உக்கிரத்தை ஏற்படுத்திய ருத்ரதாண்டவம் மோகன்ஜீ

entertainment

தமிழ் சினிமாவில் கதாநாயகன் ரசிகர்களுக்கு இடையில் மோதல் நடப்பது எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் முதல் இன்றுவரை தொடர்கிறது

இயக்குநர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் கருத்தியல் ரீதியாக மோதுவது தமிழ்சினிமாவுக்கு புதுசு. இவர்கள் மோதலில் ஆபாசம், வன்முறை, வக்கிரம், ஜாதியம், மதம், வன்மம் எல்லாம் இருக்கிறது. ஆனால் நேரடியாக எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்களை போன்று தியேட்டரில் சண்டைபோட்டு ரத்தக்களறியாவது இல்லை.

‘வின்னர் கைபுள்ள வடிவேலு கணக்கா இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது’ என்று எழுதப்படாத ஒப்பந்தத்துடன் 2019 ல் வெளியான திரெளபதி படம் தொடங்கி இன்று வரை அவ்வப்போது கருத்து மோதலை தொடர்கிறார்கள்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் வின்னர் படத்தில் தென்னை மரத்தில் இருந்து வடிவேலு தலையில் தேங்காய் விழுந்தது போன்று ருத்ரதாண்டவம் படத்தை தடைசெய்ய வேண்டும், அதன் இயக்குநர் மோகன் ஜீயை கைது செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் சார்பில் சென்னையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இது நம்ம லிஸ்டில் இல்லையே என்று மோகன் ஜீ ஆதரவாளர்களும் அவர்களின் எதிர்பாளர்களான இயக்குநர் ரஞ்சித் ஆதரவாளர்களும் ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் 1 வெளியிடப்பட இருக்கும் ருத்ரதாண்டவம் அப்படி என்ன சர்ச்சைக்குரிய படமா? பரபரப்பான அரசியலை பேசுகிற படமா? ஜாதி- மதத்தை எதிர்க்கிற படமா என்கிற கேள்விகளோடு கோடம்பாக்கத்தை வலம் வந்தபோது வந்து விழுந்த தகவல்கள்….

“இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950ல் இயற்றப்பட்ட பொழுது, இந்துமதத்தில் இருந்த தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சில சட்டங்கள் இயற்றப்பட்டன, சாதிய வன்கொடுமை சட்டம் என அழைக்கப்படும் சட்டம்தான் அது. சாதி கொடுமை அதிகமாக இருக்கும் இந்து மதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டம் இது. இந்துமதத்தில் இருந்து அவர்கள் மதம் மாறினால்அந்த சட்ட பாதுகாப்பை அவர்கள் பயன்படுத்த முடியாது என்கிறது வன்கொடுமை தடுப்பு சட்டம்.

அதே நேரம் இந்து மதத்தில் இருந்து பெளத்தம், சீக்கியம் என மதம் மாறினால் அச்சட்டம் செல்லும். இச்சட்டம் இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு சட்டம் என்றாலும் அதில் இருந்து பலர் மதம் மாற இதுவே காரணமாயிற்று..

இச்சட்டம் 1950ல் அமலுக்கு வந்தாலும் 1989ல் ஒருமுறை திருத்தப்பட்டது. பின் பாஜக ஆட்சியில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன‌. அதாவது அச்சட்டம் சில இடங்களில் தவறாக பயன்படுத்தபட்டது. உதாரணமாக ஒரு மேல் சாதிக்காரர் ஒருவர் தாழ்த்தப்பட்டவரை நோக்கி எனக்கு கொஞ்சம் வழிவிடு” என சாலையிலோ, “கொஞ்சம் காத்திரு” என கடையிலோ சொன்னால் கூட அச்சட்டம் பாயும் இதனால் திருத்தங்கள் செய்யப்பட்டன,

அதற்கு எதிர்ப்பும் வந்தது, ஆதரவும் வந்தது. இந்த சட்டம் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது, அதன் காரணமாக நியாயமான அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் எப்படி பாதிப்புக்குள்ளாகின்றனர். தவறான அரசியல் கட்சி தலைவர்கள், சாதி, மத அமைப்புகளின் தலைவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தங்களின் வளர்ச்சிக்காக எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தோலுரிப்பதே ருத்ரதாண்டவம் படத்தின் பிரதான திரைக் கதையோட்டம் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.

திரெளபதி படத்தில் வட மாவட்டம், கொங்கு மண்டலங்களில் சாதி மறுப்பு திருமணம் என்பதன் பெயரால், காதலின் பெயரால் நடைபெறும் திருமணங்கள் பணம், சொத்தை மையமாக கொண்டு நடத்தப்படும் நாடக காதல் திருமணம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார் இயக்குநர் மோகன்ஜீ.

இந்தப் படம் தணிக்கைக்கு விண்ணப்பிக்கும் முன்னரே தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அவைகளை கடந்து 16 கட்டுக்களுடன் திரெளபதி தமிழகத்தில் மட்டும் 315 திரைகளில் வெளியானது. சுமார் 70 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டும் சுமார் 17கோடி ரூபாய் வசூல் செய்தது.

தமிழ் படங்களில் முதலீட்டை போன்று 20 மடங்கு வசூல் ஆன படம் இதுவரை இல்லை. வண்ணாரப்பேட்டை, திரெளபதியை தொடர்ந்து மோகன் ஜீ இயக்கி தயாரித்து இருக்கும் படம் ருத்ரதாண்டவம். திரெளபதியில் மாநில அரசியலையும், சாதி அரசியலையும் கதைகளமாக வைத்திருந்த இயக்குநர், ருத்ரதாண்டவம் படத்தில் அகில இந்திய அரசியல், மத அரசியல், சாதிய அரசியலை மைய கருப்பொருளாக கொண்டுள்ளார் என்பதை படத்தின் டிரைலர் உறுதிப்படுத்திவிட்டது.

அதனால்தான் படத்திற்கான எதிர்ப்பு, புகார் மனு வடிவில் காவல் நிலையம் சென்றிருக்கிறது ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் கெளதம் மேனன், நடிகர் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிரெய்லரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டப் பிரிவில் ஆதரவாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவு தவறுதலாக, துஷ்பிரயோகம் செய்யப்படுவதை சொல்வதாக காட்சிகள் அமைந்திருந்தன.

இதையடுத்து இப்படத்திற்கு எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,‘ருத்ர தாண்டவம்’ படத்தை தடை செய்யக் கோரி காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்த சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் இது குறித்து போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ‘ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குர் மோகன் ஜீ பதிவு செய்திருக்கிறார். மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள அந்த படத்தை தடை செய்வதோடு, இயக்குநர் மோகன்ஜீ மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ‘திரெளபதி’ படத்திற்கும் பிரச்சினைகள் எழுந்தன. ஆணவக் கொலைகள் அத்தனையும் உண்மையல்ல. அதில் பொய்யும் கலந்திருக்கிறது என்ற கருத்து தொனிக்க படத்தின் கதை அமைந்திருந்ததால் இப்போது வரையிலும் அத்திரைப்படம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது

1978ம் ஆண்டு நடிகர் வி.கே.ராமசாமி சிவனாக நடித்து வெளியான படம் ருத்ரதாண்டவம். அவருடன் ராதாரவி, எம்.ஆர்.ஆர். வாசு ஆகியோர் நடித்திருந்தார்கள். கதைப்படி நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை சிவபெருமான் பாதிரியார் ஒருவருக்கு ஊர் சுற்றி காண்பிப்பார். அதே பெயரில் தற்போது தயாராகியுள்ள படத்திற்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்றால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திலும் ராதாரவி நடித்திருக்கின்றார்.

திரௌபதி படம் வெளிவந்தபின் மோகன் ஜீ மற்றும் படத்தில் சொல்லப்பட்ட கதைக் கருவுக்காக ஆதரவு தளம் பலமாக உருவானது. அதன் காரணமாக இவர் இயக்கும் அடுத்த படம் அதன் கதைகளம் என்னவாக இருக்கும் என்பதே மோகன்ஜீ ஆதரவுதளம், எதிர்ப்பு தளம், சினிமாவை நேசிக்கும், ஆய்வு செய்யக்கூடிய முத்தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதற்கான விடையை 50 லட்சம் பார்வையாளர்களை கடந்திருக்கும் ருத்ரதாண்டவம் படத்தின் டிரைலர் மூலம் மோகன்ஜீ பதில் கூறியிருக்கிறார். சில லட்சம் பார்வையாளர்களை ட்ரைலர் கடந்து விட்டாலே ஊடகங்களும், சினிமாக்காரர்களும் அப்படத்தை கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் மோகன் ஜீ இயக்கிய திரௌபதி டிரைலர் பல நாட்கள் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதே போன்று ருத்ர தாண்டவமும் இருந்தது என்றாலும் தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞர்கள், இயக்குநர்கள் ஊடகங்கள் இதனை வெளிப்படையாக பாராட்டவும், ஊக்குவிக்கவும் தயாராக இல்லை. ‘ரஞ்சித் படம் என்றால் பாராட்டுகிறீர்கள் மோகன்ஜீயை பாராட்ட மாட்டீர்களா’ என ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்

அதற்கு பதில்கூறிய மோகன் ஜீ, ‘வாழ்த்த வேண்டியவர்கள் தனிப்பட்ட முறையில் வாழ்த்திவிட்டார்கள்’ என கூறியிருந்தார்.

இதுசம்பந்தமாக அவரது வட்டாரத்தில் பேசியபோது..

“ட்ரைலர் வெளியானவுடன் ஆதரவு எதிர்ப்பு என்பது சமபலத்திலேயே இருந்து வருகிறது. இது வழக்கமான சினிமா ரசிகர்கள் ஆதரவு என்பதை கடந்து இந்த திரைப்படத்தின் அனைத்து நிகழ்வுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. படத்தை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த போது. எந்த இடையூறும் இன்றி படம் வெளிவரும்” என்றார்.

கைலசாவில் இருந்து நித்தியானந்தா ருத்ரதாண்டவம் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வெளியாகிறது அப்படி என்றால் இது ஆன்மீக படமா, அரசியல் படமா என்கிற குழப்பமே பொதுவெளியில் வாழ்த்து தெரிவிக்க தயக்கத்தை உருவாக்கியது என்கின்றனர்.

படத்தின் கதைகளம் பற்றி தணிக்கை வட்டாரத்தில் விசாரித்தபோது ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் காவல்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை இவைகளை கடந்துபோகாமல் வாழ்ந்திருக்க முடியாது அது போன்று தான் “ருத்ரதாண்டவம்” படத்தின் திரைக்கதையும் இருக்கிறது.

பாதுகாப்புக்காகவும், பழமை மாறாத பக்திக்காகவும் வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பு, சலுகைகளை தவறாக பயன்படுத்தியதன் விளைவை ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் சந்தித்திருப்பான் அது தான் “ருத்ர தாண்டவம்”

இன்றைய இந்திய அரசியலில் ஜாதியும், மதமும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதற்கு ஆதரவாக அரசியல் அதிகாரம் எண்ணெய் ஊற்றி ஆதாயத்தை அறுவடை செய்கிறது. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள், இதனை சமரசமின்றி திரையில் பதிவு செய்திருக்கின்றார் இயக்குநர் மோகன்ஜீ என்கின்றனர்.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *