தமிழகம்: திராவிட ஆட்சியின் 49 ஆண்டுகள்-எச்.பீர்முஹம்மது

public

ந்திய நிலப்பரப்பில் தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு. முதல் சுதந்திரப்போர் இங்கு தான் உருவானது. இந்தியாவிலேயே பிராமணர்களை எதிர்த்து முதன் முதலாக இயக்கம் கண்டது இங்கு தான். காந்தி தன் விடுதலைப்போராட்ட உத்திகளை தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தான் வகுத்துக்கொண்டார்.

இப்படியான தமிழ்நாட்டின் பாரம்பரிய வரலாறு பல தூரங்களை கடந்து வந்திருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் பிராமணர் அல்லாதவர்கள் நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கம் அரசியல் தேவைகளை கருதி ஜஸ்டிஸ் கட்சியாக மாறியது. பின்னர் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தில் அதில் இந்தியர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்ய தீர்மானித்தது. அதனடிப்படையில் 1920 ல் சென்னை மாகாணத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு மாகாணத்தின் முதல் முதலமைச்சராக சுப்பராயலு ரெட்டியார் பதவியேற்றார். பின்னர் அவர் மரணமடைந்து விட பனகல் அரசர் பதவியேற்றார். இதன் தொடர்ச்சியில் நீதிக்கட்சியானது சென்னை மாகாணத்தில் சுமார் 13 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தது. இந்த காலத்தில் பிராணமர் அல்லாதவர்களுக்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பிற்கு இடமளித்தது. பிரிட்டிஷ் அரசுடன் போராடி இவர்களுக்கு பல உரிமைகளை பெற்றுத்தந்தது. இந்தியாவிலே பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமூக நீதியை நீதிக்கட்சி தான் பெற்றுத்தந்தது. இந்நிலையில் அந்த தருணத்தில் காங்கிரஸில் இருந்த பெரியார் 1925 ல் காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி மற்றும் பிறருடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியே வந்தார். சாதி ஒழிப்பு, தீண்டாமை போன்ற பல விஷயங்களில் அவருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பெரியார் நீதிக்கட்சிக்கும் ஆதரவளித்து வந்தார். இந்நிலையில் 1937 ல் நடந்த தேர்தலில் முதன் முதலாக காங்கிரஸ் பங்கு கொண்டு வெற்றியும் பெற்றது. இராஜாஜி முதல்வராக பதவியேற்றார். இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டது. இதனை பெரியார் கடுமையாக எதிர்த்தார். இதனால் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறுவார்கள் என்று எச்சரித்தார். இதன் தொடர்ச்சியில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. போரட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் சிறை சென்றார். சிறையிலிருந்து வெளியே வந்த பெரியார் 1938 ல் நீதிக்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் தான் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாதுரை பெரியாரை சந்திக்கிறார். அதன் பிறகு அண்ணாவும் நீதிக்கட்சியில் இணைகிறார். ஓர் அர்த்தத்தில் சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழ்நாடு வரலாற்றின் தொடக்கம் இப்போது தான் குறிக்கப்படுகிறது எனலாம்.

நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பொறுப்பேற்றவுடன் அது உத்வேகம் பெற்றது. சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். மேலும் பெண்கள் மீதான வன்முறைகளை, ஒடுக்குமுறைகளை கடுமையாக எதிர்த்தார். சாதிக்கொடுமைகளை எதிர்த்தார். இதற்காக சாதிமறுப்பு திருமணங்களை ஆதரித்தார். இந்நிலையில் 1944 ல் நீதிக்கட்சியை கலைத்து விட்டு திராவிடர் கழகம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார். இதன் நோக்கம் சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், சோசலிசம் போன்ற பல கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் பெரியார் அறிவித்தார். இதன் பின்னர் பெரியார் முழுக்க முழுக்க இந்திய தேசிய உணர்விற்கு எதிரானவராகவே இருந்தார். காரணம் இந்திய தேசியம் என்பது பார்ப்பண தேசியமே என்றும், இருக்கின்ற வருணாசிரம அமைப்பை தக்க வைக்க தான் அது போராடும் என்றும் அறிவித்தார். மேலும் இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றார்.

