட்டதாகத் தகவல் இல்லை. தனது துறை அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்டதாகவும் அவர்கள் முதலமைச்சரிடம் கேளுங்கள் என்று கூறியதாகவும் அமைச்சர் அந்த விழாப் பேச்சில் தெரிவித்தார். 

ADVERTISEMENT

முதலமைச்சரும் அமைச்சரும் பேசியதே நிறைவான ஆலோசனைதான், விரிவான விவாதம்தான் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் போலும். கேட்டால், முந்தைய அரசு அதை அறிவித்ததே, இதை அறிவித்ததே அதையெல்லாம் விரிவாக விவாதித்துதான் செய்தார்களா என்ற எதிர்க் கேள்வியையே விளக்கமாக அளிப்பார்கள். 

ஒரே மாதிரியாகவா?

வாரத்தில் ஒருநாள்தான் என்றாலும் குறைந்த அளவிலான பகுத்தறிவுடனும் சமூக அக்கறையுடனும் கையாள வேண்டிய முடிவு இது. இந்த வாரமொருநாள் வேட்டி– புடவை ஆணை அலுவலகங்களிலும் பள்ளிகள் கல்லூரிகளிலும் உட்கார்ந்து வேலை செய்கிற ஊழியர்களுக்கு மட்டுமா அல்லது அலுவலக உதவியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மருத்துவர்கள் – இவர்களுக்கும் பொருந்துமா என்று கேட்கலாம்தான். அது குதர்க்க வாதமாகிவிடும் என்பதாலும், அப்படி அறிவிக்கிற அளவுக்கு அரசு போயிவிடவில்லை என்பதாலும் அதைக் கேட்காமலே விட்டுவிடலாம். 

ஆனால்,  தழையத் தழைய வேட்டி–புடவை கட்டுவது மட்டுமே தமிழ்நாட்டு ஆடை மரபா? அவை தொன்மைப் பெருமையுள்ள ஆடைகள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் அவற்றைக் கட்டிக்கொள்ளும் நடைமுறைகள் மாறுபட்டு இருந்து வந்திருக்கின்றன.

அரசர்கள் தட்டுச் சுற்றாக இல்லாமல் கணுக்கால் வரையில் இழுத்துவிட்டு பஞ்சகச்சம் போல அணிந்திருந்ததைக் கோயில் சிலைகள் காட்டுகின்றன. அரசிகளும் அப்படியே அதுபோலத்தான் அணிந்திருக்கிறார்கள்.

நிலக்கிழார், வணிகர் போன்றோர் தட்டுச்சுற்றாக அணிந்திருப்பார்கள். விவசாயிகள் வயலில் இறங்கத் தோதாக மடித்துக் கட்டியிருப்பார்கள். விவசாயத் தொழிலாளர்கள் கோமணத்துடன் இறங்கியிருப்பார்கள். பாட்டாளிப் பெண்கள் முழங்கால் வரையில் சேலையை ஏற்றிக் கட்டியிருப்பார்கள். படைவீரர்கள் கால்சட்டை அணிந்திருப்பார்கள். ஒரு பிரிவுப் பெண்கள் தோள் சீலைப் போராட்டமே நடத்தி வெற்றி பெற்ற வரலாறும் இங்கே உண்டு.

மாறிய பழக்கம்

பிரிட்டிஷ் ஆட்சியைத் தொடர்ந்து பெரிய மாற்றங்கள் ஆடைப் பழக்கத்தில் ஏற்பட்டன. நடுத்தர வர்க்க ஆடையாகப் பரவலாகத் தொடங்கியது. காலப்போக்கில் பேன்ட் சட்டைஇயல்பான உடையாகியது. பெண்களுக்கும் சுடிதார், சல்வார் கம்மிஸ் ஏற்புடையதானது. இன்று பெண்களும் சுதந்திர உணர்வோடு பேன்ட் சட்டை அணிகிறார்கள். பெரும்பாலும் பண்டிகைகள், மணவிழாக்கள், வழிபாடுகள் உள்ளிட்ட கூடுகைகளில் ஒரு பண்பாட்டு அடையாளமாகவே வேட்டியும் புடவையும் அணியப்படுகிறது.

ஆடைச் சுதந்திரம் 

எந்த ஆடையானாலும் அது வெறுமனே அழகிய தோற்றமும் மரபுப் பெருமிதமும் மானத்தைக் காக்கும் கடமையும் சார்ந்தது மட்டுமல்ல. அவையெல்லாம் உண்டு என்றாலும், அவற்றின் பங்கு குறைவுதான். பெரும்பங்கு எதுவென்றால், நடக்கிற வசதி, அமர்கிற வசதி, எழுகிற வசதி என அவரவர் நடமாட்ட வசதிக்கானதுதான்.

‘பெண்களுக்கு ஏற்ற உடை எது’ என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில், “உன்னிடம் எவனும் வம்பு செய்வானானால் காலைத் தூக்கி எட்டி உதைப்பதற்கு எந்த உடை ஏதுவாக இருக்குமோ அதை அணிந்துகொள், பேருந்து நிறுத்தத்தில் நூறடியாவது தள்ளி நிற்கிற வண்டியை ஓடிப்பிடிக்க எது தோதாக இருக்குமோ அந்த உடையைப் போட்டுக்கொள்,” என்று பதிவு செய்தேன். ‘பெண்ணே நீ’ மாத ஏட்டில் வந்த அந்தக் கட்டுரையின் கருத்துக்கு அதைப் படித்த  பெண்கள் தங்களது ஆதரவையே தெரிவித்தார்கள்.

வசதிக்கேற்ப பண வசதியல்ல, உடல்வாகு வசதி தேர்ந்தெடுத்து அணிவதே  ஆடைச்சுதந்திரம். எவ்வளவோ வக்கிரத்துடன் சாடினாலும் பெண்ணின் அந்த உரிமையைப் பறித்துவிட முடியாது.

இப்போதும் அலுவலகத்திற்கு வேட்டி, சட்டையுடன் வந்து உழைக்கிற ஆண் பணியாளர்கள் இருக்கிறார்கள். கணிசனமான பெண்கள் சுடிதார், பேன்ட் சட்டை என மாறிவிட்டாலும், பெரும்பாலானவர்கள் புடவையில் வருகிறார்கள். இதை அவரவர் விருப்பத் தேர்வாக விட்டுவிடுவதுதான் அரசின் ஆளுகைப் பண்பாக இருக்க முடியும்.  அரசு அலுவலகங்களில்  தமிழ்நாட்டின் பன்முகப் பண்பாட்டு மாண்புக்கு சாட்சியமாக இருக்கிற பல்வேறு பிரிவினர், பிற மாநிலத்தவர்கள் –இவர்களுக்கும் மதிப்பளிப்பதாக இருக்கும்.

ஆகவே, முதலமைச்சரும் அமைச்சரும் இன்னொரு தடவை இது பற்றிப் பேசுங்கள். அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கிற கருத்துக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோரின் விமர்சனத்திற்கும் செவிமடுத்திடுங்கள். இன்றளவும் பல்வேறு அரசுத்துறைகளின் ஊழியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுகிறார்கள், அவர்களுடன் பேசித் தீர்வு காண்கிற மரபை நிலைநாட்டுங்கள்.

மொட்டையடிப்பு எச்சரிக்கை

தமிழர் மரபை ஆடையில் பார்ப்பது போல, மாணவர் பண்பைத் தலைமுடியில் பார்க்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயன்ரெட்டியாபட்டி கிராமத்தின் அரசுப் பள்ளி விழாவில் பங்கேற்ற சமூக நலம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறைகளின் அமைச்சர் ஜெகதீஸ்வரி, இக்கால மாணவர்களின் ஒழுக்கத்தைத் தலைமுடியில் ஆராய்ந்திருக்கிறார்.

பள்ளி மாணவர்கள் சிலர் ரவுடிகள் போல தப்புத் தப்பாக தலைமுடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மாணவர்கள் ஒழுங்கான முறையில் முடிவெட்டிக்கொண்டு வர வேண்டும் என்றும், அப்படி வராதவர்களுக்கு மொட்டையடித்தாலும் தப்பில்லை என்றும் பேசினார்.

பொதுவாக, “பசங்களுக்கு இப்படிச் செய்தால்தான் புத்தி வரும்” என்று பெற்றோர்கள் பேசுவதைப் பள்ளிக் கூடச் சுவர்கள் கேட்டிருக்கின்றன. இம்முறை அவர்கள் உட்படப் பலரும் அமைச்சரின் இந்தப் பேச்சை ஏற்கவில்லை. சமூக ஊடகங்களில், ஒரு பகுதியினர் மாணவர்கள் ஒழுக்கமாக (?) வளர இப்படிப் பேசுவதில் தவறில்லை என்று அமைச்சருக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆயினும் பெரும்பாலானவர்கள் ஏற்பின்மையையே வெளிப்படுத்தினார்கள். குழந்தைகளின் உரிமையை மதிக்காத போக்கு என்று விமர்சித்தார்கள். இது வளரும் குழந்தைகளிடையே எதிர்நிலை அணுகுமுறைகளை ஊன்றிவிடும்.  இப்படிப்பட்ட தண்டனைகளுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையோடு உளவியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக்கூடும். உளவியலாளர்களும் சமூக அக்கறையாளர்களும் விடுக்கிற இந்த எச்சரிக்கைகளை அமைச்சரும் அவரை ஆமோதிக்கிறவர்களும் புரிந்துகொண்டாக வேண்டும். 

பள்ளிக் குழந்தைகள் தங்களுக்குள் மத வேறுபாடுகள் இல்லாமல் பழகுகிறார்களா என்பதில், பள்ளி வளாகத்துக்கு வெளியே மட்டுமல்ல உள்ளேயே கூட ஊடுருவும் சாதிய வன்மங்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்களா என்பதில், பெண் குழந்தைகளை சமமாக மதித்து நடத்துகிறார்களா என்பதில், பாலின அடையாளம் மாறக்கூடியவர்களை இளக்காரமாகக் கருதாமல் நெருங்குகிறார்களா என்பதில், மூட நம்பிக்கைகளை மறுக்கிறார்களா என்பதில், வகுப்பறைக்குள் பாடங்களைப் பயில்வதில் ஆரோக்கியமான போட்டியில் ஈடுகிறார்களா என்பதில். தயங்காமல் கேள்வி கேட்கக் கற்கிறார்களா என்பதில்…. இவற்றில்தான் மாணவர்களின் பண்பையும் ஒழுக்கத்தையும் தேட வேண்டும் . தலைமுடியில் அல்ல. அச்சமின்றி, ஒடுக்கப்படுகிற உணர்வின்றி வகுப்பறையில் சிறகடிக்கிற குழந்தைகள் தங்களின் தலைமுடியை வாரிக்கொள்வது உள்ளிட்ட பழக்க வழக்கங்களைத் தாங்களே பண்படுத்திக்கொள்வார்கள்.

எட்டாம் வகுப்பு வரையில் சத்துணவு வழங்குவது போன்ற வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தவெக அரசு இதை உள்வாங்கிக்கொண்டு செயல்படட்டும். அதுதான் ஆட்சிக்கு நற்பெயர் பெற்றுத் தரும், அதிரடிப் அறிவிப்புகளும் பேச்சுகளும் அல்ல.

பழக்க வழக்கங்களில் பற்பல மாறுபாடுகள் இருப்பினும், வெறிப் பேச்சுகள் உள்ளிட்ட திசைதிருப்பல்கள் நடந்துகொண்டே இருந்தாலும், நாம் ஒரு தாய் மக்கள் என்ற  உணர்வோடு தமிழ் மக்கள் கட்டிக் காத்து வருகிற பண்பாட்டு ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தாக வேண்டும். முதலமைச்சரும் அமைச்சர்களும் இதற்காகத் தங்கள் கரங்களை நீட்ட வேண்டும். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel