மிக விரைவில் இந்தியாவிலுள்ள 50 சதவிகித ஏடிஎம்கள் மூடப்படும் என்று தெரிய வந்துள்ளது.
தற்போது இந்தியாவில் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் ஏடிஎம்கள் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1 லட்சம் ஏடிஎம்கள் வங்கிகளுக்குச் சொந்தமல்லாத, தற்காலிக இடங்களில் இயங்கி வருகின்றன. வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் மூலமாக, சுமார் 15,000க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை விரைவில் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது ஏடிஎம் தொழிற்துறை கூட்டமைப்பு (CAMi). 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதனால் நகரங்கள், கிராமங்கள் என்று அனைத்து பகுதிகளுமே பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 50 சதவிகித ஏடிஎம்கள் இந்த நடவடிக்கையின் கீழ் மூடப்படும்.
“பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் மானியங்களைப் பெறுபவர்கள் ஏடிஎம்களின் மூலமாகப் பலன் பெற்று வந்தனர். இந்த நடவடிக்கையினால், அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏடிஎம்களில் வரிசையாக நின்ற நிலைமை, மீண்டும் நகரங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார் ஏடிஎம் தொழிற்துறை கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர்.
ஏடிஎம்களில் வன்பொருள், மென்பொருள் மேம்படுத்துதல், பண மேலாண்மை தரத்தை கட்டாயமாக்குதல், பணப் பேழையை இடம் மாற்றுதல் போன்றவை குறித்த வழிகாட்டுதல்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகளால் பெருமளவில் வேலையிழப்பு பிரச்சினைகள் ஏற்படுமென்றும், பொருளாதாரத்தில் நிதிச் சீரழிவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.�,