மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

ராட்சசி: கொண்டாடிய மலேசிய அமைச்சர்!

ராட்சசி: கொண்டாடிய மலேசிய அமைச்சர்!

ஜோதிகாவின் ராட்சசி படத்தைப் பார்த்த மலேசிய நாட்டின் கல்வி துறை அமைச்சர் மஸ்லீ மாலிக் பாராட்டியுள்ளார்.

இந்த வருடம் ஜூலை மாதம் 4 ஆம் தேதி ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ராட்சசி. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்த இப்படத்தை கெளதம் ராஜ் இயக்கினார். அரசுப் பள்ளிகளின் நிலையை பேசு பொருளாகக் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் அரசு பள்ளி ஆசிரியர்களின் எதிர்ப்பினைப் பெற்றது. ஆயினும், இப்படம் கல்வி சார்ந்த விவாதங்களை மீண்டும் ஒரு முறை தமிழ் சமூகத்தில் ஒலிக்கச் செய்தது.

ராட்சசி படத்தைப் பார்த்த மலேசியா நாட்டின் கல்வி அமைச்சர் இப்படம் பற்றி சிலாகித்து தனது சமூக வலைதள பக்கங்களில் செப்டம்பர் 2ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதில், ''ராட்சசி படத்தை அரசு அதிகாரிகளுடன் பார்த்தேன். இந்த படத்தில் கீதா ராணி(ஜோதிகா) சிறந்த சூப்பர் ஹீரோவாக தோன்றுகிறார். பெரிய மாற்றங்கள் சாத்தியம் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

நாங்கள் என்ன திட்டங்களும் மாற்றங்களும் கொண்டுவரலாம் என்று இருந்தோமோ அதை ராட்சசி பேசுகிறது. உதாரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்த வேண்டும். மேலும் மாணவர்கள் இடைநிற்றலை பற்றியும் இப்படம் பேசியிருக்கிறது. மேலும் கீதா ராணி எல்லா மாணவர்களின் பெற்றோர்களையும் பார்த்து பேசுகிறார். மாணவர்களின் கல்வி சார்ந்து பெற்றோர்கள் செயல்பட அமைப்பை உருவாக்குகிறார்.எல்லா பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் இந்த படத்தை பரிந்துரைக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ராட்சசி படத்தைப் பார்த்து மனம் விட்டுப் பாராட்டிய மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதிகா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று(செப்டம்பர் 5) மாலை அதனை பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்திய படமொன்றை பார்க்க நேரம் ஒதுக்கியதற்கும் அது குறித்த தங்கள் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி. கல்வி அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் விரும்பியதால் தான் உங்களால் ராட்சசிக்கு நேரம் ஒதுக்க முடிந்தது. எங்கள் படக்குழு உங்களது பதிவால் நெகிழ்ச்சி அடைந்துள்ளது. கல்வி அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது தான் எங்களது தூய்மையான் நோக்கமும்.

ராட்சசி படத்தை பார்த்த இந்திய கல்வித் துறை அமைச்சரும்(ரமேஷ் போக்கிரியால்) கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளார். இதனால் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

ராட்சசி படம் குறித்த உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் உத்வேகத்திற்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

தமிழ் படமொன்று இந்திய கல்வி முறையிலும், மலேசிய கல்வி முறையிலும் ஆரோக்கியமான விவாதங்களையும் முன்னெடுப்புகளையும் எதிரொலிப்பது தமிழ் சினிமா கலைஞர்களையும் ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon