>கோடீஸ்வரர்களின் தேசம்!

public

இந்தியாவில் வறுமை ஒழிப்புக்கென நல்ல நலத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மிக மோசமான ஏற்றத் தாழ்வும் உள்ளது எனக் கூறுகிறார் ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழின் மும்பைப் பிரிவின் முன்னாள் ஆசிரியரும் பில்லினர் ராஜ் ( கோடீஸ்வரர்களின் தேசம்) என்ற நூலின் ஆசிரியருமான ஜேம்ஸ் கிராப்டிரி. மின்ட் நாளிதழில் வெளியான அவரின் நூலிருந்து சில பகுதிகளையும் அவர் அளித்த பேட்டியின் தமிழாக்கச் சுருக்கத்தை இங்கு அளிக்கிறோம்.

கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவில் தீவிரமான வறுமைக்குறைப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், பொருளாதாரத்தில் வசதி கூடும்போது அதிகமான ஊழலும் அதிகரித்தது. அது மட்டுமின்றி இந்தியாவில் மிக அதிகமான அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2002இல் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெறும் ஐந்து பேரைத்தான் குறிப்பிட்டது. 2018இல் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உள்ளது இந்தியா என்று பில்லினர் ராஜ்ஜில் குறிப்பிடுகிறார்.

**அம்பானியும் அதானியும் செல்வத்தையும் வேலைகளையும் அதிகரிக்கிறார்கள். இன்னொருபக்கம் கடுமையான ஏற்றத் தாழ்வும் அதிகரிக்கிறது. நாம் இந்தியாவில் நிலவும் இது போன்ற சமத்துவமின்மை மீது கவனம் செலுத்த வேண்டுமா,?**

இரண்டிற்குமிடையில், எந்த முரண்பாடும் இல்லை என நான் நினைக்கிறேன். இந்தியாவிலுள்ள பிரச்சினையே வறுமை குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும்போதே மிகக்கடுமையான ஏற்றத்தாழ்வும் நிலவியது என்பதுதான். உதாரணமாக முகேஷ் அம்பானியின் மாளிகை 100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச நிதியம் என்ற ஐஎம்எஃப்பின் அறிக்கை அல்லது தாமஸ் பிக்கெட்டியின் ஆய்வு அல்லது உலக ஏற்றத் தாழ்வு அறிக்கை ஆகிய அனைத்தும் இந்த ஒரே விஷயத்தைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவிலுள்ள ஏற்றத் தாழ்வு நிலையானது பிரேசில் அல்லது தென்னாப்பிரிக்காவுடன் போட்டி போடுவதாக உள்ளது. இது கிழக்காசியாவை விட மோசமாக உள்ளது. இதே நிலை இன்னும் 15 ஆண்டுகளுக்கு நீடித்தால் நிலைமை படுமோசமானதாகவும் ஆபத்தானதாகவும் மாறி விடும்.

**இடது சாரிகளைப் பொறுத்தவரை அடித்தளத்திலுள்ள மக்கள் குறித்தே அக்கறை கொள்கின்றனர். அவர்கள் ஏற்றத் தாழ்வில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்று உங்கள் நூலில் கூறியுள்ளீர்கள்?**

இந்தியாவில் நடக்கக்கூடிய மொத்த அறிவாளிகளின் விவாதங்களும் ஜெகதீஷ் பகவதிக்கும், அமர்த்தியா சென்னுக்கும் இடையே நடைபெறும் விவாதங்களில் இருவரும் ஏற்றத் தாழ்வு என்ற பிரச்சினையை விவாதத்தின் முன்பாகவோ மையப்பொருளாகவோ வைக்கவில்லை. சமத்துவமின்மை என்பது கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல பிரச்சினை. அவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காடு அதிலும் உயர்வானவர்கள் என்றால் 1 விழுக்காடுதான் உள்ளனர். ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களை வசதியானவர்களுடன் ஒப்பீட்டு அளவில் பார்க்கும்போது அவர்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றனர் என்பது தெரியவரும்.

ஏற்றத் தாழ்வு அதிகமான அளவில் உள்ள நாடுகளான லத்தீன் அமெரிக்க நாடுகள் நவீனமாவதும் வளருவதும் கடினமானதாகும். அவற்றில் நடுத்தர வருவாய் உள்ளவர்கள் அதிகம். நடுத்தர வருவாய் ஒரு வலையாகவும் பொறியாகவும் மக்களை முன்னேற விடாமல் தடுக்கிறது. ஆனால், இவற்றிலிருந்து தப்பித்த நாடுகளில் அதிகமான இயற்கை வளங்களான எண்ணெய் வளங்கள் போன்றவை இருந்துள்ளன. அந்த நாடுகளில் அனைவரையும் அரவணைத்து பொருளாதார ரீதியாக முன்னேற்றத்துக்குக் கூட்டிச்செல்லும் சமூகப் பொருளாதார மாதிரி (model) உள்ளது. ஆனால், அந்த மாதிரியை நீங்கள் பின்பற்ற தயாராக இல்லை.

**இந்தியா இதே போன்ற பாதையில் சென்றால் என்ன நடக்கும்? நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்களினால் எந்த பயன்களும் இல்லையா?**

சீர்திருத்தங்கள் கடினமானவை, சிக்கலானவை. அவற்றைப் பின்பற்றும்போது வெற்றியடைபவர்களும் இருப்பார்கள்; தோல்வியடைபவர்களும் இருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை சீர்திருத்தத்தால் தோல்வியடைந்தவர்கள் விவசாயிகள்தான். இந்தியாவைப்பொருத்தவரை சிறிய அளவில் செய்யப்படும் விவசாயமே எடுபடும்.

**பொருளாதார சமத்துவமின்மை தவிர்த்து இடங்களிலும் ஏற்றத் தாழ்வு நிலவுகிறதே. இது கூட்டாட்சி முறையில் பொருளாதாரம் மற்றும் கொள்கை முடிவெடுப்பதில் மாற்றங்களைக் கோருகிறதா? அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மூலமாக இதை மாற்ற முடியுமா?**

இந்தியாவில் அரசியலில் வடக்கு ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஆனால் பொருளாதாரத் துறையிலும், மக்கள்தொகையிலும் தெற்கும் மேற்கும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர் . அதே போல நகரத்திற்கும் கிராமங்களுக்கும் இடைவெளி நிலவுகிறது. கிராமங்களிலிருந்து மக்கள் பிழைப்புத்தேடி நகரங்களுக்குச் செல்வதும் அதிகரித்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த கூட்டாட்சி முறையில் கூடுதல் அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கலாம். இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக நகரங்களுக்கும் கிராமங்களுக்குமான ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நகரங்களின் வளர்ச்சியானது அதிகரிக்கும்போது கிராமங்கள் – நகரங்களுக்கிடையிலான இடைவெளியும் இட்டு நிரப்ப முடியாத அளவில் அதிகரிக்கும்.

**தேர்தல் என்று வரும்போது சமத்துவமின்மை ஊழலிருந்து வேறுபடுகிறதா?**

நான் அப்படி பார்க்கவில்லை. சமத்துவமின்மை என்பது உங்கள் முன்னேற்றத்துக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், உங்கள் குழந்தைக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைப்பது, தரமான பொதுச் சேவைகள், நீங்கள் நோய்வாய்ப்பட்டால் காப்பீடு போன்றவைதான். இவைதான் இங்கு முக்கிய கவனம் பெறுகின்றன. உதாரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலவசமாக காஸ் ஸ்டவ் இலவச சிலிண்டர் மற்றும் உங்கள் கடன்களை ரத்து செய்வது போன்ற திட்டங்களை அமல்படுத்தினர். இவை ஊழலைப் புறந்தள்ளி விடுகின்றன. எனவே தேர்தலைப் பொறுத்தவரை பல விஷயங்கள் வேலை செய்கின்றன.

**ஊழல் ஆட்சியை எப்படி பார்ப்பது? ஊழல் ஆட்சியின்போது தமிழகத்தில் வளர்ச்சி இருந்ததே? தமிழகம் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேறி இருந்ததே? இதை எப்படி பார்ப்பது?**

உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், வளர்ச்சியும் நுகர்வும் பெருகியது. அத்துடன் ஊழலும் பெருகுவது தவிர்க்க முடியாது. இன்னொருபுறம் சர்வாதிகார ஆட்சிகளில்தான் ஊழல் வளருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் பெருகியிருந்தது. அவர் சர்வாதிகார ஆட்சியாகத்தான் நடத்தினார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதில் வளர்ச்சி இல்லாமல் இல்லை. வளர்ச்சியின் ஒரு பகுதியாக ஊழலும் செயல்படும். அந்த வளர்ச்சியானது நுகர்வினாலும் பொது மக்கள் செலவழிப்பதனாலும் ஏற்படும். மோடியின் ஊழலுக்கான ஆதாரங்களும் அடுத்த வளர்ச்சியின்போது வெளியாகும்.

நன்றி – மின்ட், ஆகஸ்ட் – 25, 2018

தமிழில் – சேது ராமலிங்கம்�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *