கடத்தப்பட்ட சிலைகளை மீட்க தனிக் குழு கோரிய வழக்கு தள்ளுபடி!

public

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை, சிபிஐ தனிக் குழு அமைத்து மீட்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது வாஷிங்டன் நகரில் இருக்கக்கூடிய அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர் உள்ளிட்ட புராதான சிலைகள் இருந்தது. இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், நாட்டினுடைய பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் திருடப்பட்டுள்ளதால் இது சம்பந்தமாக சிபிஐ விசாரித்து சிலைகளை மீட்கும் வகையில் இணை இயக்குநர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று(மார்ச் 9) தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா , ஏற்கனவே சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இதே மனுதாரர் தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்திருக்கிறது. சிறப்பு நியமன அதிகாரிகளை நியமித்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. இந்த தகவல்களை மனுதாரர் தனது மனுவில் மறைத்திருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலை கடத்தல் சம்பந்தமான வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருவதால் இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய தேவையில்லை என்று குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *