ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டு பிப்ரவரி 2-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
இந்தநிலையில், சம்பாய் சோரன் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது.
81 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சம்பாய் சோரன் தலைமையிலான அரசுக்கு 47 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 27 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன்மூலம் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார்.
அரசியலை விட்டு விலகத் தயார்!
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதனையடுத்து ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இன்று ஹேமந்த் சோரன் வருகை தந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது அவர் பேசும்போது,
“ஜனவரி 31-ஆம் தேதி இரவு நாட்டிலேயே முதல் முறையாக, ஒரு முதல்வர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த கைது நடவடிக்கையில் ராஜ்பவனுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.
என்னை சிறையில் அடைத்து வெற்றி பெற முடியும் என்று அவர்கள் நினைத்தால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்கள்.
8.5 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டில் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்களை காட்டுங்கள். என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்” என்று ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தல் எப்போது? – அண்ணாமலை தகவல்!
எச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு!
அரசம்பட்டி விதையா? ஆந்திரா விதையா?: முதல்வரை சந்திக்கும் தென்னை விவசாயிகள்!