கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட தமிழக நூலகங்களுக்கு போலியான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்; முறைகேட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்; அகல் விளக்கு பதிப்பகம் உள்ளிட்ட தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகப் பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக எஸ். கிருஷ்ணன் என்பவர் 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு, நூல் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் 2024 ஜூன் 19-ந் தேதி உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று ராமசுப்பு என்பவர் நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்தார். உயர்கல்வித்துறைச் செயலாளர் கே. கோபால், பொது நூலக இயக்குநர் ஆர்.வி. ஷஜீவனா ஆகியோரை எதிர்மனுதாரர்களாகக் கொண்ட இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின்போதுதான் கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்குப் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஆட்சிகள் மாறுகின்றன.. செயல்கள் மாறுவதில்லை
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்வதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதல் தொடர்பான வழக்கு அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் திமுக ஆட்சியின்போது தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் புதிய முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் மாறுகிறார்கள்; ஆனால் செயல்கள் மாறுவதில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர் (The writ petition was filed when AIADMK was in power. It was disposed of when DMK was at the helm. TVK leads the governing coalition when the present scandal has erupted. Actors change, actions do not).
பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டிலேயே விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருந்தால், அகல் விளக்கு, சிக்மா, பீனிக்ஸ் போன்ற சந்தேகத்துக்குரிய பதிப்பகங்களிடமிருந்து நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் (If only the comprehensive directions issued by us in the year 2024 had been followed, we are certain that procurement would not have been made from dubious entities such as “Agal Vilakku”, “Sigma” and “Phoenix” publishers).

பெரியார் அறிவுலகத்தில் நடந்தது என்ன?
கோவை பெரியார் அறிவுலகத்திற்காக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சமூக வலைதளத்தில் வேதனை தெரிவித்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து பொதுவெளியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததாகவும், நூல் கொள்முதல் நடைமுறையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி பொது நூலக இயக்குநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டிருந்த நூல் கொள்முதல் உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டன. எழுத்தாளர் சோ. தர்மன் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையும், சந்தேகத்துக்குரிய நூல்களை எரிக்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்ததையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர் (The Government has acknowledged that the system had been taken for a huge ride. Ms.Jayanthi, I.A.S, was relieved of her responsibility as Director of Public Libraries. The Directorate of Vigilance and Anti-Corruption commenced its enquiry. The existing book procurement orders stood cancelled).
நீதிமன்ற உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே இருப்பதா?
பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதல் தொடர்பாக 2024-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று மனுதாரர் ராமசுப்பு சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் வெளிப்படையாக மீறப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நீதிமன்றம் அமைதியாக இருக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படாமல் காகிதத்தில் மட்டுமே இருந்தால் நீதிமன்றத்தின் மீதான மரியாதை பாதிக்கப்படும். எனவே, முந்தைய உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்காகவே பொது நூலக இயக்குநர் ஆர்.வி. ஷஜீவனாவை காணொலி மூலம் ஆஜராகுமாறு உத்தரவிட்டதாகவும் விளக்கியுள்ளனர் (We do not want our order in Krishnan case to remain merely on paper. When it has been brought to our notice by the petitioner that our directions have been brazenly and egregiously breached, it would ill-become of us if we keep quiet).
விசாரணையின்போது அரசு தரப்பில் எதிர்ப்பு மனப்பான்மை காட்டப்படவில்லை என்றும், முறைகேடு தொடர்பாக அரசும் லஞ்ச ஒழிப்புத்துறையும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது (The learned Additional Advocate General also fairly submitted that the State Government as well as the DVAC are actively seized of the matter and effective action is being taken).

AI நூல்கள் குறித்து நீதிபதிகள் கூறியது என்ன?
தமிழ்நாடு பொது நூலக விதிகள் 1950-ன் விதி 18(4)-ன்படி, நூலகங்களுக்குக் கொள்முதல் செய்யப்படும் புத்தகங்கள் பொதுமக்களுக்குப் பயன்படக்கூடியதாகவும் பண்பாட்டு மதிப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். கதைகள், நாவல்கள் போன்ற படைப்புகள் தரமான எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய தரம் கொண்ட புத்தகங்களை நூலகங்களுக்குக் கொள்முதல் செய்யக்கூடாது என்று விதிமுறைகள் கூறுகின்றன.
இந்தத் தரக்கட்டுப்பாடு புனைகதை நூல்களுக்கு மட்டுமின்றி, புனைகதை அல்லாத நூல்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் விளக்கியுள்ளனர். முதன்முறையாக நூல் எழுதும் ஒருவரின் படைப்பைத் தேர்வு செய்யும்போதுகூட, அந்த நூலைத் தேர்வுக்குழு பரிசீலித்து, தரமான எழுத்தாளரின் நூலுக்கு இணையானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தவறான தகவல்கள், பொய்யான கதையாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்கள் சந்தேகத்துக்குரிய தரம் கொண்டவையாகக் கருதப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட நூல்களும், பிறரது படைப்புகளைத் திருடி உருவாக்கப்பட்ட நூல்களும் இந்த வரம்புக்குள் வரும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் (A book with dubious content and false narratives is certainly one with doubtful taste. AI-generated and plagiarised works also would fall within this ambit).

பொருளாதார வல்லுநர் பெயரிலேயே போலி நூல்
பொது நூலகங்களுக்குச் செல்லும் வாசகர்கள், அங்குள்ள நூல்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் நம்பகமானவை என்று கருதுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஆனால், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்களிலேயே போலியான நூல்கள் இடம்பெற்றிருப்பது அந்த நம்பிக்கையைப் பாதிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு உதாரணமாகப் பொருளாதார வல்லுநர் ஜீன் ட்ரெஸ் (Jean Drèze) பெயரில் வெளியிடப்பட்ட போலி நூலை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து நூல்கள் எழுதிய ஜீன் ட்ரெஸ் பெயரில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் Democracy and People’s Right in the Contemporary World என்ற நூல் இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த நூலைத் தாம் எழுதவில்லை என்றும் அது போலியானது என்றும் ஜீன் ட்ரெஸ் மறுத்திருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர் (In Kalaignar Centenary Library in Madurai, one came across a book “Democracy and People’s Right in the Contemporary World” attributing authorship to Jean Dreze. The economist has been foxed and baffled. He has denounced the book as fake).

‘நெஞ்சு பொறுக்குதில்லையே’- பாரதியார் குறித்து நீதிபதிகள் வேதனை
பாரதியார் பெயரிலும் போலியான நூல்கள் தமிழகப் பொது நூலகங்களில் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொருளாதார வல்லுநர் ஜீன் ட்ரெஸ் தனது பெயரில் வெளியான போலி நூலை மறுத்துவிட்டார்; ஆனால் பாரதியாரால் அவ்வாறு செய்ய முடியாது. அவர் கல்லறையிலேயே புரண்டு படுப்பார் என்று வேதனை தெரிவித்துள்ளனர். அப்போது, பாரதியாரின் புகழ்பெற்ற ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற கண்டன வரிதான் நினைவுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர் (Bharathiyar is not as lucky. He can only turn in his grave. Works falsely attributed to him also adorn the racks of the public libraries in Tamil Nadu. “நெஞ்சு பொறுக்குதில்லையே”, the immortal condemnatory phrase of the poet comes to our mind).
போலி நூல்கள் மக்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கின்றன
பொது நூலகங்கள் வெறும் புத்தகங்களை அடுக்கி வைக்கும் இடங்கள் அல்ல. அறிவைப் பரப்புவதற்கும், கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் அவை உருவாக்கப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வசதி இல்லாதவர்களும் தரமான நூல்களைப் படித்து அறிவைப் பெறுவதற்காகவே அரசு பெரும் தொகை செலவிட்டு நூலகங்களை அமைக்கிறது. ஆனால், போலியான தகவல்களைக் கொண்ட நூல்களையும், உண்மையில் இல்லாத ஆசிரியர்களின் பெயர்களில் வெளியிடப்பட்ட புத்தகங்களையும் நூலகங்களில் வைப்பது தமிழ்நாடு பொது நூலகச் சட்டத்தின் நோக்கத்தையே மீறுவதாகும்.
மேலும், தரமான மற்றும் சரியான தகவல்களைப் பெறுவதற்கான உரிமையையும் இது பாதிக்கிறது. இந்த விவகாரத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவு புதிய முக்கியத்துவத்தைப் பெறுவதாகவும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் அல்லது நிதியுதவியில் இயங்கும் நூலகங்கள் அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலின் 12-வது பிரிவில் இடம்பெற்றுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் (By stacking bogus books with false content and books by phantom authors, not only the statutory duty cast under the Tamil Nadu Public Libraries Act, 1948 is being breached, the right to receive accurate and quality information is also infringed).
பல கோடி ரூபாய் மோசடி.. FIR பதிவு செய்யாதது ஏன்?
போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு வாரமாகியும் லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்யாததை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்தி வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உடனடியாகக் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தபோது, விசாரணை முடிவடையும் வரை காத்திருக்கலாம் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அப்போது, குற்றம் நடந்திருக்கிறது என்பதை மறுக்கிறீர்களா என்று நீதிபதிகள் நேரடியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, குற்றம் நடைபெற்றிருப்பதை மறுக்காத நிலையில், அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது FIR பதிவு செய்வதற்கு என்ன தடை இருக்கிறது என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர். பொது நிதியிலிருந்து பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு அரசு ஊழியர்களின் தீவிரமான தொடர்பில்லாமல் நடைபெற்றிருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளுடன், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளும் பொருந்தும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது (Crores of rupees has gone out of the public exchequer. It is too obvious that a crime of this humongous proportion could not have taken place but for the active involvement of government servants).


அகல் விளக்கு பதிப்பகம், மோகன் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு
- போலி நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- அத்துடன், அகல் விளக்கு பதிப்பகம், அதன் உரிமையாளர் மோகன் மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்களின் வங்கிக் கணக்குகளையும் உடனடியாக முடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஏற்கெனவே நடைபெற்று வந்த ஆரம்பகட்ட விசாரணையைத் தொடர்ந்து, முறையான குற்றவியல் வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை நீதிமன்றம் கட்டாயப்படுத்தியுள்ளது (We also direct the DVAC to forthwith register an FIR. The bank account of Agal Vilakku Publication as well as Thiru Mohan, Proprietor and others involved shall be frozen immediately).
- கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற முறைகேடான நூல் கொள்முதலுக்குப் பொறுப்பான அரசு அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் முழு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று பொது நூலக இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து, அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
- மேலும், முறைகேட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது இடைநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் (The Government shall immediately take disciplinary action including suspension of the officials involved).
- சம்பந்தப்பட்ட நூலகங்களின் நூலகர்கள், சந்தேகத்துக்குரிய நூல்களை உடனடியாகக் கணக்கெடுத்து அவற்றின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அந்த நூல்களை வாசகர்கள் பயன்படுத்த முடியாதபடி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், அந்த நூல்களைக் கொள்முதல் செய்யச் செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதைத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது (The Librarians concerned shall forthwith take inventory of such suspect books and make them unavailable to the reading public).
- போலி நூல்கள் கொள்முதல் விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக, நூல் கொள்முதல் நடவடிக்கைகள் எவ்வாறு தொடங்கின, எந்தெந்த நிலைகளில் முடிவுகள் எடுக்கப்பட்டன, யார் யாருக்கு என்ன பொறுப்பு இருந்தது என்பன உள்ளிட்ட முழு நிகழ்வுகளையும் விளக்கும் அறிக்கையைப் பொது நூலக இயக்குநர் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறைகேட்டில் மேலிருந்து கீழ்வரை தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் (The persons involved from top to bottom shall be identified and named).
நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிப்பது ஏன்?
இந்த வழக்கு சாதாரண நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கு மட்டுமல்ல; 2024-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதையும் நீதிபதிகள் நினைவூட்டியுள்ளனர். முந்தைய உத்தரவை நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்திருந்தது. அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஆர். மகாதேவன் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிக்கிறார். இதனால், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வகுத்துள்ள வழக்குப் பட்டியல் நடைமுறைகளின்படி, முந்தைய அமர்வில் இடம்பெற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனும் நீதிபதி எம்.டி. சுமதியும் இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.









