தமிழ் சினிமாவில் வியாபாரமும், அதிகமான ரசிகர்களையும் கொண்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களை தூசி தட்டி மறு வெளியீடு செய்யும் காலம் இது. ஏனென்றால் இதற்கு ஒரு படத்தை தயாரிப்பதற்கான முதலீடு தேவை இல்லை. ரிலீஸ் செய்வதற்கு டிஜிட்டல் கட்டணம், போஸ்டர் செலவு என சுமார் 50 லட்ச ரூபாய் இருந்தால் போதுமானது.
வெளியாகும் படத்தின் கதாநாயகன் ரசிகர்களே சமூக வலைதளங்களில் படத்தை புரமோஷன் செய்து விடுவார்கள். நாளிதழ், தொலைக்காட்சி விளம்பர செலவு இல்லை.
விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு பிரிண்ட் வடிவத்தில் வெளியான கில்லி நவீன தொழில்நுட்பத்தில் கடந்த வாரம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.
மறு வெளியீட்டில் கோடிக்கணக்கில் கில்லி வசூலை குவித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
This is #Ghilli Day 8 but the vibe is just lit here at KG cinemas CBE🔥🔥
Idhan da re-release uh 🔥@actorvijay 🛐🔥 pic.twitter.com/qGwMKGWMjc
— DK (@itsDKarthick) April 27, 2024
படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திடம் வசூல் பற்றி கேட்ட போது படத்தை வெளியிட்ட விநியோகஸ்தரே எம்புட்டு வசூல் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் 10 கோடி 16 கோடி என செய்தி வெளியிடுவதை படிக்கையில் சிரிப்புதான் வருகிறது. அம்புட்டு வசூல் இல்லை ஆனால் மறுவெளியீட்டில் ஒரு படத்திற்கு இந்த அளவு வரவேற்பும், வசூலும் இதுவரை வேறுபடங்களுக்கு இல்லை என கூறியிருந்தார்.
கில்லிக்கு போட்டியாக மங்காத்தா மே 1 வெளியாகும் என இணையத்தில் தீவீரமாக செய்தி வெளியானது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் துரைதயாநிதி வட்டாரத்தில் விசாரித்த போது உடல் நலக்குறைவால் சிகிச்சை, ஓய்வு என்று இருந்து வரும் அவர் சினிமாவை பற்றி சிந்திக்க நேரமில்லை. தவறான செய்தி என்றனர்.
அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா மே 1 வருகிறது என இணைய தளங்களில் செய்தி வெளியானது. பில்லா 1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் அதே பெயரில் அஜித்குமார், நயன்தாரா நடிப்பில் வெளியான தமிழ் ரீமேக் ஆகும். இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பாக சேலம் ஏரியாவில் 11 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புதிய படங்கள் இல்லாத நாட்களில் திரையிடப்பட்டுள்ளது என்றார் தீனா படத்தின் மறுவெளியீட்டு சேலம் விநியோகஸ்தர் மோகன்.
மங்காத்தா, பில்லா இரண்டும் இல்லை என்பதால் தீனா படத்தை தமிழ்நாடு, கேரளாவில் மறுவெளியீடு செய்ய உள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநராக அறிமுகமான இப்படத்தில் அஜீத்குமார், லைலா, சுரேஷ்கோபி ஆகியோர் நடித்துள்ள தீனா 2001 ல் வெளியானது.
தீனா மறு வெளியீடு தயாரிப்பாளரின் நேரடி வெளியீடாக இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள 9 விநியோக மாவட்டங்களில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் வெளியாகிறது.
கில்லி வசூலை தீனா முறியடிக்குமா என விநியோகஸ்தர்களிடம் கேட்ட போது, “தமிழ்நாட்டில் சுமார் 6 கோடி வரை கில்லி மறுவெளியீடு மூலம் கிடைத்துள்ளது.
அதே போன்று தீனாவும் வசூலிக்கும் என எதிர்பார்க்கின்றோம். எம்புட்டு வந்தாலும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வு ஊதியம் போன்று இது கூடுதல் உபரி வருவாய்” என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமானுஜம்
’யானை பசிக்கு சோளப்பொரியா?’ : மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
நடிப்பு அரக்கன் ஆக மாறிய கவின்… ஸ்டார் டிரைலர் எப்படி?