~சிறப்புக் கட்டுரை: சைபர் கிரைம் 3 – விமலாதித்தன்

public

இனிய சைபர் வில்லன்

போன பதிவில் சோஷியல் இன்ஜினீயரிங் பற்றிய சிறு குறிப்பை மட்டும் பார்த்தோம். இப்போது சோஷியல் இன்ஜினீயரிங் என்றால் என்ன என்பதைக் கொஞ்சம் விரிவாக அலசுவோம் நண்பர்களே…

சமூக வலைதளங்களின் மூலம் நம்முடன் நட்பாக (சோஷியலாக) பழகி, நம்மை அறிந்தோ, அறியாமலோ நம் நம்பிக்கையின் அடிப்படையில் பகிரும் தகவல்களைத் திரட்டி, அந்தத் தகவல்களின் அடிப்படையில் நம்மைக் குறி வைத்து நிகழ்த்தப்படும் குற்றங்களே சோஷியல் இன்ஜினீயரிங் எனப்படும் சைபர் குற்றங்களாகும்.

இன்று நம் அனைவருக்கும் நமது அருமை பெருமைகளை, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த உலகுக்குப் பறைசாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. வெளியில் சொல்ல முடியாத அந்த உள்ளுணர்வுகளுக்கு வடிகாலாக வந்து சேர்ந்தவையே நாம் இன்று முழுநேரமும் உலவித் திரியும் சமூக வலைதளங்களான Facebook , Twitter , LinkedIn , instagram போன்றவை. காலைக்கடனைக் கழிப்பதில் இருந்து, கல்லூரிக்குச் செல்வது முதற்கொண்டு, காதலிக்கோ கட்டிய மனைவிக்கோ சேவை செய்வது வரைக்கும் இன்று சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவேற்றி அதகளப்படுத்தி வருகிறோம்.

இன்று நமது அனைவரின் நாள்களும் அதிகாலையில் இந்தச் சமூக வலைதளங்களுடன் தொடக்கி இரவில் இந்தச் சமூக வலைதளங்களுடனேயே முடிவடைகின்றன. சமூக வலைதளங்களில் நாம் இல்லாவிட்டால் சமூகத்தில் இன்று நம்மை மற்றவர் பார்க்கும் பார்வைகூடக் கேலிக்குரியதாகவே இருக்கும் என்றால் அது மிகை இல்லை. ஒரு குடும்பத்தில் தாத்தா தொடங்கி பேரன் வரைக்கும் அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பதும், ஒரே வீட்டுக்குள் தீவுகள் போலத் தனி தனியாக அமர்ந்துகொண்டு கையடக்க ஸ்மார்ட் தொலைபேசிகள் மூலம் சமூக வலைதளங்களில் உலவித் திரிவதும் பல குடும்பங்களில் நாம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய காட்சி.

சொல்லப்போனால் இன்றைய குடும்ப உறவுகளைத் தனி தீவுகளாக மாற்றிவைத்த பெருமை இந்தச் சமூக வலைதளங்களையே சேரும். இனி வரும் காலங்களில் பின்கண்ட செய்திகளை நாம் எதிர்கொண்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை

– Facebookஇல் லைக் விழாததால் தற்கொலை

– Facebook விமர்சனம் / பதிவு காரணமாகக் கொலை

– Facebook 100 லைக் போட்டால் சினிமா டிக்கெட் இலவசம் 🙂

– Facebook இல் இல்லாததால் விவாகரத்து

– Facebook இல் இருப்பதால் விவாகரத்து

ஏற்கெனவே இந்த Facebook மூலம் காதல், கல்யாணம், போலீஸ் கைது என சகல வகையான ரகளைகளும் நிஜத்தில் அரங்கேறியிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே சமயம் இயற்கைப் பேரிடர் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது இந்தச் சமூக வலைதளங்கள் மக்களுக்குப் பெரிய அளவில் உதவக்கூடியவை என்பது சென்னை வெள்ளத்தின்போது நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்த உண்மை. இது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களில் ஒன்று, அவ்வளவே.

**அபாயகரமான மறுபக்கம்**

இந்த நாணயத்தின் மறுபக்கத்தைப் பற்றியும் அது எப்படி சைபர் குற்றங்களை ஊக்குவிக்கிறது என்பதையும் இங்கு பார்ப்போம்.

சமுக வலைதளங்களில் முகமறியா நபர்களுடன் அரட்டை அடிப்பது என்பது பலருக்கும் பிடித்த பொழுதுபோக்கு. இது மிக அபாயகரமான ஒன்றும்கூட. ஒரு படத்தில் நான் அமெரிக்காவில் இருந்துதான் பேசுகிறேன் என்று போனில் பீலா விடுவதைப் போல, உங்கள் பக்கத்து ஊரான ஆட்டையாம்பட்டியில் இருக்கும் ஒரு நபர் அமெரிக்காவிலிருந்து உங்களுடன் பேசுவதாக உங்களை எளிதில் ஏமாற்றலாம். நீங்கள் புத்திசாலி என்றால் அந்த நபர் செய்தி அனுப்பும் கணினியின் முகவரியை (IP Address) வைத்து அந்த நபரின் தில்லாலங்கடியை எளிதில் கண்டுபிடித்து அந்த நபரின் ட்ரவுசரைக் கழட்டலாம்.

ஆனால், சமூக வலைதளங்களில் உலவும்போது நம்மில் பெரும்பான்மையோர் நம்மிடம் சமூக வலைதளத்தில் பழகும் முகமறியா நபரின் உண்மை முகங்களை அறிய அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. எல்லோரையும் இயல்பாக நம்பும் நம்முடைய வெள்ளந்தித்தனம் நம்மை அவ்வளவாக யோசிக்க விடுவதில்லை. விளைவு ஒரு தமிழ்ப் படத்தில் காமெடி நடிகர் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று தானாகப் போய் போலீஸ் ஜீப்பில் ஏறுவதுபோல, முகமறியா நபர் நமக்குச் சமூக வலைதளத்தில் விரிக்கும் வலையில் நாமாக வலியப் போய் சிக்குகிறோம்.

பல நேரங்களில் இந்த முகமறியா நபர்கள் நம் நம்பிக்கையைப் பெறும்படி முதலில் நடித்து, பின் பண மோசடி, பாலியல் குற்றங்கள் என்ற பல விதமான குற்றத் தாக்குதல்களை நம்மைக் குறிவைத்து நிகழ்த்துகின்றனர். சமூக வலைதளத்தில் மார்பிங் செய்யப்பட்டு புகைப்படம் வெளியிடப்பட்டதால் சில பெண்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகளை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். தங்கள் மோசமான எண்ணங்களுக்கு ஒத்துழைக்காகக் குடும்பப் பெண்களின் தொலைபேசி எண்களை விபச்சார விடுதி எண்களாகக் கொடுத்த கொடுமைகள் எல்லாம் இந்த சமூக வலைதளங்களில் நடந்தேறின. அதனால் பல குடும்பங்கள் நிம்மதியைத் தொலைத்து நிற்கின்றன.

**வகுத்துக்கொள்ள வேண்டிய எல்லைகள்**

சுய கட்டுப்பாடு என்பது நிம்மதியான வாழ்க்கை வாழ சமுதாயம் மற்றும் நம் கலாசாரம் நமக்கு போட்டிருக்கும் லட்சுமண ரேகை. அந்த லட்சுமண ரேகைக்குள் பாதுகாப்பாக நின்றுகொண்டு வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதும் ‘பிரேக் தி ரூல்ஸ்’ என்று சுய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் மனம்போனபோக்கில் சமூக வலைதளங்களில் சோஷியலாக பழகி, பின் மன நிம்மதிக்கு வேட்டு வைத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம். சமூக வலைதளங்களில் பின்கண்ட கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது நம்மையும், நம் மன நிம்மதியையும் பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கும்:

1) முகமறியா நபர்களிடம் இருந்து வரும் நட்பு அழைப்பை உடனடியாக ஏற்காமல், அந்த முகமறியா நபர் இட்ட பதிவுகள், அந்த நபர் விரும்பிய (லைக்கிய) பதிவுகள், அவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பின்னணி, நபர் பணிபுரியும் நிறுவனம், கல்வித் தகுதி, திருமண நிலை போன்றவற்றைத் தெளிவாக அலசி ஆராயுங்கள். நீங்கள் நட்பு அழைப்பை உடனடியாக ஏற்றால் உங்களை ஏமாற்றுவது மிக எளிது என்பதை நீங்களாகவே இந்த உலகுக்கு விளம்பரபடுத்துவது போலாகும். அழைப்பு விடுத்த நபரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாக அலசி ஆராய்ந்து திருப்தி அடைந்த பின்னே அந்த நபரின் நட்பு அழைப்பை ஏற்கவும். சைபர் குற்றவாளிகளில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது. சமூக வலைதளங்கள் மூலம் அப்பாவிப் பெண்களை சீரழித்த காமுகர்களும் உண்டு. ஆண்களைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிப் பண மோசடி செய்த பெண்களும் உண்டு.

2) நம்மைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பகிரச் சமூக வலைதளங்கள் ஒன்றும் விளம்பரப் பதாகைகள் அல்ல. அதனால் உங்களை பற்றி நீங்கள் சமூக வலைதளங்களில் பகிரும் தகவல்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

3) நீங்கள் பணி புரியும் நிறுவனம் சம்பந்தமான செய்திகளையோ, புகைப்படங்களையோ சமூக வலைதளங்களில் பகிரும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் அலுவலகத்தில் எடுத்த புகைப்படங்களை வைத்தே அலுவலகத்தின் நுழைவாயில் எங்கு இருக்கிறது, எத்தனை காவலர்கள் பாதுகாவலுக்கு உள்ளனர், மாடிப்படி எங்கு இருக்கிறது, லிப்ட் எங்கு இருக்கிறது போன்ற தகவல்களை சைபர் குற்றவாளிகளால் எளிதில் பெற முடியும். அதன் மூலம் தங்கள் தாக்குதலுக்குத் திட்டமிட முடியும்.

உங்களுக்கும் உங்கள் மேனேஜருக்கும் நடுவில் நடக்கும் முட்டல் மோதல்களைப் பகிரவும் சமூக வலைதளங்கள் உகந்த இடங்கள் அல்ல. உங்கள் மேனேஜர் உடனான உங்கள் சண்டையை பற்றிய உங்கள் பதிவை உங்கள் மேனேஜர் பார்க்காவிட்டாலும், உங்கள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமையில் பொருமிக் கொண்டிருக்கும் உங்கள் பக்கத்து சீட்டு ஆசாமி உங்களுடன் சமூக வலைதளத்தில் நட்பாக இருந்துகொண்டே உங்களைப் பற்றிப் போட்டுக் கொடுத்து உங்கள் வேலைக்குச் சிக்கல் உண்டாக்க முடியும். இவற்றைத் தவிர்க்கச் சிறந்த வழி உங்கள் அலுவலக நண்பர்களை உங்கள் சமூக வலைதளக் கணக்கில் சேர்க்காமல் இருப்பதே. கொஞ்சம் கடினம்தான். ஆனால் செய்து பாருங்கள், ரொம்ப நிம்மதியாக உணருவீர்கள்.

தீவிரவாதம், குற்றச் செயல்கள் ஆகியவற்றை ஆதரித்துப் பதிவுகளை இடுவதும், அத்தகைய பதிவுகளை விரும்புவதும் உங்களை ஒரு குற்றவாளியாகச் சித்திரித்து கூண்டில் ஏற்றிவிடவும் வாய்ப்பு இருக்கிறது . சமீபத்தில் அண்ணாமலை பல்கலை மாணவர் ஒருவர் அவரின் முகநூல் பதிவுக்காகக் கைது செய்யப்பட்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். சமூக வலைதளங்களில் பதிவுகளை இடும்போதும், மற்றவர் இடும் பதிவுகளை விரும்பும்போதும் அது உங்கள் வேலைக்கும், மன நிம்மதிக்கும் வேட்டுவைக்காத மாதிரி பார்த்துக்கொள்ளுதல் நலம்.

4) அலுவலகத்தில் உங்கள் மேஜையில் அனைவரின் கண் பார்வைக்கும் படும்படி உங்களைப் பற்றியும் உங்கள் வேலை பற்றியுமான தகவல் குறிப்புகளை மேஜை மீது வைக்க வேண்டாம். உங்கள் பக்கத்து சீட்டு நபர், அலுவலகக் காவலாளி முதற்கொண்டு, கக்கூஸ் கழுவும் தொழிலாளி வரை உங்கள் மேஜையைக் கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை அறியும் வாய்ப்பும் மிக அதிகம். அதனால் நீங்கள் இல்லாத சமயங்களில் உங்கள் உடைமைகளை, தகவல் விவரங்களைப் பாதுகாப்பாக அலுவல மேஜையில் பூட்டி வையுங்கள்.

5) நீங்கள் பயன்படுத்தும் கடவுச் சொற்களை (passwords) உங்கள் மேஜை மீதோ, உங்கள் கணினியிலோ ஒட்டி வைக்காதீர்கள் . அது முகமறியா சைபர் குற்றவாளிகளின் கையில் எளிதாக சிக்கி உங்கள் கணினியை ஹேக் செய்ய உதவும். உங்கள் கடவுச் சொற்களை மற்றவர்களுடன் பகிருவதைத் தவிருங்கள். இந்த உலகத்தில் உறவாடிக் கெடுக்கும் நம்பிக்கை துரோகிகள் ரொம்பவே அதிகம். உங்கள் பக்கத்து சீட் நண்பன் உங்கள் பரம எதிரியாக இருக்கும் வாய்ப்புகள் ஏராளம். நண்பேன்டா என்று நட்புக்குக் கொடி பிடிப்பதும், கண்மூடித்தனமாக எல்லோரையும் நம்புவதும் உங்கள் இஷ்டம். நாம் கடந்து வந்த வரலாற்றில் நம்பியோர் முதுகில் குத்திய நயவஞ்சக எட்டப்பர்களும் ப்ரூட்டஸ்களும் ஏராளம் என்பதை நாம் அறிவோம்.

6) சிக்கலான எளிதில் யூகிக்க முடியாத கடவுச் சொற்களையே எப்போதும் பயன்படுத்தவும். நம்மில் பலர் 12345 , ABCD போன்ற யாரும் எளிதில் யூகிக்கக்கூடிய கடவுச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். நம் பிறந்த தேதி, நம் குடும்ப உறவினர்களின் பெயர் இது போன்ற எளிதில் அறியக்கூடிய விவரங்களை வைத்தே ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கடவுச் சொற்களை சாப்ட்வேர் நிரல்கள் மூலம் புதிதாக உருவாக்கவும், அதைப் பயன்படுத்தி உங்களின் ஆன்லைன் கணக்கை எளிதாக ஹேக் செய்யவும் சைபர் குற்றவாளிகளால் முடியும். அதனால் யாரும் யூகிக்க முடியாதபடி பல சொற்களின் முதல் எழுத்தைக் கொண்டும், பல தரப்பட்ட எண் மற்றும் ஆங்கில எழுத்துகளை இணைத்தும் கடினமான கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது உங்களை சைபர் குற்றவாளிகளிடமிருந்து காப்பாற்றும். எடுத்துக்காட்டுக்குக் கீழே உள்ளது போல முயற்சிக்கவும்:

My QUALIFICATION IS COMPUTER ENGINEERING FROM OXFORD UNIVERSITY IN 1997

மேற்கொண்ட வாக்கியத்தின் உள்ள அனைத்துச் சொற்களின் முதல் எழுத்துகளையும் தனியாக எடுக்கவும் – MQCEFOU1997 .. இப்படிப்பட்ட ஒரு கடவுச் சொல்லை யாராவது எளிதில் யூகிக்க முடியுமா? இப்படிச் சில உபாயங்களைக் கடைபிடிப்பதன் மூலம் நாம் நமது ஆன்லைன் நடவடிக்கைகளை சோஷியல் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

7) பொது இடங்களான ஹோட்டல், திரை அரங்கு, அலுவலக கேன்டீன் போன்ற இடங்களில் தொலைபேசியில் அலுவலக மற்றும் சொந்த விவரங்களை உரத்த குரலில் பேசுவதைத் தவிர்க்கவும். உங்கள் பக்கத்தில் இருக்கும் நபர் தாராளமாக ஒரு முகமறியா சைபர் குற்றவாளியாக இருக்கக்கூடும்.

மேற்கண்ட உபாயங்களைப் பின்பற்றுங்கள் நண்பர்களே… அது உங்களையும் உங்கள் மன நிம்மதியையும் சைபர் குற்றவாளிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும்.

தொடரும்…

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *