”ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று பல மணி நேரம் காவலில் வைத்துவிட்டு, அதன் பிறகு கைது செய்ததாக கணக்குக் காட்ட முடியாது; ஒருவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அவர் காவலில் வைக்கப்பட்ட நேரத்திலிருந்தே 24 மணி நேரம் கணக்கிடப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 5) முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக 4 பேரை பிற்பகல் 2 மணிக்கு போலீசார் காவலில் எடுத்தனர். இந்த வழக்கில் 11.03 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் மறுநாள் செப்டம்பர் 30-ந் தேதி காலை 11 மணிக்குத்தான் அந்த 4 பேரையும் கைது செய்ததாக போலீசார் பதிவு செய்தனர். அதாவது, அவர்களை முதலில் காவலில் எடுத்ததற்கும், முறைப்படி கைது செய்ததாகப் பதிவு செய்ததற்கும் இடையே 21 மணி நேரம் இடைவெளி இருந்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4 பேரும் திரிபுரா உயர்நீதிமன்றத்தை நாடினர். போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஜாமீன் வழங்குவதற்குக் கடுமையான சட்ட நிபந்தனைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் அவர்களது மனுக்களை நிராகரித்தது.
இதை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தீர்ப்பின் முழு விவரம்
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒருவரை விசாரணைக்காக காவலில் எடுத்த நேரத்தையும், முறைப்படி கைது செய்ததாகப் பதிவு செய்த நேரத்தையும் தனித்தனியாகக் கணக்கிட முடியாது என்று தெரிவித்தனர்.
ஒருவரை போலீசார் தங்கள் காவலில் கொண்டு வந்துவிட்டாலே, அவர் விரும்பியபடி அங்கிருந்து வெளியே செல்ல முடியாது. அந்த நேரத்திலிருந்தே அவரது தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
எனவே, போலீசார் எந்த நேரத்தில் கைது செய்ததாகப் பதிவு செய்திருந்தாலும், உண்மையில் அந்த நபரை முதலில் காவலில் எடுத்த நேரத்திலிருந்துதான் 24 மணி நேரம் கணக்கிடப்பட வேண்டும்.
அதாவது, கைது நடவடிக்கையிலிருந்து தனியாக ஒரு தடுப்புக் காவல் முறையை அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. விசாரணைக்காக அழைத்துச் சென்றது வேறு, கைது செய்தது வேறு என்று கூறி ஒருவரின் அடிப்படை உரிமையை மறுக்க முடியாது (The Constitution does not recognise any detention divorced from arrest) என்று தெரிவித்தனர்.
மேலும், ”அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2)-வது பிரிவின்படி, கைது செய்யப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும். இதற்கான நேரம் அவரை முதலில் காவலில் எடுத்ததிலிருந்தே தொடங்குகிறது.
விசாரணை நடத்துவதற்காக எடுத்துக்கொண்ட நேரத்தை இந்த 24 மணி நேரக் கணக்கிலிருந்து கழிக்க முடியாது. கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்வதற்குத் தேவையான பயண நேரத்தை மட்டுமே கழித்துக்கொள்ளலாம்.
ஒருவரைச் சிறிது நேரம் மட்டுமே விசாரணைக்காக காவலில் வைத்திருந்தோம் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. அடிப்படை உரிமையைச் சிறிது நேரத்திற்கு கூட நிறுத்திவைக்க முடியாது.
அப்படிப் பார்த்தால், எவ்வளவு நேரம் விசாரணைக்காக காவலில் வைத்திருக்கலாம் என்பதை யார் முடிவு செய்வது? எந்த நேரத்திலிருந்து அது கைது நடவடிக்கையாக மாறுகிறது? என்ற கேள்விகள் எழும்.
எனவே, ஒருவரை முதலில் காவலில் எடுத்த நேரத்திலிருந்தே 24 மணி நேரத்தைக் கணக்கிட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
நீதிபதிகளுக்கு முக்கிய உத்தரவு
அத்துடன்,
- கைது செய்யப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது, அவரை உண்மையில் எந்தத் தேதி, எந்த நேரத்தில் போலீசார் முதலில் காவலில் எடுத்தார்கள் என்பதை நீதிபதி பதிவு செய்ய வேண்டும்.
- அந்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளாரா என்பதை சரிபார்க்க வேண்டும். இந்தக் காலக்கெடு மீறப்பட்டிருந்தால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- அதேநேரத்தில், 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்தப்பட்டுவிட்டார் என்பதற்காக மட்டும் போலீசாரின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
- உதாரணமாக, ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று 20 மணி நேரம் காவலில் வைத்திருந்துவிட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினால், அவ்வளவு நேரம் அவரைக் காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையும் நீதிபதி ஆராய வேண்டும்.
- அந்த வழக்கின் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையற்ற அளவுக்கு அதிக நேரம் காவலில் வைத்திருந்தது தெரியவந்தால், அவரை மேலும் காவலில் வைக்க அனுமதி மறுக்கலாம்.
- ஒருவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது அதிகபட்ச காலக்கெடுதான். அதற்காக எந்தக் காரணமும் இல்லாமல் 24 மணி நேரம் முழுவதும் காவலில் வைத்திருக்கலாம் என்று அர்த்தமல்ல.
- போலீஸ் காவலில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, காவலில் வைக்கப்படும் நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் நிராகரிப்பு
அத்துடன், ஒருவரை முறைப்படி கைது செய்வதற்கு முன்பு விசாரணைக்காக காவலில் வைத்திருந்த நேரத்தை, நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேரக் கணக்கில் சேர்க்க வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் Kannan வழக்கிலும், ஒடிசா உயர்நீதிமன்றம் Aryaman Pattanaik வழக்கிலும், கேரள உயர்நீதிமன்றம் Arun K Thomas வழக்கிலும் அளித்த தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
இந்த மூன்று உயர்நீதிமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2)-வது பிரிவுக்குத் தவறான சட்ட விளக்கத்தை அளித்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. (The decisions of the Orissa High Court in Aryama Pattnaik, Madras High Court in Kannan, and Kerala High Court in Arun K Thomas, do not lay down the correct law qua interpretation of Article 22(2).
திரிபுரா உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
இந்த வழக்கில் 4 பேரும் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டனர். எனவே மறுநாள் செப்டம்பர் 30-ந் தேதி பிற்பகல் 2 மணிக்குள் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அன்றைய தினம் மாலை 4.45 மணிக்குத்தான் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதாவது, முதலில் காவலில் எடுத்த நேரத்திலிருந்து 26 மணி நேரம் 45 நிமிடங்கள் கடந்திருந்தன.
மேலும், சோதனை நடவடிக்கைகள் முடிந்த பிறகும் முறைப்படி கைது செய்வதற்கு முன்பும் சுமார் 18 மணி நேரம் அவர்களை நீதிமன்றக் கண்காணிப்பு இல்லாமல் காவலில் வைத்திருந்ததற்குச் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.
இது அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2)-வது பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும். போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவதற்குக் கடுமையான நிபந்தனைகள் இருந்தாலும், அவற்றைக் காரணம் காட்டி ஒருவரின் அடிப்படை உரிமையை மறுக்க முடியாது. எந்தவொரு சட்டமும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்புகளை மீற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, 4 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்த திரிபுரா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.









