கரண்ட் பில் கட்டலை, இணைப்பை கட் பண்ணிடுவோம்னு மெசேஜ் வந்துச்சா? எஸ்பிஐ எச்சரிக்கை!

By Minnambalam Desk

|

Published on 17 Nov 2026, 8:07 AM

“மின்சாரக் கட்டணம் கட்டவில்லை, உடனே பணம் செலுத்தாவிட்டால் இன்றே மின் இணைப்பைத் துண்டித்துவிடுவோம்” என்று உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வந்தால், அதைக் கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர்கள். இதுபோன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) எச்சரித்துள்ளது. மின்சார வாரிய அதிகாரிகள் போலப் பேசிப் பொதுமக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைச் சுருட்டும் இணைய மோசடிகள் கூடி வருவதால் இந்த எச்சரிக்கை.

மோசடி எப்படி நடக்கிறது?

ADVERTISEMENT

மோசடிக் கும்பல்கள் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மூலம் ‘கட்டணம் நிலுவையில் இருக்கிறது, குறிப்பிட்ட நேரத்துக்குள் செலுத்தாவிட்டால் இணைப்பு கட்’ என்று மிரட்டும் செய்திகளை அனுப்புகின்றன. அதை நம்பி அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டால், மின்வாரிய அதிகாரி போலப் பேசுவார்கள். பிறகு கட்டணம் செலுத்த ஒரு லிங்கை அனுப்புவார்கள். சில நேரம் குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் வற்புறுத்துவார்கள்.

பணம் எப்படித் திருடப்படுகிறது?

ADVERTISEMENT

அவர்கள் அனுப்பும் லிங்கைத் திறந்து, சொல்லும் செயலியை இறக்கினால் உங்கள் மொபைலின் கட்டுப்பாட்டை நீங்கள் இழக்க நேரிடலாம். குறிப்பாக ஸ்கிரீன் ஷேரிங் செயலிகள் மூலம் உங்கள் மொபைலில் நடப்பதை மோசடிக்காரர்கள் அப்படியே கண்காணிக்க முடியும். அப்படி வங்கிக் கணக்கு விவரங்கள், ரகசிய எண்களைத் தெரிந்துகொண்டு பணத்தை எடுத்துவிடுகிறார்கள்.

எஸ்பிஐ சொல்லும் பாதுகாப்பு வழிகள்

ADVERTISEMENT

தன் ‘கேப்டன் ஒய் – யுவர் சைபர் ரக்‌ஷக்’ (Captain Y – Your Cyber Rakshak) விழிப்புணர்வுத் திட்டத்தின் மூலம் எஸ்பிஐ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது:

  • தெரியாத எண்ணிலிருந்து வரும் பணம் செலுத்தும் லிங்குகளைத் திறக்காதீர்கள்.
  • OTP, ஏடிஎம் பின், CVV, யுபிஐ பின் ஆகியவற்றை யாரிடமும் சொல்லாதீர்கள்.
  • தெரியாத ஆட்கள் சொல்லும் செயலிகளைப் பதிவிறக்காதீர்கள்.
  • மின்கட்டண நிலுவை இருக்கிறதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியில் மட்டுமே பாருங்கள்.

பணம் போய்விட்டால்?

தாமதிக்காமல் தேசிய சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ அழைக்க வேண்டும். www.cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் கொடுக்கலாம்.

அவசரப்படுத்தும் ஒவ்வொரு மெசேஜும் உண்மையாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். பணம் கட்டும் முன் அது உண்மைதானா என்று சரிபார்ப்பதுதான் மோசடியிலிருந்து தப்பிக்கும் முதல் வழி.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel