தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்: சாதுர்யமாக மீட்ட போலீஸ்!

public

மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி கழுத்தில் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் சாதுர்யமாக மீட்டனர்.

நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நெய்வேலி நகரில் வசிக்கும் மரியதாஸின் மகள் ஜெயமேரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்த ஜெயமேரி, குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நெய்வேலி நகரத்தில் உள்ள மனைவியின் வீட்டுக்குச் சென்ற மணிகண்டன், வீட்டின் முன்பாக கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டு, கையில் பெட்ரோல் கேனுடன் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இதைப் பார்த்த மணிகண்டனின் மாமியார் தெருவில் வந்து கூச்சலிட்டுள்ளார்.

அப்போது, அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் இதைக் கண்டு, தனது உயிரையும் பணயம் வைத்து, சூசமாக பேசி அவரை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும், மணிகண்டன் விடாப்பிடியாக தற்கொலை செய்துகொள்ளப் போவதாக, கூறிக்கொண்டு இருந்ததால், பொதுமக்கள் யாரும் பயத்தில் அவரின் அருகே செல்லவில்லை. தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்குமாறு தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விபரீதத்தை உணர்ந்த காவலர் பாலச்சந்திரன் நெய்வேலி நகர காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமைக் காவலர் சங்கர் மற்றும் காவலர் ராஜியும் சமாதானம் பேசி மணிகண்டனை மீட்க முயன்றனர். இறுதியில் மணிகண்டனின் இரண்டு வயது குழந்தையைத் தூக்கிவந்த முதன்மை காவலர் பாலச்சந்திரன், ‘சரி வா, மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளுவோம்’ என்று துணிச்சலாக மணிகண்டனிடம் சென்றார்.

குழந்தையைப் பார்த்ததும் அழுதபடியே குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார் மணிகண்டன். இந்த சமயத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு அவரது உடலிலிருந்த வெடிகுண்டுகளை அகற்றிவிட்டு, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார் பாலச்சந்திரன். பின்னர், மணிகண்டன் தான் விஷம் அருந்தியதாகக் கூறியதால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

உயிரைப் பணயம் வைத்து மணிகண்டனைக் காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனுக்கு பொது மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்துவருகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *