வங்க கடலில் ‘கண்ணாமூச்சி’ ஆட்டம்! 9 மணி நேரமாக நகராமல் நிற்கும் அக்வான் புயல்!

By Mathi

|

Published on 17 Nov 2026, 8:16 AM

Cyclone Akvan Update

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் கடந்த 9 மணி நேரமாக குறிப்பிடத்தக்க அளவில் நகராமல், சென்னைக்கு கிழக்கே 610 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் இன்று (நவம்பர் 17) மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17-ந் தேதி அதிகாலை வெளியிட்டுள்ள புதிய புயல் எச்சரிக்கை அறிக்கையின்படி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் அக்வான் புயல் நிலைகொண்டுள்ளது.

ADVERTISEMENT

அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் 12.2 டிகிரி வடக்கு அட்சரேகை, 85.7 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் மையம் கொண்டிருந்தது. கடந்த 9 மணி நேரமாக புயல் குறிப்பிடத்தக்க அளவில் நகரவில்லை.

சென்னைக்கு கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் அக்வான் புயல் நிலைகொண்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஆந்திரா மாநிலத்தின் மச்சிலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 660 கி.மீ., விசாகப்பட்டினத்துக்குத் தெற்கு–தென்கிழக்கே 670 கி.மீ., ஒடிசாவின் கோபால்பூருக்குத் தெற்கே 790 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

நாளை மறுநாள் மிகத் தீவிர புயல்

அக்வான் புயல் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலைக்குள் மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், நாளை மறுநாள் நவம்பர் 19-ந் தேதி காலைக்குள் மிகத் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ADVERTISEMENT

நவ. 20-ல் ஆந்திராவில் கரையைக் கடக்கும்

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் அக்வான் புயல், நவம்பர் 20-ந் தேதி நண்பகலில் ஆந்திரா மாநிலத்தின் நெல்லூர் மற்றும் துனி இடையே, ஆந்திரா–ஏனாம் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அக்வான் புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் மற்றும் நவம்பர் 20-ந் தேதியும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை நவம்பர் 18 மற்றும் நாளை மறுநாள் 19-ந் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel