ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 5) தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியபோது, “பிப்ரவரி 29-க்கு பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நமக்கான காலமும் நேரமும் மிகவும் குறைவாக உள்ளது. நாம் அனைவரும் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம்.
கடந்த 32 மாத கால திமுக ஆட்சியில் பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலம் 183 தொகுதிகளில் பிரதமரின் சாதனைகளை எடுத்துரைத்துள்ளோம்.
அனைத்து தரப்பட்ட மக்களையும் இந்த யாத்திரையில் நாம் சந்தித்திருக்கிறோம். என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. களம் எப்படி மாறியிருக்கிறது என்று நமக்கு தெரியும். 2024-ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்.
தமிழக மக்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இங்குள்ள ஆட்சியாளர்கள் அனைவரும் துதிபாடக்கூடிய ஆட்சியாளர்களாக உள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரே பிரதமர் வேட்பாளர் மோடி மட்டும் தான். 400 எம்.பி-க்களுக்கு மேல் பெற்று மீண்டும் நாம் ஆட்சியமைக்க வேண்டும். அடுத்த 75 நாட்களுக்கு நமக்கு எதுவும் முக்கியமில்லை.
பாஜகவை வெற்றி பெற வைப்பது மட்டுமே நமது நோக்கம். இதுபோன்றதொரு சூழல் நமக்கு இனியும் அமையப்போவதில்லை என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜி.வி.பிரகாஷ் 25வது படத்தின் ஷூட்டிங் ஓவர்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம்: சேகர்பாபு அறிவிப்பு!