வைஃபை ஆன் செய்ததும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது தொடர்பாக தேசிய பாஜக தலைமை அமைத்த குழு பற்றிய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டு வாசலில் பாஜக கொடிக் கம்பம் நிறுவுவது தொடர்பான பிரச்சினையில் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளது போலீஸ். 21 ஆம் தேதி சனி மாலை கைது செய்து தாம்பரம் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்ட அமர் பிரசாத்துக்கு நவம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமர் பிரசாத் கைது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வரை தகவல் அனுப்பி ஒ.கே. பெற்றுள்ள தகவல்கள் போலீஸ் வட்டாரங்களில் இருந்து கிடைக்கின்றன.
அன்று அக்டோபர் 20 ஆம் தேதி இரவு அண்ணாமலை வீட்டு வாசலில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்து ரிமாண்ட் செய்ய முதலில் போலீஸ் திட்டமிட்டது. இதை அறிந்த மத்திய உளவுத் துறையினர் (ஐபி) மாநில உளவுத்துறையினரிடம், ‘இவ்வளவு பேர் மீதும் தீவிர நடவடிக்கை எடுத்தால் தவறாகிவிடும்’ என்று தெரிவித்துள்ளனர். இதன் பின் அங்கே போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பக்கத்தில் கொண்டு சென்று தங்க வைத்த கானாத்தூர் காவல்துறை பிறகு அவர்களை விடுதலை செய்தது. ஆனால் ஜேசிபியை அடித்து உடைத்து போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த பிரிவுகளில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அண்ணாமலை வீட்டு வாசலில் அன்று இரவு நடந்த சம்பவங்களின் வீடியோக்களை மாநில உளவுத்துறை மேலிடம் பார்த்ததில் ஸ்பாட்டில் அண்ணாமலையின் வலதுகரமான அமர் பிரசாத் ரெட்டி இருந்தது தெரியவந்தது. அவர் மீதும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தது உளவுத்துறை. அண்ணாமலைக்கு நெருக்கமானவர் மட்டுமல்ல, இதுவரை பல முறை சமூக தளங்களிலும், பேட்டிகளிலும் திமுக அரசை மிகக் கடுமையாகவும், முதலமைச்சரை சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் விமரிசித்து வருபவர் அமர் பிரசாத்.
அதுமட்டுமல்ல., அன்று இரவு, ‘எங்கள் கொடியைத் தொட்டால் தமிழ்நாட்டில் உங்கள் கொடி பறக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார் அமர் பிரசாத். சில தினங்களுக்கு முன் பங்காரு அடிகளார் காலமான போது அங்கே அஞ்சலி செலுத்த அண்ணாமலையோடு சென்ற அமர் பிரசாத் போலீஸ் அதிகாரிகளிடம் காரசாரமாக ஒருமையில் பேசியிருக்கிறார். இந்த தகவலும் அப்போதே சென்னைக்கு வந்தது.
இந்த பின்னணியில் அமர் பிரசாத் மீதும் வழக்குப் போட்டு கைது செய்யலாம் என்ற முடிவுக்கு வந்த உளவுத் துறை மேலிடம், எதற்கும் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று முதலமைச்சருக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தியது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஐடி விங் விழாவில் தன்னார்வலர்களை சந்தித்துவிட்டு திருவள்ளூர் சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி வேணு மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுகொண்டிருந்த ஸ்டாலினிடம் இந்த விஷயம் குறித்து கேட்கப்பட்டது. ‘ஸ்பாட்ல இருந்தா போட்டுருங்க’என்று சிக்னல் கிடைத்ததும்தான் அமர் பிரசாத் ரெட்டி மீது பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய பிரிவு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு போடப்பட்டது. சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இந்நிலையில் அமர்பிரசாத் மீது அடுத்தடுத்த அதிரடி ஆக்ஷன்களுக்கும் தயாராகிறது தமிழ்நாடு போலீஸ், அவர் மீது ஏற்கனவே ஏதாவது புகார்கள், வழக்குகள் இருக்கிறதா என்ற தேடுதலில் இறங்கிவிட்டனர். செஸ் ஒலிம்பியாட்ஸ் போட்டிகளின் போது கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் விளம்பரத்தில் மோடி படம் இல்லை என்று சொல்லி மோடி படத்தை ஒட்டினார் அமர் பிரசாத். மேலும் நுங்கம்பாக்கத்தில் போலீஸாரை தடுத்த சம்பவம் ஒன்றில் அமர் பிரசாத் ஈடுபட்டிருந்தார். மேலும் ஆருத்ரா கோல்டு கம்பெனி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரீஷ் கடைசியாக போன் செய்தது அமர் பிரசாத் ரெட்டிக்குத்தான் என்று அப்போதே போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுபோன்ற விவகாரங்கள் மேலும் பாஜகவினர் சிலரே அமர் பிரசாத் மீது பணப் புகார்கள் கூறியிருந்ததை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது போலீஸ்,. இவற்றின் அடிப்படையில் அமர் பிரசாத் மீது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதுதான் போலீஸாரின் திட்டம். இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அமர் பிரசாத் ரெட்டி மீது போடப்படும் குண்டாஸ் உயர் நீதிமன்றத்தில் ஒருவேளை உடைக்கப்படலாம். ஆனால் இதுவரை கலைஞர், ஜெயலலிதா என்று எல்லா ஆட்சியிலும் உடைக்கப்படும் என்று தெரிந்துதான் குண்டாஸ் போடப்பட்டிருக்கிறது. அதுவரைக்கும் சில மாதங்களாவது சிறை வாசத்தை அனுபவிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இதற்கான பின்னணி என்கிறார்கள் ஆளுங்கட்சி வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.