�
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதல்முறையாக தமிழில் ‘உயர்ந்த மனிதன்’ படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார். ஏற்கெனவே எஸ்.ஜே.சூர்யாவை வைத்து கள்வனின் காதலி படத்தை தமிழ்வாணன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1998ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான படே மியான் சோட்டே மியான் படத்தில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சனும், ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் தமிழ்வாணன் பேசுகையில், “ரம்யா கிருஷ்ணன் ஏற்கெனவே படப்பிடிப்பு பணிகளை தொடங்கிவிட்டார். ஒருவாரகாலத்திற்கு படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருப்பார். தற்போது மும்பையில் சில காட்சிகளை படமாக்கி வருகிறோம். அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். நீண்டகாலத்துக்கு பிறகு இருவரும் இப்படத்தில் இணைகின்றனர். அவருக்கான கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தார்” என்று கூறினார்.�,