இந்நிலையில் 1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதனை பெரியார் துக்க நாள் என்றார். வெள்ளைக்காரன் கையிலிருந்து பார்ப்பண பனியாக்களின் கையில் அதிகாரம் ஒப்படைக்கப்படும் நாள் என்றார். ஆகவே நமக்கு துக்க நாள் என்றார் பெரியார். அதே நேரத்தில் திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணா மற்றும் சிலர் இதனை இன்ப நாள் என்றனர். பார்ப்பணர்கள் கையில் அதிகாரம் மாறுகிறது என்றாலும் காலங்காலமாக இந்தியாவை அடக்கியாண்ட பிரிட்டனிடமிருந்து பலபேரின் வியர்வையும், தியாகமும் காரணமாக இந்தியா விடுதலை பெற்றதால் இது இன்பநாள் என்று அண்ணாத்துரை அறிவித்தார். இது இருவருக்குமிடையே கசப்பை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் பெரியார் தன்னை விட வயதில் மிகவும் குறைந்த மணியம்மையை திருமணம் செய்ததால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு முற்றியது. இந்நிலையில் 1949 ல் அண்ணா தன் ஆதரவாளர்களுடன் மண்ணடியில் உள்ள தன் நண்பரின் வீட்டில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தனி இயக்கம் தொடங்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இந்த இயக்கத்திற்கு திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொடக்கவிழா 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ல் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடைபெற்றது. இதில் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி சம்பத், மதியழகன், என்.வி, நடராஜன் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். (இந்த கூட்டத்தில் கருணாநிதி இல்லை. அப்போது அவர் பெரியார் இயக்கத்தில் இருந்தார்.

அதே நேரத்தில் கூட்டத்தில் பார்வையாளராக கண்ணதாசனுடன் கலந்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது) இந்த இயக்கம் சுயமரியாதை, சமத்துவம், பெண்ணியம், சமூகநீதி போன்ற கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தலைவர் பதவி கிடையாது. மாறாக எங்களுக்கு தலைவர் பெரியார் தான். ஆகவே அந்த இருக்கை காலியாக தான் இருக்கும் என்றார் அண்ணா. பொதுச்செயலாளர் பதவி மட்டுமே இனி திமுகவில் இருக்கும் என்றார். இதன் பிறகு திராவிடர் கழகத்திற்கும் இவர்களுக்குமிடையேயான நிலைபாடுகளில் மாற்றம் ஏற்பட்டன. கடவுள் இல்லை என்றார் பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அண்ணா. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் ஒன்று மனிதநேயமும் ஒன்று தான் என்றார் அண்ணா “ கடவுள் இல்லை என்றவர்கள் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார் என்று கண்டறிந்தது தான் இவர்கள் அடைந்த முன்னேற்றம் என்று நக்கலடித்தார் பெரியார்.

ஆரம்ப கால திமுக பெரியாரை போன்றே தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்தது. பின்னர் காலச்சூழலின் கட்டாயத்தை கருதி 1957 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அதே ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் திமுக 15 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் திமுக சார்பில் குளித்தலையில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்ணாவும் காஞ்சிபுரத்தில் வெற்றிபெற்றார். இதன் மூலம் திமுக தன் தேர்தல் புறக்கணிப்பு நிலைபாட்டை கைவிட்டு விட்டு முதன்முதலாக தேர்தலில் பங்கேற்றது. அப்போது தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெரியார் காமராசருக்கு ஆதரவாக இருந்தார். அவரின் வளர்ச்சி திட்டங்களை பெரியார் பாராட்டினார். சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா? என்றார் பெரியார். ஆனால் திமுக காமராசருக்கு எதிராக இருந்தது. 1963 ல் காமராசர் பதவி விலக தமிழ்நாட்டில் பக்தவச்சலம் ஆட்சி ஏற்பட்டது. பக்தசவச்சலம் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது திமுக தன் ஆரம்ப கால திராவிட நாடு கொள்கையை கைவிட்டிருந்தது. காரணம் சீனப்போர் இந்தியாவில் ஏற்படுத்திய மாற்றம் காரணமாக1963 ல் நேரு அரசாங்கம் பிரிவினை தடைச்சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் திமுகவிற்கு இந்த கொள்கையை கைவிட வேண்டியதன் நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் அண்ணா இவ்வாறு குறிப்பிட்டார். “ திராவிட நாடு என்பது எங்களது தனிக்கொள்கை. அவற்றை பேசவோ அல்லது எழுதவோ உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. நாங்களே நாட்டின் நிலைமையறிந்து, அதனால் எழும் விளைவுகளறிந்து கைவிட்டோம். அக்கட்சியே அவற்றிலிருந்து விலக்கிகொண்டபொழுது அக்கொள்கை பரவவோ மீண்டும் எழவோ வாய்ப்பில்லை. இதை முன்னிருத்தியே அக்கொள்கையை கைவிட்டோம். இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து பல இடங்களில் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுகவும் பங்கேற்றது. அப்போது இது பிற்காலத்தில் அரசியல் ரீதியாக தங்களுக்கு பலனை அளிக்கும் என்று திமுக நினைத்திருக்காது தான். அதே நேரத்தில் பெரியார் இந்த போராட்டங்களை விமர்சித்தார். 1937 ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்து அதற்காக சிறை சென்ற பெரியார் 1963 ல் பக்தவச்சலம் அரசிற்கு ஆதரவளித்தன் காரணம் காமராசர் ஆதரவு நிலைபாடே. இந்நிலையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி நான்காம் ஆண்டில் அதாவது 1967 ல் நடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முதன்முதலாக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. விருதுநகரில் திமுக சார்பில் போட்டியிட்ட கல்லூரி மாணவர் சீனிவாசன் என்பவரிடம் காமராஜர் தோற்றார்.

1967 ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியின் சகாப்தம் தொடங்குகிறது எனலாம். திமுக வெற்றி பெற்றதை அடுத்து அண்ணாத்துரை முதல்வராக பதவியேற்றார். இவர் பதவியேற்றவுடன் தமிழ்நாட்டின் வரலாற்றில் மூன்று முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

அதுவரை மதராஸ் மாகாணம் என்றிருந்த பெயர் தமிழ்நாடு என்று மாற்றம் செய்யப்பட்டது சுயமரியாதை சீர்திருத்த திருமணம் சட்டம் இயற்றப்பட்டது

இந்தி ஒழிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கை உருவாக்கப்பட்டது.அண்ணாவின் ஆட்சியை பொறுத்தவரை அவர் ஆண்ட இரு ஆண்டுகள் தமிழ்நாட்டை திராவிட கோட்பாடு சார்ந்து கொண்டு போக தீர்மானித்தார். நிர்வாகத்தில் , அதிகார மட்டத்தில் பார்ப்பணர்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டார். ஊழலுக்கு அறவே இடமில்லாமல் ஆட்சி அமைத்தார். முந்தைய காங்கிரஸ் அரசு பண்ணையார்களின் அரசாக பார்க்கப்பட்டது. அண்ணா அந்நிலையை மாற்றினார். சாதாரண மக்களும் கட்சியில் இடம்பெறும் வகையில் அதனை மாற்றினார். ஆடம்பரமற்ற எளிமையின் இலக்கணமாக இருந்தார். நிர்வாகத்தில் எந்த முறைகேடுகளும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

இந்நிலையில் 1969 பிப்ரவரியில் அண்ணா மரணமடைந்தார். இந்நிலையில் திமுகவின் அடுத்த தலைமை யார் என்றும், அடுத்த முதல்வர் யார் என்றும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் அப்போது இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியன் தான் முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறி கருணாநிதி முதல்வராக பெரும்பான்மை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னணியில் எம்.ஜி.ஆர் இருந்தார். காரணம் திரைத்துறை காரணமாக இருவருக்குமிடையே நட்பு இருந்தது. மேலும் சினிமாவில் ஏற்பட்ட புகழ் எம்.ஜி.ஆருக்கு கட்சியில் செல்வாக்கை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1961 ல் ஈ.வெ.கி சம்பத் திமுகவிலிருந்து விலகி தனிக்கட்சியை தொடங்கினார்.

அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அன்றுமுதல் கட்சியில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை பொதுச்செயலாளர் பதவி மட்டுமே இருந்த திமுகவில் புதிதாக தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. மகன் ஸ்டாலினை மாணவர் அணியில் கொண்டு வந்தார் கருணாநிதி. இது பிந்தைய காலங்களில் கட்சியை கைமாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்ற கணிப்பு அவரை பொறுத்தவரை சரியாக தான் இருந்திருக்கிறது.

இந்நிலையில் தான் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த எம்ஜிஆருடன் அவருக்கு கருத்துவேறுபாடும், கசப்பும் ஏற்பட்டது. இதன் பின்னால் எழுதமுடியாத பல மறைவான திரைக்கதைகள் இருக்கின்றன. இந்நிலையில் இதனை மத்திய உளவுத்துறை மோப்பம் பிடித்தது. அப்போது மத்தியில் இந்திராகாந்தி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் தன்னை வீழ்த்திய திமுகவை காங்கிரஸ் பெரும் சவாலாக எடுத்துக்கொண்டது. இதனால் திமுகவை உடைத்தாக வேண்டும் என்ற திட்டம் காங்கிரஸுக்கு இருந்தது. அதற்காக எம்ஜிஆரை பயன்படுத்திக்கொண்டது. கருணாநிதி- எம்ஜிஆருக்குமிடையே மத்திய உளவுத்துறை உரசல்களை மேலும் கூர்மைப்படுத்தியது. இது 1972 ல் நடந்த திமுக பொதுக்குழுவில் வெடித்தது. எம்.ஜி.ஆர் சில கணக்குகளை கருணாநிதியிடம் கேட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதே ஆண்டு எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தவரான எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டது பல தரப்பினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவரின் ஆதரவாளர்கள் வற்புறுத்தியதன் காரணமாக அதே ஆண்டில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்தினார்.

1969 ஆண்டு முதல் 1977 வரையிலான கருணாநிதி ஆட்சி காலத்தில் பல சீர்திருத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் நிர்வாகம் பல ஊழல்களால் நிறைந்திருந்தது. புகழ்பெற்ற வீராணம் ஊழல் மற்றும் பூச்சி மருந்து ஊழல் ஆகியவை இந்த காலகட்டத்தில் தான் ஏற்பட்டது. இதற்காக எமர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஊழல்களை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் 1975 ல் திமுகவின் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்த நெடுஞ்செழியன் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து வெளியே வந்தார். க.ராசாராமுடன் இணைந்து மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தோற்றுவித்தார். இந்த காலகட்டத்தில் தான் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் இரண்டாடுகள் கட்சியை நடத்திய நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கிணங்க 1977 ல் அதிமுகவுடன் கட்சியை இணைத்தார்.

1977 ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக எம்.ஜி.ஆர் ஆட்சியை கைப்பற்றினார். இவரின் ஆட்சி காலம் சுமார் பத்தாண்டுகள். இந்த காலத்தில் எம்.ஜி.ஆர் பல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றினார். காமராஜரின் மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அவரின் காலத்தில் தான் தமிழ்நாட்டில் பல கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட்டன. கிராம சாலைகள் போடப்பட்டன. மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தப்பட்டது. கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை வசதி, வீடுகளுக்கு அடுப்புகள், விதவை மறுமண நிதி உதவி மற்றும் மாணவர்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால் சாதாரண மக்களுக்கு எம்.ஜி.ஆர் மீது அனுதாபமும், ஆதரவும் ஏற்பட்டது. மேலும் முக்கிய அம்சமாக பலரின் நீண்டகால கனவான தமிழுக்கான பல்கலைகழகமாக தஞ்சை தமிழ்பல்கலைகழகம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் எழுத்து சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. இதனோடு சினிமாத்தனமும் சேர்ந்து கொண்டதால் தொடர்ந்து மூன்று முறை அவரால் முதலமைச்சராக இருக்க முடிந்தது.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக 1987 ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஜானகி, ஜெயலலிதா ஆகிய இரு அணிகளாக கட்சி பிளவுபட்டது. சிறிதுகாலம் முதலமைச்சராக இருந்த ஜானகி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதன் விளைவாக 1989 ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இதில் திமுக வெற்றி பெற்று கருணாநிதி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக இரண்டாம் இடத்தை பெற்றது. இதனால் அவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஜெயலலிதா தாக்கப்பட்டார். பின்னர் இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சி நடைபெற்ற நிலையில் இலங்கை பிரச்சினையை காரணம் காட்டி ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றது. இதன் பிறகு ஏற்பட்ட அனுதாபம் காரணமாக 1991 ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.

1991 க்கு பிறகு இதுவரை மூன்றுமுறை அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஜெயலலிதாவை பொறுத்தவரை இன்னும் அவர் சரியான அரசியல் அனுபவ முதிர்ச்சி பெறவில்லை எனலாம். நாகரீகமற்ற அரசியல், கருத்து சுதந்திர மறுப்பு, ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை, நேரடி மற்றும் மறைமுக ஊழல், கட்சியில் எம்.ஜி.ஆர் கால நபர்களை காலி செய்தது போன்றவை அவரின் பலவீனங்கள். மேலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், அடாவடித்தனம் போன்றவை அதிமுகவை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்து செல்லும் என்ற கேள்வியை உருவாக்குகிறது. இவரின் 15 ஆண்டுகால ஆட்சி முழுவதும் சாதகமான அம்சங்கள் குறைவே. ஈழப்பிரச்சினைகளில் சில தீர்மானங்களை சட்டமன்றத்தில் போட்டது, சில இலவச திட்டங்கள் என்பதை தவிர பெரிய அளவில் சொல்லும் படியான திட்டங்கள் இல்லை. தன்னைத்தவிர யாரையும் நம்பாதது அவரின் குணாதிசயங்களில் ஒன்று.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கருணாநிதியின் சரியான ஆட்சிகாலகட்டம் என்பது 1996 முதல் 2001 வரையிலான காலகட்டம் தான். இந்த காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சிக்கான அடித்தளம் இடப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வரத்தொடங்கின. மேலும் புதிய பாலங்கள் மற்றும் சாலைகள் போடப்பட்டன. மின்னணு ஆட்சிமுறைக்கு தொடக்கம் இடப்பட்டது.

கருணாநிதியின் வருகைக்கு பிறகு தான் திமுக சட்டமன்ற தேர்தலில் முன்னை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் கிளைகள் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் திமுக வரலாற்றில் மிகப்பெரும் கறையாக கடந்த திமுக ஆட்சிகாலத்தில் நடந்த ஈழப்படுகொலை இருக்கிறது. காங்கிரஸுடன் இணைந்து போருக்கு அவர் கொடுத்த மறைமுக ஆதரவு உலகத்தமிழர்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. முத்தமிழ் அறிஞர், தமிழின காவலர் என்ற அடையாளங்கள் இதன்மூலம் கேள்விக்குறியாயின. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலும் இதனோடு இணைந்து கொண்டது அதன் பெரும் பலவீனம்.

அண்ணாவால் ஜனநாயக மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட திமுகவை குடும்ப கட்சியாக மாற்றி அதற்குள்ளே இருவர் வாரிசு அரசியலை உருவாக்கியது கருணாநிதியின் பெரும் தவறுகளில் ஒன்று. அது தான் இன்று வரை அவருக்கு பெரும் சவாலாகவும், தலைவலியாகவும் இருந்து கொண்டிருக்கிறது.

1967 முதல் இதுவரை 49 ஆண்டுகள் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி புரிந்திருக்கின்றன. வட இந்தியாவின் மாகாணங்களை போலல்லாமல் தமிழ்நாட்டில் சமூக வளர்ச்சி , சமூக நகர்வு, கிராமம்-நகரம் இணைப்பு, இடஒதுக்கீடு உரிமை, தொழில்வளர்ச்சி ஆகியவை இவர்களின் சாதனைகளாகும். அதே நேரத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு போதிய கவனம் செலுத்தாதது, மதுக்கடைகள், மிதமிஞ்சிய ஊழல், இயற்கை அழிப்பு, குடும்ப ஆட்சி, அரசியல் நாகரீகம் இல்லாதது, கல்வித்துறை சீர்கேடு, ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்தல் போன்றவை இவர்களின் எதிர்மறையான அம்சங்கள். இந்த காரணங்களுக்காகவே இன்றைய இளைய தலைமுறை மாற்று அரசியலை விரும்புகிறது. இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாம் கட்சி ஒன்று தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் வர வேண்டும் என்று விரும்புகிறது. இதற்கான தூரம் இன்னும் கடக்கப்படவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் இரு கட்சிகளும் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளாவிட்டால் மாற்று அரசியல் கூடிய விரைவிலே தமிழ்நாட்டில் உருவாகி விடும் என்ற எதார்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

mohammed.peer1@gmail.com�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *