வழக்கை வாபஸ் பெற்ற பாஜக கவுன்சிலர்… பொன்முடி விடுவிப்பு!

By Kavi

|

Published on 5 Nov 2026, 1:16 PM

சைவம் வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும் சைவம் வைணவம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். 

ADVERTISEMENT

அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் பாஜக கவுன்சிலரான உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனி புகார் அளித்தார். 

ADVERTISEMENT

மத வெறுப்பை தூண்டும் வகையிலும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் பொன்முடி பேசியதாக குற்றம் சாட்டிய உமா ஆனந்தன், பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

பின்னர் இந்த வழக்கு ஜார்ஜ் டவுனில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரபாண்டியன் முன்பாக நடைபெற்று வந்தது. 

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்காக பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி உள்ளார் என்றும் அவரது வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாகவும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. அதேசமயம் பொன்முடி மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. அவரை குற்றவாளியாக அறிவிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடியை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel