மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஊழல்வாதியா? அறப்போர் கேள்வி!

politics

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பவர் ஏற்கனவே மின்சார நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பவர் என்று கூறி இந்த நியமனத்துக்கு எதிராக முதல்வருக்கு புகார் அனுப்பி உள்ளது அறப்போர் இயக்கம்.

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், மின்சார வாரிய தலைவரும் இணைந்துதான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பார்கள்.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் செய்தியில்…
‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார கட்டணங்களை முடிவு செய்யும் ஆணையமாகவும் மின்சார வாரியத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படும் சட்ட பிரச்சனைகளுக்கு வழக்கின் மூலம் தீர்வு கண்டறியும் ஆணையமாகவும் செயல்படுகிறது. இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஒரு சிவில் நீதிபதி அதிகாரங்களுடன் செயல்பட சட்ட அதிகாரங்கள் உண்டு.ஒரு தலைமை உறுப்பினரும் இரு உறுப்பினர்களும் இந்த ஆணையத்தில் இருப்பார்கள்.

கடந்த மாதம் தமிழக அரசு ஜரார்ட் கிஷோர் என்னும் நபரை உறுப்பினராக நியமனம் செய்தது. மின்சார சட்டம் 2003 பிரிவு 85(5) படி தேர்ந்தெடுக்கப்படும் நபர் நிதி ஆதாய அல்லது மற்ற முரண் இல்லாதவராகவும் ஆணைய நலனுக்கு முரண் இல்லாதவராகவும் (Conflict of Interest) இருக்க வேண்டும். மேலும் பிரிவு 84(1) படி கடந்த காலத்தில் நேர்மையுடன் இயங்கிய ஒருவராக இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது நியமிக்கப்பட்ட ஜராரட் கிஷோர் மின்சார வாரியம் மின்சாரம் கொள்முதல் செய்யும் Ind Bharat Power Gencom Ltd, Ind Bharat Thermal Power Ltd and Arkay Energy (Rameswaram) Ltd போன்ற Ind Bharat குழு நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சட்ட மற்றும் வணிக பிரிவின் தலைவராக பணி புரிந்தவர்.

இந்த நிறுவனங்களின் 7 வழக்குகள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் விசாரணையில் உள்ளது. கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் நம் மின்சார வாரியத்திடம் நஷ்ட ஈடு கேட்டு இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் சில வழக்குகளில் ஜரார்ட் கிஷோர் தான் நிறுவனத்தின் சார்பில் ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தற்பொழுது அந்த வழக்குகளுக்கு அவரே நீதிபதி.

19 ஜனவரி இந்த நிறுவனம் ரூ 128 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு விசாரணையின் பொழுது தனக்கு Conflict of Interest உள்ளது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஜனவரி 25ஆம் தேதி நடந்த நிறுவனத்தின் வழக்குகளில் அவர் விசாரணை நடத்தி உள்ளார். இது மின்சார சட்ட பிரிவு 85(5) இன் படி சட்ட விரோதம்.

மேலும் ஜரார்டு கிஷோர் மற்றும் அவர் தலைவராக வேலை பார்த்த இன்ட் பாரத் நிறுவனங்கள் மோசடிக்கு பெயர் போனவை. மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் இன்ட் பாரத் நிறுவனங்கள் ரூ 1212 கோடி நஷ்ட ஈடு கேட்டு மின்சார வாரியத்திற்கு எதிராக தாக்கல் செய்த 3 வழக்குகளில் ரூ 12 கோடி முன்கட்டணம் கட்டுவதற்கு பதில் வெறும் ரூ 10000 கட்டி மோசடி செய்தார் ஜரார்டு கிஷோர் மற்றும் அவரது நிறுவனம்.

இதை அறப்போர் இயக்கம் 2019 இல் வெளியே கொண்டு வந்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தது. ஒழுங்குமுறை ஆணையம் உடனே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது. ஆனால் இன்று வரை அந்த 12 கோடி வசூல் செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு துறை இது பற்றி விசாரணை செய்து வருகிறது.

மேலும் சி.பி.ஐ இன்ட் பாரத் நிறுவனங்கள் மீது ரூ 947 கோடி கடன் மோசடிக்காக 2021 இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒருவரை நேர்மையானவர் என்று தற்பொழுது தேர்வு செய்துள்ளது அபத்தம். இது மின்சார சட்டம் பிரிவு 84(1) ஐ மீறும் சட்ட விரோத செயல்.

மின்சார வாரியம் ஏற்கனவே ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டினால் பெரும் கடனில் உள்ளது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சட்டரீதியான மக்கள் மற்றும் மின்சார வாரிய நலனில் செயல்படாமல் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டால், இது மேலும் மின்சார துறையை பாழுங்கிணற்றில் தள்ளும். இந்த நியமனத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் முதல்வர் மற்றும் செயலர்களுக்கு புகார் அனுப்பி உள்ளது” என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராம் வெங்கடேசன்.

சாலை போடுவதில் நடந்து வரும் முறைகேடுகள் குறித்து ஏற்கனவே அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தார். அதுபோல அறப்போர் இயக்கத்தின் இந்த முக்கியமான புகாரின் பேரில் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *