கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட தமிழகத்தின் பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் ஆர். மோகன், பொது நூலகத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் 9 பக்க FIR-ல் இடம்பெற்றுள்ள முழு விவரம்: கோவை பெரியார் அறிவுலகம் மற்றும் தமிழ்நாட்டின் பிற பொது நூலகங்களுக்கு நூல்கள், மின்னூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நவம்பர் 6-ந் தேதி பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பி விரிவான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரப்பட்டது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில், நவம்பர் 7-ந் தேதி பொது நூலகத் துறையைச் சேர்ந்த அடையாளம் காணப்படாத அரசு ஊழியர்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின்போது பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நீதிமன்ற அவமதிப்பு மனு எண் 3763/2026-ல் நவம்பர் 10-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள், நடைமுறை விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் நடைபெற்றிருப்பதற்கான ஆரம்பகட்ட முகாந்திரங்கள் தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பிற நபர்களின் செயல்பாடுகள் குறித்து குற்றவியல் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூல்கள் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு, 2024 மார்ச் 7-ந் தேதி பள்ளிக்கல்வித் துறையின் அரசாணை எண் 69 மூலம், வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை (Transparent Book Procurement Policy, 2024) என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது.
பொது நூலகங்களுக்கான நூல்களை முறையான, வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் இந்தக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 2019-ஆம் ஆண்டின் ரிட் மனு எண் 10150-ல் 2024 ஜூன் 19-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதல் மேற்கண்ட அரசாணையின் விதிகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனிடையே, கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதலுக்காக, 2024 செப்டம்பர் 3-ந் தேதி அரசாணை எண் 198 மூலம் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. 2025 நவம்பர் 5-ந் தேதி அரசாணை எண் 250 மூலம் நூல் கொள்முதல் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2026 பிப்ரவரி 27-ந் தேதி அரசாணை எண் 50 மூலம் ரூ.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டதுடன், மாநிலத்தின் தொகுப்பு நிதியிலிருந்து ரூ.30 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது.
நூல் கொள்முதல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்ற 4 அதிகாரிகள்
நூல்களைக் கொள்முதல் செய்வதற்காக, பொது நூலக இயக்குநர் 2025 நவம்பர் 18-ந் தேதி ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தார். இந்தக் குழுவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் எஸ். காமாட்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் துணை முதன்மை நூலகர் வி. தினேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் எஸ். சந்தன கார்த்திகேயன், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் எஸ். சந்தன கிருஷ்ணன் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றனர்.
கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட பல்வேறு பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது.
பதிப்பகங்களுக்கு அழைப்பு முதல் பணம் வழங்கியது வரை
2025-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி நூல் கொள்முதலில் பதிப்பகங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. பதிப்பகங்கள் Google Forms மூலம் தங்களது விவரங்களைச் சமர்ப்பித்தன. இதற்கான கடைசி நாள் 2026 ஜனவரி 5-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 9-ந் தேதி நூல் தேர்வுக் குழு நூல்களைப் பரிசீலித்தது. ஜனவரி 24-ந் தேதி நூல்களின் விலைகளை நிர்ணயிப்பதற்காக விலைப் பேச்சுவார்த்தைக் குழு கூடியது.
பிப்ரவரி 5-ந் தேதி தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் உயர்நிலைக் குழுவின் முன் வைக்கப்பட்டது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் நூல்களுக்கான கொள்முதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு முறையே பிப்ரவரி 14 மற்றும் பிப்ரவரி 13-ந் தேதிகளில் கொள்முதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. பிப்ரவரி மாதம் முதல் நூல்கள் பெறப்பட்டன. மார்ச் மாதம் முதல் TN-PFTS மூலம் பதிப்பகங்களுக்குப் பணம் வழங்கப்பட்டது.
2 பதிப்பகங்கள்.. ஒரே உரிமையாளர் ஆர். மோகன்
கோவை பெரியார் அறிவுலகம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மடிப்பாக்கம், பிரம்மபுத்திரா தெரு, கதவு எண் 3/448 என்ற முகவரியைச் சேர்ந்த ஆர். மோகன், அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் உரிமையாளர் என்பது தெரியவந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு பதிப்பகங்களும் ஒரே முகவரியில் செயல்பட்டு வந்துள்ளன.
மேலும், சிக்மா பிரிண்ட்ஸ் மற்றும் சிக்மா பப்ளிஷிங் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களில் நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களும் இதே முகவரியில் செயல்பட்டுள்ளன.
ஆர். மோகன் முக்கியமாக நூல் வடிவமைப்பு மற்றும் பதிப்புப் பணிகளில் (Desktop Publishing) ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அகல் விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 2,339 நூல் தலைப்புகளைக் கொண்ட பட்டியலையும், பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயரில் 99 நூல் தலைப்புகளைக் கொண்ட பட்டியலையும் சென்னை பொது நூலக இயக்குநரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அவர் அனுப்பியுள்ளார்.
1,857 நூல்களுக்கு கொள்முதல் உத்தரவு
அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் மொத்தம் 1,857 நூல்களுக்கான கொள்முதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த நூல்கள் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலரால் 2026- ஆம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 19-ந் தேதிகளில் பெறப்பட்டன.
சரிபார்ப்புக்குப் பின்னர், அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து பெறப்பட்ட 1,779 நூல்களுக்கான பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, நூல்களின் பட்டியல் மாவட்ட நூலகத்திற்கு அனுப்பப்பட்டது.
2,393 நூல்கள்.. 418 எழுத்தாளர்கள்..
ISBN இணையதளத்தில் உள்ள பதிவுகளின்படி, 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 3 முதல் 2026- ஆம் ஆண்டு பிப்ரவரி 6 வரையிலான காலத்தில் அகல் விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 2,393 நூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி மட்டும் 46 நூல்கள் பதிவு செய்யப்பட்டு ISBN எண்கள் வழங்கப்பட்டன. பிப்ரவரி 5-ந் தேதி 48 நூல்கள் பதிவு செய்யப்பட்டு ISBN எண்கள் வழங்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றுதான் நூல்களின் பட்டியல் உயர்நிலைக் குழுவின் முன் வைக்கப்பட்டது.
ISBN இணையதளத்தில் இந்தப் பதிப்பகத்திற்காக 418 எழுத்தாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களில் 6 எழுத்தாளர்கள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு பிரிவுகளில் தலா 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த 6 எழுத்தாளர்களின் பெயர்களில் மொத்தம் 745 நூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோனிகா ரவி (Monika Ravi) என்ற பெயரில் 162 நூல்களும், லட்சுமி மோகன் (Lakshmi Mohan) பெயரில் 124 நூல்களும், தாமரை பன்னீர் (Thamarai Panneer) பெயரில் 123 நூல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், தாமரை முரளி (Thamarai Murali) பெயரில் 115 நூல்களும், ஜோதி ஹரிஹரன் (Jothi Hariharan) பெயரில் 114 நூல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி மட்டும் தாமரை முரளி பெயரில் 48 நூல்களுக்கும், லட்சுமி மோகன் பெயரில் 48 நூல்களுக்கும் ISBN எண்கள் வழங்கப்பட்டன. அன்றுதான் நூல் தேர்வுக் குழு பரிந்துரைத்த நூல்களின் பட்டியலுக்கு உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்தது.
பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயரில் 2,923 நூல்கள்
ISBN இணையதளத்தில் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயரில் 2,923 நூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஆங்கிலத்தில் 2,690 நூல்களும், தமிழில் 174 நூல்களும், மராத்தியில் 52 நூல்களும், தெலுங்கில் 4 நூல்களும், மலையாளத்தில் 2 நூல்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டு பதிப்பகங்களிலும் பொதுவாக 74 எழுத்தாளர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
SSC Exam Booster, Geographia போன்ற சுமார் 10 நூல் தலைப்புகள், ஒரே எழுத்தாளர் பெயரில் இரண்டு பதிப்பகங்களிலும் இடம்பெற்றுள்ளன. மேலும், 3 நூல்கள் வெவ்வேறு எழுத்தாளர் பெயர்களில் இடம்பெற்றுள்ளன.
ஒரே நூலுக்கு இரண்டு எழுத்தாளர்கள்.. உண்மையான எழுத்தாளர் யார்?
Deepfakes: The Coming Infocalypse என்ற நூல் அகல் விளக்கு பதிப்பகத்தில் மனிஷா சரவணன் (Manisha Saravanan) என்ற எழுத்தாளர் பெயரிலும், பீனிக்ஸ் பதிப்பகத்தில் சாருலதா விவேக் (Charulatha Vivek) என்ற எழுத்தாளர் பெயரிலும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இந்த நூலின் உண்மையான எழுத்தாளர் நினா ஷிக் (Nina Schick) ஆவார்.
இந்த நூல் 2020 ஆகஸ்ட் 25-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் ISBN-13 எண் 978-1538754306 ஆகும்.
இவ்வாறு ஒரே நூல் வெவ்வேறு எழுத்தாளர் பெயர்களில் இரண்டு பதிப்பகங்களின் பட்டியல்களிலும் இடம்பெற்றிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ChatGPT மூலம் போலி எழுத்தாளர் பெயர்களில் நூல்கள் தயாரிப்பு
இரண்டு பதிப்பகங்களும் வழங்கிய நூல்களை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு செய்தது. இந்த விசாரணையில், ஆர். மோகன் கற்பனையான எழுத்தாளர் பெயர்களைப் பயன்படுத்தி நூல்களை உருவாக்கியுள்ளதாகத் தெரியவந்தது.
இணையதளங்கள் மற்றும் ChatGPT உள்ளிட்ட இணையச் செயலிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி இந்த நூல்கள் உருவாக்கப்பட்டன.
இந்த நூல்களின் உள்ளடக்கங்கள் தெளிவற்றவையாகவும், தொடர்பற்றவையாகவும், தவறாக வழிநடத்துபவையாகவும், தரமற்ற மொழிநடையைக் கொண்டவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
பொது நூலகத்திற்குத் தேவையான கல்வி அல்லது தகவல் மதிப்பு இந்த நூல்களுக்கு இல்லை .
நாலடியாரைக் கவிஞராக்கிய நூல்.. மதுரைக்காஞ்சியை எழுதியவர் அரசரா?
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தின் தமிழ்ப் பிரிவில் நடத்தப்பட்ட விசாரணையில், அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்ற நூலில், நாலடியார் என்பவர் ஒரு கவிஞர் மற்றும் தத்துவஞானி என்று விவரிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும், தேவ் நிலன் (Dev Nilan) எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதுரைக் காஞ்சியின் இலக்கியப்பயணம்’ என்ற நூலில், மதுரைக்காஞ்சியை எழுதியவர் ஓர் அரசர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நூல்களும் அகல் விளக்கு பதிப்பகத்தைச் சேர்ந்தவை.
மேலும், எமிலி லாசன் (Emily Lawson) என்பவர் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள Tourism: Principles, Practices and Philosophies என்ற நூலின் உள்ளடக்கங்கள் பிற நூல்களிலிருந்து நகலெடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த எழுத்தாளரின் இணையதளம் போலியானது என்றும் கண்டறியப்பட்டது.
நூல் கொள்முதல் கொள்கையின்படி வாங்கப்படும் ஒவ்வொரு நூலுக்கும் ISBN எண் இருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட சுற்றுலா நூலுக்கான ISBN எண் ISBN இணையதளத்தில் காணப்படவில்லை.
பரிந்துரைக்கப்படாத நூல்கள் தேர்வுப் பட்டியலில்..
நூல் பரிந்துரைக் குழு சுமார் 26,000 நூல்களைப் பரிந்துரைத்தது. அதன்பின்னர், நூல் பரிந்துரைக் குழு பரிந்துரைக்காத, பதிப்பகங்களிடமிருந்து பெறப்பட்ட சில நூல்களையும் ஒருங்கிணைப்புக் குழு கூடுதலாகச் சேர்த்தது.
அந்த நூல்களையும் பரிசீலனை செய்து ஒப்புதல் அளிப்பதற்காக நூல் தேர்வுக் குழுவின் முன் ஒருங்கிணைப்புக் குழு வைத்தது. ஆனால் இவ்வாறு கூடுதலாகச் சேர்க்கப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட குறிப்புக் கோப்பில் ஒருங்கிணைப்புக் குழு பதிவு செய்யவில்லை என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியற்ற நூல்களுக்காக அரசு பணம்
போலியான எழுத்தாளர் பெயர்களில் எழுதப்பட்ட, சிலவற்றில் பிற படைப்புகளிலிருந்து உள்ளடக்கங்கள் நகலெடுக்கப்பட்ட, பொது நூலகங்களுக்குத் தகுதியற்ற நூல்களுக்காக மேற்கண்ட இரண்டு பதிப்பகங்களுக்கும் அரசுப் பணத்திலிருந்து தொகை வழங்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் மட்டுமல்லாமல், பிற பொது நூலகங்களிலும் நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தப் பதிப்பகங்களுக்குப் பிற பொது நூலகங்களின் நூல் கொள்முதல் தொடர்பாக ரூ.1,74,01,162 வழங்கப்பட்டுள்ளது.
மற்ற பதிப்பகங்களும் இதேபோன்ற நூல்களைப் பொது நூலகங்களுக்கு வழங்கியுள்ளனவா என்பதைக் கண்டறிய விசாரணை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
நூல் தேர்வு முதல் பணம் வழங்கியது வரை 8 கட்டங்களில் விதிமீறல்?
இந்த இரண்டு பதிப்பகங்களின் நூல்கள் நூலகத்தை வந்தடைய வேண்டுமென்றால், நூல் பரிந்துரை, நூல் தேர்வு, விலைப் பேச்சுவார்த்தை, ஒப்புதல், கொள்முதல் உத்தரவு, நூல்கள் பெறுதல், நூல்களைச் சரிபார்த்தல், பணம் வழங்குதல் ஆகிய 8 கட்டங்களைக் கடந்து வந்திருக்க வேண்டும்.
இந்த ஒவ்வொரு கட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கையின் விதிகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது.
ஒவ்வொரு நூலுக்கும் ISBN எண் இருப்பது, பாடப்பிரிவு சார்ந்த நிபுணர்களால் நூல்கள் மதிப்பீடு செய்யப்படுவது ஆகியவை இந்தக் கொள்கையில் அடங்கும். ஆனால் மேற்கண்ட நிகழ்வுகளில் இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை.
ஒருங்கிணைப்புக் குழு கூடுதலாகச் சேர்த்த நூல்கள் குறித்த விவரங்கள் குறிப்புக் கோப்பில் பதிவு செய்யப்படவில்லை.
இரண்டு பதிப்பகங்களின் நூல் பட்டியல்களும் உரிய ஆய்வின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆர். மோகனுடன் நூலக அதிகாரிகள் கூட்டுச் சதி?
சென்னை பொது நூலக இயக்ககம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தைச் சேர்ந்த அடையாளம் காணப்படாத அதிகாரிகள், ஆர். மோகன் மற்றும் அடையாளம் காணப்படாத பதிப்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து, தகுதியற்ற நூல்களை அரசுப் பணத்தில் கொள்முதல் செய்ய வைத்திருக்கலாம் என்று நம்புவதற்கான நியாயமான அடிப்படைகள் இருக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆர். மோகன், பொது நூலக இயக்ககம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அடையாளம் காணப்படாத அதிகாரிகள் மற்றும் பிற நபர்கள் மீது குற்றச் சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஆவணங்களைப் புனைந்து உருவாக்குதல், அரசு ஊழியர்களின் குற்றவியல் முறைகேடு மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 15-ல் FIR பதிவு: 3 சட்டங்களின் கீழ் வழக்கு
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விரிவான விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலும், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் உயரதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்ற பின்னரும், நவம்பர் 15-ந் தேதி இரவு 7 மணிக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், 2023-ன் பிரிவுகள் 61(2), 316(4), 316(5), 318(2), 336(1), 336(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 13(1)(a), அதனுடன் இணைந்த பிரிவு 13(2), பிரிவு 12 மற்றும் பதிப்புரிமைச் சட்டம், 1957-ன் பிரிவுகள் 51, 63 ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் அசல் நகல், சென்னையில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மற்ற நகல்கள் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகர லஞ்ச ஒழிப்புத் துறை 5-வது பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் டி. கந்தசாமி பதிவு செய்துள்ளார். இவ்வாறு லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் யார் யார்?
- கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கான நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் சென்னை மாநகரம்–5 பிரிவில் குற்ற எண் 04/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த வழக்கில் பெயர் குறிப்பிட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ளவர், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். மோகன். இவர் அகல் விளக்கு பதிப்பகம் (Akal Vizhakku Publishers) மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் (Phoenix Publications) ஆகிய இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.
அடையாளம் காணப்படாத அரசு அதிகாரிகள்
- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சேர்ந்த அடையாளம் காணப்படாத அதிகாரிகள்
- கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தைச் சேர்ந்த அடையாளம் காணப்படாத அதிகாரிகள் மற்றும் பிற அடையாளம் காணப்படாத நபர்களும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
- இந்த அதிகாரிகள் ஆர். மோகன் மற்றும் பிற பதிப்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து, நூல் கொள்முதல் விதிகளை மீறி, தகுதியற்ற நூல்களை அரசுப் பணத்தில் வாங்கச் செய்திருக்கலாம் என்பதற்கான ஆரம்பகட்ட முகாந்திரங்கள் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்ற 4 அதிகாரிகளும் குற்றம்சாட்டப்பட்டவர்களா?
நூல் கொள்முதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில்
- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எஸ். காமாட்சி
- மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வி. தினேஷ் குமார்
- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எஸ். சந்தன கார்த்திகேயன்
- மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் எஸ். சந்தன கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த 4 அதிகாரிகளின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நூல் பரிந்துரைக் குழு பரிந்துரைக்காத நூல்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதும், அந்த விவரங்கள் குறிப்புக் கோப்பில் பதிவு செய்யப்படாததும் தொடர்பாக அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
ரூ.1.74 கோடி மோசடியா? FIR கூறுவது என்ன?
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.1,74,01,162 என்பது அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து பிற பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்ததற்காக அரசுப் பணத்திலிருந்து வழங்கப்பட்டதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள தொகையாகும்.
போலியான எழுத்தாளர் பெயர்களில் தயாரிக்கப்பட்ட, பிற படைப்புகளிலிருந்து நகலெடுக்கப்பட்ட மற்றும் பொது நூலகங்களுக்குத் தகுதியற்ற நூல்களுக்காக அரசுப் பணம் வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
வழக்கைப் பதிவு செய்த அதிகாரி யார்?
சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் சென்னை மாநகரம்–5 பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் டி. கந்தசாமி இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளார். பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் நவம்பர் 6-ந் தேதி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நவம்பர் 7-ந் தேதி விரிவான விசாரணை தொடங்கப்பட்டது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நவம்பர் 10-ந் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.
விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் தகவல்கள் மற்றும் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரிகளின் ஒப்புதலுடன் நவம்பர் 15-ந் தேதி இரவு 7 மணிக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு?
ஆர். மோகன் மற்றும் அடையாளம் காணப்படாத அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், 2023-ன் பிரிவுகள் 61(2), 316(4), 316(5), 318(2), 336(1), 336(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 13(1)(a), அதனுடன் இணைந்த பிரிவு 13(2), பிரிவு 12 மற்றும் பதிப்புரிமைச் சட்டம், 1957-ன் பிரிவுகள் 51, 63 ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச் சதி (Criminal Conspiracy), ஏமாற்றுதல் (Cheating), நம்பிக்கை மோசடி (Criminal Breach of Trust), ஆவணப் புனைவு (Fabrication of Documents), அரசு ஊழியர்களின் குற்றவியல் முறைகேடு (Criminal Misconduct), பதிப்புரிமை மீறல் (Copyright Infringement) உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கின் அசல் முதல் தகவல் அறிக்கை, சென்னையில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட விசாரணையில் என்ன கண்டறியப்பட வேண்டும்?
அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் நூல்கள் எவ்வாறு பரிந்துரைக்கப்பட்டன, பரிந்துரைக்கப்படாத நூல்கள் எந்த அடிப்படையில் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டன, அவற்றுக்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார், நூல்களைச் சரிபார்த்தவர்கள் யார், பணம் வழங்குவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டவர்கள் யார் என்பவை விசாரணையில் கண்டறியப்பட வேண்டிய முக்கிய விவரங்களாக உள்ளன.
மேலும், இந்த இரண்டு பதிப்பகங்களைத் தவிர மற்ற பதிப்பகங்களும் இதேபோன்ற நூல்களைப் பொது நூலகங்களுக்கு வழங்கியுள்ளனவா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.









