ஒரு மாதத்தில் 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய உயிரியல் பூங்கா

public

கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் அனைவரையும் வீட்டுக்குள் முடங்க வைத்த கொரோனா சில மாதங்களுக்கு முன் கட்டுக்குள் வந்ததால், நாட்டின் பல இடங்களில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால், பல சுற்றுலா தளங்களுக்கு அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் சென்று மகிழ்ந்தனர். இந்நிலையில், மும்பை பைகுல்லாவில் உள்ள ராணி உயிரியல் பூங்காவுக்கு கடந்த ஒரு மாதத்தில் 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ராணி உயிரியல் பூங்காவில் சிங்கம் புலி யானை உள்ளிட்ட விலங்குகளும், பல பறவைகளும் உள்ளன. குறிப்பாக இந்த பூங்காவில் உள்ள பெங்குவின்களைப் பார்க்க அதிக கூட்டம் குவியும். இந்த பூங்காவில் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறுவர்களுக்கு 25 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் இந்த பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பல பள்ளி மாணவர்களை அந்த பள்ளி நிர்வாகம் சுற்றுலாவுக்காக இந்த பூங்காவிற்கு அழைத்து வந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தப் பூங்காவுக்கு நுழைவு கட்டண வசூலில் 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த பூங்காவுக்கு ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை வருவாயாக கிடைப்பது வரலாற்றிலேயே முதல் முறையாகும்.

இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குனர் சஞ்சய் திரிபாதி கூறுகையில், “கோடை விடுமுறை காரணமாக கடந்த மாதம் பூங்காவிற்கு கூட்டம் அலைமோதியதால் நாங்கள் பாதுகாப்பை அதிகரித்தோம். இங்கு வரும் பொதுமக்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுப்பதுதான் எங்களின் நோக்கம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பூங்காவில் அதிக அளவில் பொதுமக்களை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.” என்று தெரிவித்தார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *