~அயோத்தியா மண்டப விவகாரம்: பாஜக போராட்டம் – கைது!

politics

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இன்று கைப்பற்ற வந்த நிலையில் அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மண்டபத்தை ராம சமாஜம் என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி அயோத்தியா மண்டபம் 2014ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழ் வந்தது.

இதனை எதிர்த்து ராம சமாஜம் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அயோத்தியா மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்படுவதாகவும், பொதுமக்கள் அதிக அளவில் வருவதாகவும், இந்து அறநிலையத் துறை சட்டத்தின் படி சிலை வைத்து வழிபாடு நடைபெறுவதால் இந்த மண்டபம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் ராம சமாஜம் சார்பில் தொடரப்பட்ட மனு நிலைக்கத்தக்கதல்ல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அயோத்தியா மண்டபத்தைப் பார்வையிட வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் தலைமையில் பாஜகவினர் திரளாகப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சட்டவிரோதமாகக் கைப்பற்ற வந்ததாகக் கூறி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். தாசில்தாரை உள்ளே அனுமதிக்காதீர்கள், ஷோ காஸ் நோட்டீசை கொடுங்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் உமா ஆனந்தன்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் உதவியுடன் கோயில் கேட் திறக்கப்பட்டு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளே சென்று கோயிலைப் பார்வையிட்டனர்.

கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏறிய பிறகு, காவல்துறையினருக்கு எதிராக உமா ஆனந்தன் குரல் எழுப்பினார். காவல்துறை ஒழிக, இவர்களுக்கு ராமர் நிச்சயமாக பாடம் புகட்டுவார் என்று கூறினார்.

வினோஜ் பி. செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் ராம ஜென்ம பூமியான அயோத்தியை மீட்டவர்கள் என்பதை இந்த இந்து விரோத திமுக அரசுக்கு நினைவுபடுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே அயோத்தியா மண்டபம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடு குற்றவியல் அத்துமீறல் என்று பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதிலும் கோவிலில் கதவை இடித்துச் சேதப்படுத்திக் கொண்டிருப்பது காட்டுமிராண்டித்தனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *