மனசாட்சியை உலுக்கிய போலி நூல்கள்.. 9 கேள்விகள்.. 20 ஆண்டுகால வெள்ளை அறிக்கை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு என்ன? முழு விவரம்

By Mathi

|

Published on 17 Nov 2026, 11:30 AM

Fake Book- GR Swaminathan

தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடு மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பெஞ்ச், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நூல் கொள்முதல் குறித்து விரிவான விசாரணை நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது தொடர்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று ராமசுப்பு என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கே.கோபால் ஐஏஎஸ், பொது நூலக இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா ஐஏஎஸ் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நவம்பர் 16-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.பி.எஸ்.பழனிவேல் ராஜன் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் பி.வி.பாலசுப்பிரமணியன், பி.சரவணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்தியன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அப்போது, பெரியார் அறிவுலகம் மற்றும் மதுரை கலைஞர் நூலகத்திற்கான நூல்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டன, கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா, நூல்களைத் தேர்வு செய்த அதிகாரிகள் யார், நிபுணர் குழுவின் பரிந்துரைகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது தொடர்பாக நீதிபதிகள் 9 முக்கிய கேள்விகளை எழுப்பினர்.

ADVERTISEMENT

1.பொது நூல் கொள்முதல் விதிமுறைகள் பெரியார் அறிவுலகத்திலும் பின்பற்றப்பட்டனவா?

    நூல்கள் கொள்முதல் செய்வது பொதுக் கொள்முதல் (General Procurement), சிறப்புக் கொள்முதல் (Special Procurement) என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    பெரியார் அறிவுலகத்திற்கான நூல்கள் சிறப்புக் கொள்முதல் பிரிவின் கீழ் வாங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், பொதுக் கொள்முதலுக்குப் பொருந்தும் விதிமுறைகளும் நிபந்தனைகளும் பெரியார் அறிவுலகத்திற்கான சிறப்புக் கொள்முதலிலும் பின்பற்றப்பட்டனவா? (Procurement of books has been categorised into two. a) General and b) special. Procurement for Periyar Arivulagam was under the special category. It may be clarified whether the same principles and conditions governing general procurement was applied to special procurement also)

    2.கலைஞர் நூலகம், பெரியார் அறிவுலகம் நூல்களை வாங்க எத்தனை நாட்கள்?

      மதுரை கலைஞர் நூலகத்திற்கும் பெரியார் அறிவுலகத்திற்கும் நூல்களைத் தேர்வு செய்து கொள்முதல் செய்ய எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது? இரண்டு நூலகங்களுக்கும் நூல்களைத் தேர்வு செய்ததிலிருந்து கொள்முதல் செய்தது வரையிலான கால அளவு என்ன? (How many days were taken to select and procure the books for Kalaignar Library, Madurai and Periyar Arivulagam?)

      3. இரண்டு நூலகங்களுக்கும் எத்தனை நூல்கள் வாங்கப்பட்டன?

      மதுரை கலைஞர் நூலகத்திற்காக 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை எத்தனை நூல்கள் வாங்கப்பட்டன? அதேபோல பெரியார் அறிவுலகத்திற்காக மொத்தம் எத்தனை நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன? (How many books were procured for Kalaignar Library, Madurai (January to December, 2025) and Periyar Arivulagam?)

      4.வல்லுநர் குழு நிராகரித்த நூல்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்டனவா?

      வெளிப்படைத்தன்மை விதிகளின்படி இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நூல் கொள்முதலில் வல்லுநர் குழு எத்தனை நூல்களை நிராகரித்தது? குறிப்பாக, வல்லுநர் குழுவால் நிராகரிக்கப்பட்ட நூல்களில் எத்தனை பெரியார் அறிவுலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்டன? (When procurement was made in two stages under the Transparency Rules, how many books were rejected by expert committee? How many books rejected by the expert committee were procured for Periyar Arivulagam?)

      5.137 பேர் கொண்ட வல்லுநர் குழு எத்தனை நூல்களைப் பரிந்துரைத்தது?

      நூல்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 137 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்தக் குழு மொத்தம் எத்தனை நூல்களைப் பரிந்துரைத்தது? நூல்களை ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்கு எவ்வளவு கால அவகாசம் வழங்கப்பட்டது? இறுதியாக எத்தனை நூல்கள் வாங்கப்பட்டன?(How many books were recommended by the 137-member expert committee? What was the time granted for this process? How many books were procured?)

      6.அகல்விளக்கு பதிப்பகத்தின் 600 நூல்களை நிராகரித்தவர்கள் யார்? 1,700 நூல்களைத் தேர்வு செய்தது எப்படி?

      முந்தைய விசாரணையின்போது, அகல்விளக்கு பதிப்பகம் 2,300-க்கும் மேற்பட்ட நூல் தலைப்புகளைச் சமர்ப்பித்ததாகவும், அவற்றில் 1,700 தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மீதமுள்ள சுமார் 600 நூல் தலைப்புகளை நிராகரித்தது யார் என்று கேட்டனர். அவை எந்தக் கட்டத்தில் நிராகரிக்கப்பட்டன? நிராகரிப்பதற்கான காரணங்கள் என்ன? அந்த முடிவுகள் எடுக்கப்பட்ட கூட்டங்களின் நடவடிக்கைக் குறிப்புகள் எங்கே? 600 நூல் தலைப்புகளை நிராகரிக்க முடிந்த அதிகாரிகள், மீதமுள்ள 1,700 தலைப்புகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்து வாங்கினார்கள்?நூல்களை நிராகரிப்பது தொடர்பான கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். (It was submitted on the last occasion that Agalvilakku submitted 2300 and odd titles and that 1700 were selected and procured. Who rejected the 600 titles of Agalvilakku and at what stage? What was the reason for such rejection? Copies of the minutes to be made available. If 600 titles of a publisher could be rejected, what made the officials to select and purchase the remaining 1700?)

      7.தமிழ், ஆங்கில நூல்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

      பெரியார் அறிவுலகத்திற்காக எத்தனை ஆங்கில நூல்கள் வாங்கப்பட்டன என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த நூல்கள் நேரடியாகப் பதிப்பாளர்களிடமிருந்து வாங்கப்பட்டனவா அல்லது புத்தக விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்டனவா? தமிழ் நூல்களுக்கும் ஆங்கில நூல்களுக்கும் தனித்தனியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் செலவிடப்பட்டதா? (How many English books were purchased for Periyar Arivulagam? Whether directly from publishers or from book sellers? What was the budget allotted for English books and Tamil books respectively? Has the entire budget amount has been utilised?)

      8.நூல் கொள்முதலை உயர் அதிகாரிகள் மேற்பார்வையிட்டார்களா?

      நூல் கொள்முதல் பணிகளுக்காக ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட நூலகர்களின் செயல்பாடுகளைப் பொது நூலக இயக்குநரும் பள்ளிக்கல்வித் துறை செயலாளரும் மேற்பார்வையிட்டார்களா? சம்பந்தப்பட்ட கோப்புகளை அவர்கள் பார்வையிட்டார்களா? பள்ளிக்கல்வித் துறை செயலாளர் நூல் கொள்முதல் தொடர்பாக எழுத்துப்பூர்வமான உத்தரவுகள் ஏதேனும் பிறப்பித்தாரா? (Was the work of the librarians who were appointed as Nodal and Coordinating Officials overseen by the Director of Public Libraries and School Education Secretary? Were the files perused by them? Did the Secretary issue any written instruction?)

      9.வல்லுநர் குழு பரிந்துரைத்தும் வாங்கப்படாத நூல்கள் எத்தனை?

      வல்லுநர் குழு பரிந்துரைத்த நூல்களில் எத்தனை நூல்கள் கொள்முதல் செய்யப்படவில்லை? வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தும் அந்த நூல்களை வாங்காததற்கான காரணங்கள் என்ன? (How many books were not procured even though they were recommended by the expert committee? What were the reasons?)

      நீதிபதிகள் எழுப்பிய இந்த 9 கேள்விகளுக்குப் பிற்பகல் விசாரணையின்போது பதிலளிக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூடுதல் அவகாசம் கோரினார்.

      நூல் கொள்முதல் முறைகேட்டில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், ஏற்கெனவே 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

      அகல்விளக்கு மோகன் மீது வழக்கு

      மேலும், துறைரீதியான விசாரணை மற்றும் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை Crime No.4/2026 என்ற எண்ணில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்தியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

      பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி நூல்கள் கொள்முதல் முறைகேட்டில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் நூல் கொள்முதல் நடைமுறைகளைச் சீரமைப்பது தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கும் பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என்று தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

      இதையடுத்து, கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த பத்ரி சேஷாத்ரி நூல் கொள்முதல் நடைமுறைகளைச் சீரமைப்பது தொடர்பாக அளித்த விரிவான பரிந்துரைகளை நீதிபதிகள் பதிவு செய்தனர். அதேபோல, தங்களது பெயர்களை வெளியிட விரும்பாத மேலும் 2 தரப்பினரும் பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருந்தனர். இந்த 3 பரிந்துரை ஆவணங்களையும் நீதிமன்ற உத்தரவுடன் இணைத்த நீதிபதிகள், அவற்றை அரசு கவனமாக ஆய்வு செய்து அடுத்த விசாரணையின்போது சாதகமான பதிலை அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

      அத்துடன், ஏற்கெனவே உள்ள நூல் கொள்முதல் வழிகாட்டுதல்கள் பயனற்றதாகிவிட்டன (The earlier guidelines have been rendered toothless). மீண்டும் இதுபோன்ற நூல் கொள்முதல் முறைகேடு நடைபெறாமல் தடுக்க உறுதியான நடைமுறைகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பரிந்துரைகள் விரிவாக இருப்பதால் புதிய அரசாணை பிறப்பிக்க அதிக காலம் தேவைப்படாது என்றும், கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறை உருவாக்கப்பட்டதும் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்போம் என்றும் குறிப்பிட்டனர்.

      நூலக வரி வசூல் எங்கே போனது?

      இந்த விசாரணையின் போது தமிழகத்தில் நூலக வரி வசூலிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வசூலிக்கப்பட்ட தொகை உரிய கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர். அந்தத் தொகை இதுவரை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பதையும் அறிய விரும்புவதாகத் தெரிவித்தனர்.

      அதிகாரிகள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் நூலக வரி வசூல் மற்றும் செலவினங்கள் குறித்து தனியாக ஒரு பத்தி இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

      20 ஆண்டுகால நூல் கொள்முதலுக்கு வெள்ளை அறிக்கை

      அதேபோல, ”தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நூல்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டன என்பது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி, அடுத்த விசாரணைக்குள் அதன் விவரங்களை அறிக்கையாக அளிப்பது நல்லது. வெள்ளை அறிக்கை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும்” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். (It would be in order if a White paper is submitted).

      தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கிய முறைகேடு

      இந்த வழக்கு விசாரணையில், ”இந்த முறைகேடு தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அரசு அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். (The scam has shaken the conscience of the people of Tamil Nadu. Their faith in the system must be restored)

      பெரியார், அண்ணாவை மேற்கோள் காட்டிய நீதிபதிகள்

      தமிழகத்தின் முக்கியமான 2 தலைவர்களான பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நூலகங்கள் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதை நீதிபதிகள் நினைவுகூர்ந்தனர். தந்தை பெரியார், “
      பள்ளிக்கூடங்கள் எழுத்தறிவையும், குறிப்பிட்ட துறைகளில் அறிவையும் வளர்க்கின்றன. ஆனால் நூலகங்களோ அனைத்துத் துறைகளிலும் பொது அறிவை வளர்க்கின்றன” என்றார். (Schools promote literacy and knowledge in a particular field. But the library fosters awareness of general knowledge in all spheres)

      அதேபோல, “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகச் சாலைக்கு தரப்படவேண்டும்” என்ற அறிஞர் அண்ணாவின் கருத்தையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

      நூலகங்களின் முக்கியத்துவத்தை பெரியாரும் அண்ணாவும் வலியுறுத்தியதாலேயே இந்த முறைகேடு குறித்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

      போலி பதிப்பாளர்கள்…

      போலி நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாகக் காவல்துறை மேற்கொள்ள வேண்டிய விசாரணை குறித்தும் நீதிபதிகள் முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தனர்.

      குறிப்பிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைது செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது என்பதை அறிந்திருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆனால் தற்போதைய வழக்கு விதிவிலக்கானது என்றும் தெரிவித்தனர்.

      போலி பதிப்பாளர்களில் சிலர் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்காமல் எந்த அரசு ஊழியருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை ஒருபோதும் கண்டறிய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். (Unless they are custodially interrogated, one will never know how much money was paid to which public servant). இந்த முறைகேடு எவ்வாறு நடத்தப்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

      AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேடு

      முந்தைய முறைகேடுகளிலிருந்து தற்போதைய நூல் கொள்முதல் முறைகேடு அதன் அளவிலும், செயல்படுத்தப்பட்ட விதத்திலும் வேறுபடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

      முதன்முறையாகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் செயல்முறைகள் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர். (For the first time, AI and digital processes have been subverted for achieving sinister ends)

      இந்த விவகாரங்கள் காவல்துறை விசாரணைக்கு உட்பட்டவை என்றும், அடுத்த விசாரணையின்போது மேலும் தெளிவான விவரங்கள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

      நவம்பர் 20-ந் தேதி மீண்டும் விசாரணை

      நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நவம்பர் 20-ந் தேதி காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் உத்தரவிட்டனர்.

      நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பெஞ்ச் உத்தரவு

      உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

      மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

      Mathi

      மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

      செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

      Join Our Channel