கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், திமுக மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஊர்வலம் நடத்த அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இன்று (நவ.10) செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கடந்த 2 நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தச் செய்தியைத்தான் பார்த்து வருகிறேன். இந்தச் செய்திகளைப் பார்த்ததன் விளைவாக, இன்றைய தினம் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. வசந்தவேல், கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியைச் சேர்ந்த சகோதரிகளுடன் இங்கு வந்துள்ளோம்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர்தான் மிக உயர்ந்த அதிகாரம் கொண்டவர். நீதித்துறையில் உச்சநீதிமன்றம் இருப்பதைப்போல, மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர்தான் உயர்ந்த அதிகாரம் கொண்டவர். அப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடான விஷயம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஆட்சியருக்கும் மக்களுக்கும் நல்ல பிணைப்பு இருந்து வந்தது. மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியர் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாவட்டம் வளரும்.
ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்
அப்படிப்பட்ட நிலையில், ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்குக் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது எந்த அளவுக்கு எல்லை மீறிச் சென்றிருக்கிறது என்பதைச் சொல்ல முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) தலைமையில் தனிக் குழுவை அமைத்துப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஏனென்றால், இந்தப் பிரச்சனை இவ்வளவு தூரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். இது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய விஷயம்.
மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்குக
ஆகவே, மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். எங்கள் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் இருக்கிறார். அதுமட்டுமல்ல மகளிர் ஆணையத்திலும் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அதனால்தான் நாங்கள் நேரடியாக வந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளோம்.
முதலில் இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அப்படி ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது உண்மை என்று தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பெண் அதிகாரிகளிடம் அச்சம் உருவாகும்
நானும் 3-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். இனிமேல் ஏதாவது ஒரு பெண் அதிகாரியைச் சந்திக்க சென்றால், அவர் நம்மை அச்சத்துடன் பார்ப்பாரோ என்ற பயம் எனக்கே ஏற்பட்டுள்ளது. இங்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருப்பவரும் ஒரு பெண் அதிகாரிதான். அவரிடம் நாங்கள் பேசும்போதே, இந்த மாவட்டத்தில் பணியாற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர் உள்ளிட்ட பெண் அதிகாரிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
காவல் கண்காணிப்பாளருக்குத் தனியாகப் பாதுகாப்புக் குழு இருப்பதால், அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்றும் தெரிவித்தோம். இப்படிப்பட்ட ஒரு நிலைதான் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தச் செய்தியைத் திமுகதான் பரப்புகிறது என்றும், திமுகதான் பொய்யான செய்திகளை வெளியிடுகிறது என்றும் கூறுகிறார்கள். நீங்கள் தூங்கினாலும் நாங்கள்தான் காரணம், நீங்கள் படுத்தாலும் நாங்கள்தான் காரணம், நீங்கள் எழுந்தாலும் நாங்கள்தான் காரணம் என்றால், நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள்?
திமுகவினர் எப்படி அனுப்ப முடியும்?
ஒருவருடைய செல்போனிலிருந்து மற்றொருவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படுவது என்பது தனிப்பட்ட செயல். திமுகவில் இருப்பவர்கள் யாரும் உங்கள் செல்போனை எடுத்து அப்படியொரு குறுஞ்செய்தியை அனுப்ப முடியாது. ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது. அது உண்மையா, பொய்யா என்பது முறையான விசாரணை நடத்தினால்தான் தெரியவரும்.
நம் அனைவருடைய வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணைப் பற்றிய செய்தி வெளியானதும், இணையதளங்களில் அவரவர் கற்பனைக்கு ஏற்ப பல்வேறு செய்திகளை வெளியிடுகிறார்கள்.
சிபிசிஐடி, சிபிஐ விசாரணை தேவை
என்னைப் பொறுத்தவரையில், ஒரு மாவட்ட ஆட்சியர் என்பவர் ஒரு பெண் அதிகாரி. அவர் எந்த மாநிலத்திலிருந்து இங்கு பணியாற்ற வந்திருந்தாலும், அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது இந்த மாவட்ட மக்களின் கடமை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நான் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மட்டும் பேசவில்லை. இந்த மாவட்டத்தின் ஒரு குடிமகன், ஒரு வாக்காளர் என்ற முறையிலும் பேசுகிறேன். அவருக்குத் தேவையான முழு ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்.
அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி பற்றி….
ஒரு மாவட்ட ஆட்சியரே அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியர் எங்களிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார். இதெல்லாம் நடைமுறையில் நடக்கக்கூடிய விஷயமா?
ஆளுங்கட்சியில் அதிகாரம் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் கொடுத்துவிட்டு அந்த மாவட்ட ஆட்சியர் எங்கு பணியாற்ற முடியும்? இந்த மாநிலத்திலேயே இனிமேல் பணியாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தால்தான் அவரால் புகார் அளிக்க முடியும். எனவே, நடைமுறையில் நடக்க முடியாத விஷயங்களைச் சொல்ல வேண்டாம். இந்த விவகாரத்தின் ஆழத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
திரித்து பரப்பாதீர்
ஒரு பெண் அதிகாரி, ஒரு சகோதரி மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாகத் திரித்துக் கூறப்படும் செய்திகளைத் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
அதேபோல, ‘டீ ஷாப்’ என்ற பெயரில் ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது. அந்த இணையதளத்தில் போலியான செய்திகளை வெளியிடுவதையே ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். அந்த இணையதளம் தொடர்பாகவும் நாங்கள் புகார் அளித்துள்ளோம்.
பொய்யான முகவரியைக் கொடுத்து அந்த இணையதளம் செயல்பட்டு வருகிறது. அது கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து இயங்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து இயங்குகிறது. நானும் இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரித்து வருகிறேன். இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும். இதுபோன்ற செயல்களை நிறுத்திவிட்டு, உண்மையான பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
மகளிர் ஆணையத்தில் கனிமொழி மனு
கனிமொழி எம்.பி. அவர்கள் மகளிர் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் இங்கு வந்துள்ளார். அவரும் டெல்லியில் இது தொடர்பாகப் புகார் அளிக்க இருக்கிறார். இங்கு வந்துள்ள சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உரிமைக் குழுவில் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல இருக்கிறார். எனவே, உடனடியாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஏன் போலீசுக்கு போகவில்லை?
அருள் விக்னேஷ் பெயரில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்று திமுக யாரிடமும் சொல்லவில்லை. அப்படிச் செய்வது திமுகவின் வேலையும் அல்ல. உங்களைப் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருந்தால், நீங்கள் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டும். உங்களுடைய செல்போன் எண்ணைக் கொடுத்து விசாரணை நடத்துமாறு கேட்டிருக்க வேண்டும். இப்போது ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதா, இல்லையா என்பதைத் தொழில்நுட்ப ரீதியாகக் கண்டுபிடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். அதை விட்டுவிட்டு, இவர்கள் சொன்னார்கள், அவர்கள் சொன்னார்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
காலையில் ஏதோ ஒரு இடத்தில் நின்றுகொண்டு, நாற்காலி உடைந்திருக்கிறது, இது உடைந்திருக்கிறது என்று பேசுகிறார்கள். இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல. நீங்கள் தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அதை யாராலும் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.
எல்லாவற்றுக்கும் திமுக காரணமா?
இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் நடைபெறும் பிரச்சனை அல்ல. தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளன.
இந்த அரசு கையாலாகாத அரசு. திறனற்ற அரசு. பத்து பைசாவுக்குக்கூடப் பிரயோஜனம் இல்லாத அரசு. எதைச் செய்தாலும் திமுகதான் காரணம் என்று கூறிக்கொண்டிருக்கும் இந்த அரசு எதற்காக ஆட்சியில் இருக்கிறது? வெட்கமாக இல்லையா?
ஆட்சியில் இருக்கிறீர்கள். அதிகாரத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய முடியவில்லை. உங்களால் எதையும் செய்ய முடியாதபோது, எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறீர்கள். எதைச் செய்தாலும் திமுகதான் காரணம் என்றால், நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கிறீர்கள்? இந்த உண்மைகளை மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
முகத்திரையை கிழிக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இதுபோன்ற ஆபாச குறுஞ்செய்திகளை யார் அனுப்பினாலும், தயங்காமல் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். தைரியமாக நில்லுங்கள். இருட்டில் இருந்துகொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், உங்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் நாங்கள் இருப்போம்.
மாவட்டத்துக்கு களங்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். பொதுவாக அமைதியான மாவட்டம். இங்கு வன்முறைச் சம்பவங்கள்கூட அதிகமாக நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட அமைதியான மாவட்டத்தில் ஆபாச குறுஞ்செய்திகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும், பெண் அதிகாரிகள் தொடர்பான சர்ச்சைகளும் எழுவது மாவட்டத்தின் பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறது.
காலையில்கூட ஒரு பேட்டியைப் பார்த்தேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்தான் தவெக வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்கள். 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுகவோ அல்லது மற்ற கட்சிகளோ வெற்றி பெற்றிருந்தால், அதற்கு நாங்கள் வலுவாக இருக்கிறோம் என்பதுதான் அர்த்தம். இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. உங்களுடைய கையாலாகாத தன்மையை மறைப்பதற்காக எங்களைக் காரணம் காட்ட வேண்டாம்.
திமுக மகளிரணி கண்டன ஊர்வலம்
இங்கு வந்துள்ள பத்திரிகை நண்பர்களிடம் ஒன்றைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும். முறையான விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் பணியாற்றும் பெண் மாவட்ட ஆட்சியருக்குப் பத்திரிகையாளர்களாக இருந்தாலும், மக்களாக இருந்தாலும் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஊர்வலம் நடத்த இருக்கிறோம். அதற்காகக் காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். போராட்டம் நடத்தவும் அனுமதி கோரியுள்ளோம். அதற்கான மனுக்களையும் புகார்களையும் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.
VIDEO:









