சொகுசு காரில் வருவதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்த விமர்சனத்துக்கு, “இது மலிவான தனிநபர் தாக்குதல்; எனக்கு இன்றுவரை சொந்த கார் ஏதுமில்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்த முறைகேடு தொடர்பாக ராமசுப்பு என்பவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் “சு.வெங்கடேசன் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் உயர் ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வருகிறார். புத்தகங்களுக்கு கிடைக்கும் ராயல்டி வருமானம் மட்டும் இத்தகைய வாழ்க்கை முறையை தந்து விடுமா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.
இதுகுறித்து இன்று சு. வெங்கடேசன் எம்பி தனது எக்ஸ் தளத்தில், “ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது.
நான் இரயில்நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.
அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.
இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது.
நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.
இக்கேள்வி “தூய்மை மற்றும் எளிமை” எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம். ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை.” என பதிவிட்டுள்ளார்.









