அக்னிபத் திட்டம்: சென்னையில் வெடித்த போராட்டம்!

politics

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையிலும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள அக்னிபத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை, அதன்பிறகு தகுதியுடைய 25 சதவிகிதம் பேர் மட்டும் முப்படைகளில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர், மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

குறிப்பாக 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின் படி பணியில் சேர தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும், இளைஞர்களின் உயர் கல்வி பாதிக்கப்படும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படையில் ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 21ல் இருந்து 23ஆக உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் இந்த சலுகை அமல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த சலுகை இளைஞர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக அறிவிக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. எனினும் நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இன்று சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், “கோவை, வேலூர், மதுரை, திருவண்ணாமலை என பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் போராட்டத்துக்கு வந்துள்ளனர். ராணுவத்தில் தேர்வாகி தமிழகத்தில் கிட்டதட்ட 5000 பேர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு எந்த பதிலும் சொல்லாத மத்திய அரசு இன்று அக்னிபத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 4 வருடம் ராணுவத்துக்குச் சென்று வந்த பிறகு நாங்கள் என்ன செய்வது. மத்திய அரசு 10 லட்சம், 11 லட்சம் ரூபாய் தருகிறோம் என்கின்றது. அந்த பணம் யாருக்கு வேண்டும்?.

ஒரு நாள் செலக்‌ஷனுக்காக நாங்கள் நான்கு, ஐந்து வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறோம். பனிக் காலத்தில் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ஓடுவோம். தற்போது ராணுவத்துக்கு மருத்துவ, உடற் தகுதி அடிப்படையில் தேர்வாகி ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு அறிவித்தனர். அதன் பிறகு அடுத்தடுத்து ஒத்தி வைத்தனர்.

இன்று புதிய திட்டத்தைக் கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக உடற் தகுதி, மருத்துவ தகுதி பெற்ற நாங்கள் என்ன செய்வது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 23 வயதில் தேர்வான நபருக்கு இன்று வயது 25. அப்படியானால் 23 வயது தளர்வு அளித்து எங்களுக்கு என்ன பயன். எங்கள் வாழ்க்கையை ஏன் அழித்தீர்கள். இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மாணவர்களின் போராட்டத்தால் போர் நினைவுச் சின்னம் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்பவர்களுக்கு அசாம் ரைஃபில் படை, துணை ராணுவப் படையில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *