�சிறப்புக்கட்டுரை:வறட்சி, கடன், விரக்தி – தமிழக விவசாயிகளின் 2016 !வினிதா கோவிந்தராஜன்

public

நன்றி – scroll.in

2016 தமிழகத்திற்கு பசுமையாக இருக்கவில்லை, குறிப்பாக, அதன் விவசாயிகளுக்கு.

காவேரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் ஏற்பட்ட சிக்கல் காரணமாக குறுவை பயிரை இழந்த தமிழகம்,அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை பலமாக இல்லாததால், சம்பா பயிர்களையும் இழந்தது. டிசம்பர் 12 அன்று கரை கடந்த வர்தா புயல் காரணமாக சில நாட்கள் பொழிந்த மழை கூட,தமிழகத்தின் நீர் பற்றாக்குறைக்கு தீர்வாக அமையவில்லை.

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும், மாநில அரசிடம் இருந்து உதவி வேண்டும் எனும் கோரிக்கைகளோடு ஜனவரி 5-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தவிருக்கிறது விவசாயிகள் கூட்டமைப்பு. தங்கள் சீரழவின் பக்கம் அரசின் கவனத்தை திருப்பும் நோக்கோடு, கடந்த வாரம், இறந்த எலிகளை வாயில் கவ்வியபடி, கடன் தள்ளுபடியும், மீட்பு நடவடிக்கைகளும் வேண்டி திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பிற மாவட்டங்களை போலவே, திருச்சியிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. “ திருவாரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 14 விவசாயிகள் மரித்தனர்” என்கிறார் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பின் திருவாரூர் செயலாளர் ஜி சுந்தரமூர்த்தி. “ பயிர்கள் வறண்டு கொண்டிருக்கின்றன.விவசாயிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிலர் மனம் வெம்பி, மாரடைப்பால் மரிக்கின்றனர். கடன் அதிகரிக்கிறதே என கவலைப்பட்டு சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாகப்பட்டினத்தில் 29 பேர் இறந்திருக்கின்றனர். மாநிலத்தில் நடந்த மொத்த விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை 50 என செய்திகள் வெளியாகி இருக்கின்றன” என்கிறார்.

வழக்கமான மழையில் 20% மட்டுமே பெரும்பாலான மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலெப்மெண்ட் ஸ்டடீஸ்-ல் பேராசிரியராக இருக்கும் கே சுப்பிரமணியன். இந்த வருடம், வடகிழக்கு பருவமழை 62% குறைவாக பொழிந்திருக்கிறது; ஒரு நூற்றாண்டாக இது போல மழை பொழிவு குறைந்ததில்லை.

“ அதிமுக – நிலைத்திருக்க தள்ளாடிக் கொண்டிருப்பதனால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அரசாங்கம் அறிவிக்க நாட்கள் ஆகலாம்” என்று அவர் சொல்கிறார். தமிழக முதலமைச்சரும் அதிமுக தலைவருமான ஜெயலலிதாவின் மரணம், அவருடைய இடத்தை யார் நிரப்புவார் எனும் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. டிசம்பர் 31 ஆம் தேதி, ஜெயலலிதாவின் நெருக்கமான நண்பரான சசிகலா நடராஜன் கட்சி பொதுச் செயலாளராக பதவியேற்றார். இந்நிலையில், ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டையும் சசிகலா பெற வேண்டும் என கோரிக்கைகள் அதிகரித்தபடியே இருக்கின்றது

2012-13 ஆண்டு இரண்டு பருவமழைகளும் பொய்த்த போதும், சேலம் மேட்டூர் அணையில் இருந்து 2-3 மாதங்களுக்கு கிடைத்த நீரை வைத்து தங்கள் பயிர்களை விவசாயிகள் காப்பாற்றிக் கொண்டனர். ஆனால், இந்த வருடம், உச்ச நீதிமன்றம் பல முறை ஆணையிட்டும் கூட கர்நாடகா காவேரிக்கு நீர் திறந்து விடாத காரணத்தினால், மேட்டூர் அணையில் நீர் அளவு குறைவாகவே இருந்தது.

இம்முறை மேட்டூர் அணை 25 நாட்களுக்கு மட்டும் தான் திறக்கப்பட்டது என சுந்தரமூர்த்தி சொல்கிறார்.நீர் பாசனத்திற்காக மழைநீரை மட்டுமே நம்பி இருக்கும் இப்பகுதியின் கிராம கால்வாய்கள் கூட வற்றிப் போய் இருக்கிறது.

நிலத்தடி நீர் அதிகளவு இருக்கும் நீடமங்களம், நன்னிலம் போன்ற பகுதிகள் கூட இம்முறை வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது என சுந்தரமூர்த்தி சொல்கிறார். “ நிலத்தடி நீரில் அளவில் 90 அடியில் நீர் பெருக்கெடுத்த இடங்களில் எல்லாம், நீருக்காக 200 அடிகள் தோண்ட வேண்டியிருக்கிறது. மழை இல்லாமல் நிலத்தடி நீர் அளவு மிக குறைவாக இருப்பதனால், கடல் நீர் உட்புக தொடங்கியிருக்கிறது” என்கிறார்.

விருதுநகரில் 1000 நீர்நிலைகள் இருந்த நிலையிலும், விலங்குகள் கூட குடிக்க தண்ணீர் தேடி அலைந்து வருந்துகிறது என்கிறார் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளரான ஏ.விஜயமுருகன்,

நெல் முதல் வெங்காயம் வரை பல பயிர்கள் விதைக்கப்படும் மாவட்டத்தின் பல பகுதிகளில், விவசாயிகள் சம்பா பயிர்களை இரண்டு அல்லது மூன்று முறைகள் விதைத்திருக்கின்றனர்.ஒவ்வொரு முறை வயல் வற்றிப் போகும் போதும், மழை வரும் என நம்பிக்கையில் மேலும் ஒரு முறை பயிர்களை நட்டனர். ஆனால், மழை பொழியவில்லை. அதன் விளைவாக இழப்புகள் கூடிக்கொண்டே போயின.

பண மதிப்பு நீக்கத்தின் தாக்கம்!

500 மற்றும் 1000 ரூபாய் தாள்களின் மதிப்பை நீக்கிய அரசின் நடவடிக்கை விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமாக்கியிருக்கிறது. புழக்கத்தில் இருக்கும் 86% பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதனால் உண்டான பணப்பற்றாக்குறை பணத்தையே சார்ந்து இருந்த பொருளாதாரத்தை முடமாக்கியிருக்கிறது.

“ பயிர்களை விதைத்த சமயத்தில், எங்கள் விதைகள் வாங்க முடியவில்லை, உரங்கள் வாங்க முடியவில்லை, எங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை” என்கிறார் விஜயமுருகன்.

மாநிலத்தில் வறட்சி நிலைமை இவ்வளவு மோசமானது இது தான் முதல் முறை என்கிறார்,மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கே பாலகிருஷ்ணன்,

“பண மதிப்பு நீக்கம் நிலைமையை இன்னமும் மோசம் தான் ஆக்கியிருக்கிறது. பணப்பரிமாற்றம் இல்லை, வருவாய் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, , விவசாயம் இல்லை, அறுவடை இல்லை – எதுவுமே இல்லை. இவை தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கும், மரணங்களுக்கும் காரணம்” என்கிறார் அவர்.

பாலகிருஷ்ணன் தன் கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து மாநில அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்,அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் சொல்கிறார். ஆனால், இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

“விவசாயிகளுக்கு உதவும் வகையில் எதாவது ஒரு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். அவர்களை காப்பாற்ற வழியே இல்லை. இப்போது மழை பொழிந்தாலும் கூட, பயிர்களை காக்க முடியாது. பயிர் காப்பீட்டுத் தொகை கிடைத்தால் கூட போதும், அவர்கள் தற்கொலை அளவிற்கு செல்ல மாட்டார்கள். இந்த பிரச்சினை மேல் அரசு கவனம் செலுத்தவில்லை என்றால், விவசாயிகள் தினசரி தற்கொலை செய்து கொள்வதை யாராலும் தடுக்க முடியாது” என்கிறார் சுந்தரமூர்த்தி.

https://scroll.in/article/825694/drought-debt-and-despair-weigh-down-tamil-nadus-farmers-after-2016-brings-series-of-crises

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *